தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விளையாட்டுப் பாடல்கள்

  • 3.3 விளையாட்டுப் பாடல்கள்

    குழந்தைகள் வளர்ச்சி பெறும் நிலையில் பெரியவர்களும் சற்று வளர்ந்த சிறுவர் சிறுமியரும் அவர்களுக்குப் பல்வேறு விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுப்பர். அத்தகைய விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியையும், மன மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. சில விளையாட்டுக்களில் பாடல்கள் இடம் பெறுகின்றன. சில நேரங்களில் பாடல்களே விளையாட்டாகின்றன. முன்னதை உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள் என்றும், பின்னதை வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள் என்றும் பிரித்துக் கொள்ளலாம்.

    3.3.1 உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள்

    நாட்டுப்புற விளையாட்டுகளுக்குத் தனித்தன்மை வாய்ந்த ஆடுகளங்கள் தேவையில்லை. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வலை, மட்டை, பந்து, கவசங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. ஆங்காங்கே உள்ள வெற்றிடங்களிலும், வயல்களிலும், வீடுகளிலும் கூட விளையாட முடியும். மரக்குச்சிகள், கொட்டைகள், சிறுகற்கள் போன்ற உபகரணங்களே போதுமானவை. உடற்பயிற்சியையும் மனப் பயிற்சியையும் இந்த விளையாட்டுக்கள் நல்குகின்றன.

    உடற்பயிற்சி விளையாட்டுக்களுக்குள் ஒருசில விளையாட்டுகளில் பாடல்கள் இடம் பெறுகின்றன. சான்றாக ஆண்கள் விளையாடும் சடுகுடு விளையாட்டை எடுத்துக் கொள்ளலாம். இதில் பாடல் பாடும் மரபு உண்டு. எதிரியின் எல்லைக்குள் நுழையும் போது பாடத் தொடங்கி கடைசி வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பாடுவர். பாடல் வாய்விட்டு சத்தமாகப் பாடப்படுவதால் அவர்கள் மூச்செடுப்பது நன்கு தெரியும். மூச்சை விடாமல் எதிரியிடம் சிக்காமல் நடுக்கோட்டைத் தொட வேண்டும் என்பது ஆட்ட விதி. ஒரு பாடல் வருமாறு:

    காளைக் காளை வருகுது பார்
    கருப்புக் காளை வருகுது பார்
    சூரியனுக்கு வேண்டி விட்ட
    துள்ளுக்காளை வருகுது பார்.

    எதிரணியின் எல்லைக்குள் நுழையும் போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும், சவால் விடுவது போலவும், சடுகுடுப் பாடல்கள் அமைவதுண்டு. தன்னையே ‘துள்ளுக்காளை’ (துடிப்பான - அடக்க முடியாத காளை) என்றுக் கூறிக் கொள்வதைப் பாடலில் காணலாம். இறுதிச் சொற்கள் திரும்பத் திரும்பப் பாடப்படும். மற்றொரு சான்று காணலாம்.

    நான் தாண்டா ஒப்பன்
    நல்லமுத்து பேரன்
    வெள்ளிச் சிலம்பெடுத்து
    விளையாட வாரேன்
    தங்கச் சிலம்பெடுத்து
    தாலி கட்ட வாரேன்
    வாரேன் வாரேன்.....

    இந்தப் பாடலும் எதிரணியினரைச் சீண்டி வம்புக்கு இழுப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். எதிரணியில் மண உறவு முறையுடைய (மாமன் - மச்சான்) யாரேனும் இருந்தால் அவர்களைப் பார்த்தே ‘தங்கச் சிலம்பெடுத்து தாலி கட்ட வாரேன்’ என்ற வரிகள் பாடப்படும். எதிரணியிலுள்ள ஒருவரின் அக்கா அல்லது தங்கையைத் தாலி கட்ட வருவதாகக் கேலி செய்து அவரைச் சீண்டும் போக்கு பாடல்களில் காணப்படுகிறது. இதனால் தாக்கமுறும் எதிராளி விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுவார். இன்றைய நிலையில் சடுகுடு என்னும் விளையாட்டு ‘கபடி’ என்ற பெயரில் சர்வதேச விளையாட்டாக மாறிவிட்டது. அங்கே பாடல்களுக்கு இடமில்லை. விளையாட்டுக்கு உள்ளே நிகழும் உறவுப் பிணைப்புகளுக்கும் இடமில்லை.

    3.3.2. வாய் மொழி விளையாட்டுப் பாடல்கள்

    உடற்பயிற்சி விளையாட்டுக்கு மாறான சில விளையாட்டுக்கள் உண்டு. ‘சும்மா விளையாட்டுக்குப் பாடுவது’ என்று அச்சூழல்களில் பாடப்படும் பாடல்களைச் சுட்டுவர். இத்தகைய பாடல்கள் கேலி செய்வதாக அமைவதோடு மட்டுமல்லாமல் இளம் வயதில் மிகச் சிறந்த அறிவுரைகளை நல்குவனவாகவும் அமைவதுண்டு.

    மழவருது மழவருது
    நெல்லு குத்துங்க
    முக்காபடி அரிசி எடுத்து
    முறுக்கு சுடுங்க
    ஏர் ஓட்டுற மாமனுக்கு
    எண்ணி வையுங்க
    சும்மா இருக்குற மாமனுக்கு
    சூடு போடுங்க.

    இது சிறுவர்கள் கேலி செய்து பாடும் விளையாட்டுப் பாடல்தான். இங்கே உழைப்பு மதிக்கப்படுவதையும் சோம்பல் இகழப்படுவதையும் காணலாம்.

    சிறுவர்களின் வளர்ச்சியின் போது பல் விழுதல், மொட்டையடித்தல், போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிகழ்வுகள் சிறுவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதுண்டு. சான்றாக, பல் விழுந்த சிறுவனைப் பிற சிறுவர்கள் கேலி செய்து பாடும் பாடல் ஒன்று கீழே தரப்படுகிறது.

    பொக்கப் பல்லு டோரியா
    பொண்ணு பாக்கப் போறியா
    பட்டாணி வாங்கித் தறேன்
    பள்ளிக் கூடம் போறியா.

    இப் பாடலில் பல் விழுந்து பொக்கை வாயாக இருப்பது கேலி செய்யப்படுகிறது. இந் நிலையில் உண்பதற்குக் கடினமான பட்டாணி வாங்கித் தருகிறேன் என்று கூறுவதும் கேலியே. பொதுவாக வயது முதிர்ந்த ஒருவர் பல்லை இழந்து பொக்கை வாயாக இருப்பார். அவர் தனக்குப் பெண் பார்க்கச் சென்றால் அது நகைப்பிற்குரியதாக இருக்கும். இங்கே சிறுவனைப் பெண் பார்க்கப் போகிறாயா என்று கேட்பதும் ஒருவகை கேலியே.

    பொதுவாக விளையாட்டுப் பாடல்கள் அளவால் சிறியதாக இருக்கும். பல பாடல்கள் பொருளற்றவையாகவும் இருக்கும். அத்தகையப் பாடல்களில் ஒலிக்குறிப்பு மட்டுமே முக்கியத்துவம் பெறும். சிறுவர்கள் எளிதில் நினைவில் கொள்ளத்தக்கதாகவும் விளையாட்டுக்குத் துணை செய்வதாகவும் இத்தகைய பாடல்கள் அமைந்திருக்கும்.

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் விரும்புவதற்கான காரணங்கள் யாவை?
    2.
    நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்க, தொல்காப்பியர் எந்த சொல் அல்லது சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்?
    3.
    சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் யாவை?
    4.
    நாட்டுப்புறப் பாடல்களைத் தனியே சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?
    5.
    தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை முதன் முதலில் சேகரித்து வெளியிட்டவர் யார்?
    6.
    நாட்டுப்புறப் பாடல்களைச் சூழல் அடிப்படையில் எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?
    7.
    மக்கள் வழக்கில் தாலாட்டு எவ்வாறு சுட்டப்படுகிறது?
    8.
    நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் எழுத்திலக்கியத்தின் தாக்கம் மிகுதியாகப் பெற்ற பாடல் வகை எது?
    9.
    தாய்மாமன் குழந்தைக்கு வாங்கி வருவதாகக் கூறப்படும் பொருட்களைப் பட்டியலிடுக.
    10.
    விளையாட்டுப் பாடல்களை எத்தனைப் பிரிவாக வகைப்படுத்தலாம்? அவை யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 15:54:01(இந்திய நேரம்)