Primary tabs
3.5 தொகுப்புரை
நாட்டுப்புறப் பாடல்கள் எதார்த்தமானவை. பல்வேறு துறையினருக்கான தகவல் களஞ்சியம். தோன்றிய-வழங்கி வந்த-வழங்கும் காலம் என்று முக்காலத்தையும் பிரதிபலிப்பவை. தொல்காப்பியர் நாட்டுப்புறப் பாடல்களை ‘பண்ணத்தி, புலன்’ என்னும் சொற்களால் சுட்டுவர். சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை நாட்டுப்புற இலக்கியங்களின் செல்வாக்கினை எழுத்திலக்கியங்களில் காணமுடிகிறது. முதன் முதலில் 1871இல் சார்லஸ் இ.கோவர் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டார். தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அவ்வாறே நாட்டுப்புறப் பாடல்கள் குறித்துப் பல்வேறு ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகள், தமிழர்களின் வாழ்வியலை முழுமையாகப் புரிந்துகொள்ள நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் முதலானவை இன்று அருகிவருகின்றன. சமூகத்தில் இத்தகைய பாடல்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை இந்தப் பாடம் தெளிவுபடுத்துகிறது.