தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-1:4

 • 1.4 பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள்

  பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் புதுச்சேரி அக்காலத்தில் பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. 1908 முதல் 1918 வரையிலான பத்து ஆண்டுகளைப் பாரதியார் புதுச்சேரியில் கழித்தார். சூழ்நிலைகளின் கட்டாயத்தால் புதுச்சேரிக்கு வந்த பாரதியாருக்குப் புதிய சூழலும் புதிய நண்பர்களும் இசைவாகவே அமைந்தனர். இலக்கியப் படைப்புகள், சமுதாயச் சீர்த்திருத்தம், அரசியல் விடுதலை ஆகிய அனைத்திலும் அரிதான சாதனைகளைச் செய்து காட்டினார்.

  1.4.1 பாண்டிச்சேரிக்குச் சென்ற பின்னணி

  பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் வாரந்தோறும் நாட்டு நடப்பைக் காட்டும் படங்கள், பாடல்கள், கட்டுரைகள், கருத்துப் படங்கள் (cartoons), தலையங்கங்கள் (editorial) ஆகியவற்றை வெளியிட்டார்; அவற்றின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினார். சுருங்கக் கூறின், 'இந்தியா' பத்திரிகையையே கேடயமாகக் கொண்டு ஆங்கில அரசுடன் மோதினார் பாரதியார். இதன் விளைவாக, 'இந்தியா' பத்திரிகையை அடக்கி ஒடுக்கும் நோக்கோடு அரசு கொடியதோர் அச்சுச் சட்டத்தை (Press Act) 1908ஆம் ஆண்டில் பிறப்பித்தது; 'இந்தியா' பத்திரிகை வெளியிடுவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் உத்தரவையும் போட்டது. எனவே, இந்தச் சூழ்நிலையில் எந்த நேரமும் பாரதியாருக்குப் 'பிடிவாரண்டு' (கைது செய்வதற்கான உத்தரவு) வரலாம் என்பதை அவரது நெருங்கிய நண்பர்கள் உணர்ந்தனர்; சென்னையில் இருந்து 'பிடிவாரண்'டில் அகப்பட்டுக் கொள்வதைவிடப், புதுச்சேரி சென்று, அங்கிருந்து கொண்டே நாட்டுக்குத் தொண்டு புரியலாம் என்று அவர்கள் பாரதியாரிடம் வற்புறுத்திக்கூறினர்; அவரைப் புதுச்சேரி செல்லவும் இசைய வைத்தனர். அதன்படி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதியார் புதுவை சென்றடைந்தார்.

  புதுச்சேரியில் சிட்டி குப்புசாமி ஐயங்காரின் வீட்டில் நண்பர் சீனிவாஸாச்சாரியார் தந்த அறிமுகக் கடிதத்தால் தங்க இடம் பெற்றார் பாரதியார். ஆனால், அங்கே அவரால் நீண்ட காலம் தங்கியிருக்க முடியவில்லை. சென்னை அரசினரின் தூண்டுதலின் பேரில் பிரஞ்சுக் காவல்துறையினர் குப்புசாமி ஐயங்காரை மிரட்டினர். எனவே அவர் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாரதியார் தவித்தபோது எங்கிருந்தோ வந்தார் குவளையூர்க் கிருஷ்ணமாச்சாரியார். அவர் இறுதிவரை
  பாரதியாருக்குத் துணையாக நின்றார்; தனிமையிலும் துயரத்திலும் உதவியாக இருந்தார்.

  1.4.2 'இந்தியா' பத்திரிகையின் மறுபிறவி

   1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் 'இந்தியா' பத்திரிகை சென்னையில் இருந்து வெளிவருவது நின்று போய் இருந்தது. ஆனால், பாரதியார் புதுச்சேரி வந்த ஒரு மாதத்திற்குள் அச்சகமும் புதுச்சேரிக்கு இரகசியமாக வந்து சேர்ந்தது; மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் 20ஆம் நாள் மீண்டும் 'இந்தியா' புதுவை மண்ணில் இருந்து புதுப்பொலிவுடன் வீரமுரசு கொட்டத் தொடங்கியது. ஆம். பாரதியார் பிரஞ்சு எல்லையில் வாழ்ந்து கொண்டே, பிரிட்டிஷ் அரசின் மீது போர் தொடுத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு  சுதந்திர இயக்க வளர்ச்சிக்கு  முன்னைவிட வலிமையோடும் வேகத்தோடும் விறுவிறுப்போடும் தொண்டாற்றினார்; அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், மனம் கலங்காமல் தமது பத்திரிகைப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தார்.

  1.4.3 இளைய மகள் சகுந்தலாவின் பிறப்பு

  பாரதியார் புதுவைக்கு வரும்போது, அவருடைய துணைவியார் செல்லம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே, செல்லம்மாவை அவரது சகோதரர் கே.ஆர். அப்பாத்துரை கடையத்திற்கு அழைத்துச் சென்றார். பாரதி மிகுந்த ஆர்வத்துடன் மகாகவி காளிதாசனின் 'சாகுந்தலம்' என்னும் வடமொழி நாடகத்தைப் படித்துவந்த சமயத்தில் கடையத்தில் செல்லம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குச் 'சகுந்தலா' என்று பெயர் வைக்கும்படி கடிதம் எழுதினார் பாரதியார். குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்குள் செல்லம்மாளும் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.

  1.4.4 நண்பர் கூட்டம்

  அரவிந்தர், வ.வே.சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கூட்டுறவால் 1910ஆம் ஆண்டில் பாரதியாரின் அரசியல் வாழ்க்கை, கலைத்துறை வாழ்க்கை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன. இவ்விரு அறிஞர்களின் உறவால் பாரதியார் அமைதியும், ஆறுதலும், வேதாந்த, இலக்கிய இன்பமும் பெற்றார். இதற்கிடையில், பாரதியாருக்குப் புதுச்சேரியில் நண்பர்கள் நிறையக் கிடைத்தனர். இவர்களுள் பரலி சு.நெல்லையப்பர், வ.ராமசாமி., ஆராவமுத ஐயங்கார், பாரதிதாசன் என்ற கனக சுப்புரத்தினம் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் தவிர பாரதியாரின் குடும்ப வாழ்க்கை இயன்ற வரையில் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற உதவியவர்கள் என்ற முறையில் சிட்டி குப்புசாமி ஐயங்கார், சுந்தரேச ஐயர், கிருஷ்ணசாமி செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதியாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாக்கண்ணு என்ற பெண்மணி ஆகியோரையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

  1.4.5 இலக்கியப் படைப்புகளும் சமூகச் சீர்திருத்தமும்

  1912ஆம் ஆண்டு பாரதியார் வாழ்க்கையில் உழைப்பு மிகுந்த ஆண்டு எனலாம். இந்த ஆண்டில்தான் அவர் பல அற்புதமான இலக்கியங்களைப் படைத்தார்; குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் காவியங்களை இயற்றினார்; பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார்; பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரை எழுதினார்.

  பாரதியார் புதுச்சேரியில் பற்பல நற்செயல்களைச் செய்தார். இந்தியாவைப் பற்றியுள்ள சாதி வேற்றுமையும் தீண்டாமைக் கொடுமையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். எல்லோரையும் ஒரு குலமாகவே கருதிய அவர், அனைவர்க்கும் வழிகாட்டியாகவே வாழ்ந்தார். 1913ஆம் ஆண்டில் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடச் சகோதரருக்குப் பூணூல் அணிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு வியப்பு என்னவென்றால், பாரதியார் தாம் பூணூல் அணிவதை நீண்ட காலத்திற்கு முன்பே விட்டு ஒழித்திருந்தார். அவர் தமது புதுச்சேரி வாழ்க்கையின்போது சிறிது காலம் தாடி மீசை வளர்த்து வந்தார்; வைணவ ஆழ்வார்களைப் போலவே திருநாமமும் தரித்துக் கொண்டார். பாரதியார் 1908 முதல் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசம் செய்து, காவியங்கள் பலவற்றைப் படைத்தும், மொழி பெயர்ப்புப் பணிகள் புரிந்தும், பத்திரிகைகளில் படைப்புக்கள் பலவற்றை வெளியிட்டும் தமிழன்னைக்குப் புதிய அணிகளையும், பாரத மாதாவுக்குப் பல தேசிய அணிகளையும் அணிவித்து மகிழ்ந்தார். பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத் 'தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்' என்றே ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

  1.4.6 ஆங்கிலேயரிடம் சிறைப்படுதல்

  'அரண் இல்லாச் சிறையில் விலங்கு இல்லாக் கைதி'யாகப் புதுவையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை கசந்ததால், பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தார். அதன்படி 1918ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அவர் தம் குடும்பத்துடன் புதுச்சேரியை விட்டுக் கிளம்பினார். பாரதியார் பிரிட்டிஷ் எல்லையில் கால் வைத்ததுதான் தாமதம்; வில்லியனூருக்கு அருகில் ஆறாவது மைலில் தலைமைக் காவலர் ஒருவரால் கைது செய்யப்பெற்றார்; கடலூர் சிறைச்சாலையில் இரண்டு நாள் அவரை வைத்திருக்கும்படி நீதிபதி உத்திரவிட்டார். பாரதியார் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த 'சுதேசமித்திரன்' ரெங்கசாமி அய்யங்கார், எஸ்.துரைசாமி ஐயர் ஆகியோர் அவரது விடுதலைக்காக முயற்சி எடுத்தனர். 22 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பாரதியாரை விடுதலை செய்தது ஆங்கில அரசு. சிறையில் இருந்து வெளிவந்த அவர், சென்னை வந்து, அதன் பிறகு தமது மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:50:08(இந்திய நேரம்)