தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குழந்தைப் பாடல்கள்

  • 3. 2. குழந்தைப் பாடல்கள்

    குழந்தைகளைப் பராமரித்து வளர்க்கின்ற சூழலில் குழந்தைகள் பாடல்கள் பல நாட்டுப்புறப் பாடல்களாக மக்களிடத்தில் வழங்கிவருகின்றன. குறிப்பாகத் தாலாட்டுப் பாடல்கள், குழந்தைகளின் வளர்கின்ற பல்வேறு நிலையில் பாடுகின்ற பாடல்கள் ஆகியவை இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளன.

    3.2.1 தாலாட்டுப் பாடல்கள்

    குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும், தூங்கவைக்கவும், பெண்களால் பாடப்படும் பாடல்கள் தாலாட்டுப் பாடல்கள் என்று சுட்டப்படுகிறது. ‘தால்’ என்றால் நாக்கு என்றும் நாக்கினை ஆட்டி ரா ரா ரா ரா, லு லு லு லு என்று தொடங்கி பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். மக்கள் வழக்கில் ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று தாலாட்டுப் பலவாறாகச் சுட்டப்படுகின்றது. பாடலின் தொடக்கத்தில் இடம் பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு சுட்டப்படுகின்றது.

    காட்சி

    குழந்தையின் தாய்மட்டுமல்லாது குழந்தையின் பாட்டி, அத்தை, சகோதரி போன்ற உறவினர்களும் தாலாட்டுப் பாடுவர். பெண்கள் இலக்கியமாகத் திகழும் தாலாட்டினை ஆண்களும் பாடுவதை அருகிக் காணலாம். நெடுங்காலமாக எழுத்திலக்கியப் புலவர்களைக் கவர்ந்து வந்துள்ள இந்த இலக்கிய வகை எழுத்திலக்கியமாகவும் எழுதப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு தாலாட்டுப் பாடல் நூல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய பாடல்கள் ஓரளவு படித்தவர்களால் பாடப்படும் போது அவை மக்களிடையே பரவுகின்றன. எனவே இன்றைய நிலையில் மக்களிடையே உள்ள நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் தாலாட்டுப் பாடல்களே எழுத்திலக்கியத்தின் தாக்கம் மிகுதியாகப் பெற்ற இலக்கியமாகத் திகழ்கின்றது. தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சாதி மக்களிடமும் வழக்கத்தில் உள்ளன என்பது இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். இனி, தாலாட்டுப் பாடல்களுக்கு ஒரு சில சான்றுகள் காணலாம்.

    நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டு இலக்கிய வடிவம் பொருண்மையால் சற்று மாறுபட்டுக் காணப்படும். ஏனைய வடிவங்கள் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் கூற, தாலாட்டுப் பாடல்கள் இயல்புக்கு மாறான அதீதக் கற்பனையுடன் அமைந்திருக்கும். குழந்தையைப் பற்றிய தாயின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் இதில் வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் தாய் தன் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறாள். குடும்ப உறவுகளுக்கிடையே அவளுக்குள்ள உறவுகளும் தாலாட்டில் வெளிப்படுவதுண்டு. சான்றாகப் பின்வரும் தாலாட்டினைக் காணலாம்.

     

    தாலாட்டுச் சான்று 1:

    ஆராரோ ஆரரிரோ
    ஆரடிச்சா ஏனழுதாய்
    அடிச்சவரை சொல்லியழு
    ஆக்கினைகள் சொல்லிடுறேன்
    தொட்டாரைச் சொல்லியழு
    தொழு விலங்கு போட்டுடுறேன்
    அத்தை அடிச்சாளோ
    அன்னமிட்ட கையாலே
    மாமி அடிச்சாளோ
    மருந்து போடும் கையாலே
    அண்ணன் அடிச்சானோ
    அல்லிப்பூ தண்டாலே
    மாமா அடிச்சானோ
    மல்லிகைப்பூச் செண்டாலே

     

    தாலாட்டுப் பாடல்களில் தாய்மாமனின் புகழ் மிகுதியாய்ப் பேசப்படும். குழந்தை பிறந்தது முதல் அதனுடைய ஒவ்வொரு கட்டத்திலும் சீர் செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்யும் தாய்மாமனைப் பாராட்டிப் புகழும் போக்கினைத் தாலாட்டுப் பாடல்களில் காணமுடியும். பெண்களைப் பொறுத்தவரை தங்களின் தாய்வீட்டுப் பெருமை பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். இத்தகைய மனப்போக்கு தாலாட்டுப் பாடல்களில் வெளிப்படும். மேற்காட்டப்பட்ட தாலாட்டிலுங் கூட அத்தை, மாமி ஆகியோர் அன்னமிட்ட கையாலும், மருந்து போட்ட கையாலும் குழந்தையை அடிப்பதாகக் கூறும் தாய் மல்லிகைப்பூச் செண்டால் மாமா அடிப்பதாகக் கூறுவதைக் காணமுடிகிறது.

    தாய்மாமா தன் குழந்தைக்கு என்னென்ன சீர்கள் செய்வான் என்பதைப் பின்வரும் தாலாட்டு மிக எதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. மேலும் அத்தாலாட்டின் இறுதிப் பகுதி கற்பனையின் மிகச்சிறந்த வெளிப்பாடாகக் காணப்படுகிறது.

    ஆரிராரோ ஆரிராரோ
    எங்கள தம்பிய-ஒனக்கு
    ராசன் பெத்த
    என் ரவமணி கண்ணே
    என் செண்டு பாட்டிலே
    சோப்பு புட்டிய
    சாராய புட்டிய
    ஓமப் பொடிய
    ஓரணாக் காசிய
    வாங்கி வருவாரா ஒம் மாமன்
    என் தம்பியிடும் கண்ணிரு
    -நான் பெத்த என் கோயிலுமணி கண்ணே
    ஒன் தாயார் மடிநொம்பி
    ஒன் தாயார் மடிநொம்பி-எங்கள கண்ணே
    ஒன் தந்தியார் தோள் நொம்பி
    என் மஞ்சைக்கோ போய்பாஞ்சி-எங்கள தம்பிய
    மாதுளன் வேரோடி
    என் இஞ்சிக்கோ போய்பஞ்சி-எங்கள தம்பிய
    எலுமிச்சன் வேரோடி
    என்குட்ட குளம் நொம்பி-எங்கள கண்ணே
    கொல்லைக்கோ போய் பாஞ்சி
    என் வாய்க்கா வரப்பு நொம்பி-எங்கள தம்பிய
    வயலுக்கோ போய்பாஞ்சி
    என்வயலு பூத்தபூ-எங்கள செல்வத்த
    உம்மா வயிர் நொம்பி
    உம்மா வயிர் நொம்பி-எங்கள கண்ணே
    உன் வயிற்றுக்கோ பால் கொடுத்து.

     

    (ரவமணி - நவமணி, நொம்பி - நிரம்பி, பாஞ்சி - பாய்ந்து, கொல்லை - வயல், உம்மா-உன் அம்மா)

    இப்பாடலில் தாய்மாமன் குழந்தைக்கு வாங்கி வருவதாகக் கூறப்படும் பொருட்களின் பட்டியல் வித்தியாசமானது. நவமணிக் கண்ணே, உனக்கு செண்டு பாட்டில் (மணப்பொருள்), சோப்பு, சாராயம், ஓமப்பொடி, ஓரணாக்காசு முதலியவற்றை தாய்மாமன் வாங்கிவருவான் என்று கூறுவது வித்தியாசமானது தானே! அணா (நாணயம்) புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் உருவான தாலாட்டு இது.

    3.2.2 வளர்ச்சி நிலைப் பாடல்கள்

    குழந்தைகள் வளர்ச்சி பெறும் காலகட்டங்களில் அழும் குழந்தையைச் சிரிக்க வைப்பதற்காக, விளையாட்டு காட்டுவதற்காக, பேசுவதற்கு, நாப்பயிற்சி அளிப்பதற்காக என்று வெவ்வேறு சூழல்களில் பாடல்கள் பாடப்படும். சில நேரங்களில் குழந்தைகள் அப்பாடல்களைத் திரும்பப் பாடுவதுண்டு. ஒன்றிரண்டு சான்றுகள் காணலாம்.

    பெரியவர்கள் மல்லாந்து படுத்த நிலையில் இரண்டு கால்களையும் மடக்கிக் கால் நுனியில் குழந்தைகளை அமரச்செய்து, குழந்தையின் இரு கைகளையும் தன்னிரு கைகளால் பிடித்துக் கொண்டு கால்களால் குழந்தையை மெல்ல மேலே தூக்குவதும் பிறகு காலை இறக்குவதுமாகச் செய்து கொண்டு பின்வரும் பாடலைப் பாடுவர்.

    அம்புலி அம்புலி
    எங்கப் போன
    ஆவாரங் காட்டுக்கு
    ஏன் போன
    குச்சி ஒடிக்க
    ஏன் குச்சி
    சோறாக்க
    ஏன் சோறு
    திங்க
    எண்ண கொடத்துல
    துள்ளி விளையாட
    செறு மணல்ல
    செரண்டு விளையாட

    கடைசி நான்கடியைப் பாடும் போது குழந்தையைக் கால்களால் இயன்றவரை மேலே தூக்குவர். அது குழந்தைக்குப் பயத்தோடு கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். இதற்கு அம்புலி தூக்கல் என்று கூறுவர்.

    குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும் போது பேச்சு திருத்தமாக அமைய வேண்டி சில பாடல்களைக் கூறி, குழந்தையைப் பாடுமாறு கூறுவர்.

    யாரு தச்ச சட்ட
    தாத்தா தச்ச சட்ட

    இந்தத் தொடர்களை விரைந்து பாடுமாறு குழந்தைகளிடம் கூற, அவர்கள் விரைந்து பாட இயலாமல் தடுமாறுவர். விரைந்து பாட முயலும்போது அவர்களின் பேச்சு திருத்தமுற அமையும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 15:38:54(இந்திய நேரம்)