தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 வறுமையும் இளமையும்

  • 1.2 வறுமையும் இளமையும்

    இனி என்ன செய்வது, எங்கே போவது என்ற கேள்விகள் பிறந்தன பாரதியின் வாழ்விலே. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை அல்லவா? எந்த வழியும் புலப்படாமல் இருந்த நிலையில் காசி நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதியாரின் அத்தை குப்பம்மாள் அவருக்கு உதவ முன் வந்தார். அவரது அழைப்பினை ஏற்று 1898ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார் பாரதியார்.

    1.2.1 காசிநகரத்து வாழ்க்கை  ஒரு திருப்புமுனை

    பாரதியார் காசியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே காசி இந்து கலாசாலையில் சேர்ந்து, வடமொழி, இந்தி ஆகியவற்றைப் பயின்றார்; அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 'பிரவேசப் பரீட்சை'யில் தேறினார். காசி வாழ்க்கை பாரதியாரைப் பன்மொழிப் புலவராக மாற்றியது. அங்கே தான் கச்சம் வைத்து வேட்டி கட்டும் பழக்கமும், தலைப்பாகை கட்டும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டன. அவர் மீசை வைத்துக் கொண்டதும் அங்கேதான்.

    நடை, உடை, பாவனைகளில் மட்டுமன்றி, உணர்வு நிலையிலும் காசி நகர வாழ்க்கை பாரதியாரின் ஆளுமையில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தக் கால கட்டம் நாடெங்கும் திலகர் அலை வீசிய காலம். பத்திரிகைகளின் வாயிலாக நாட்டு நடப்பை அறிந்து கொண்டார் பாரதியார். அதன் காரணமாகச் சுதந்திர உணர்வு என்னும் கனல் அவரது உள்ளத்தில் மூண்டது; நாட்டுச் சிந்தனையே அவரது அன்றாடச் சிந்தனை ஆயிற்று; 'சுதேசியம்' அவரது வாழ்வியல் நெறி ஆயிற்று. இங்ஙனம் காசி நகரின் சூழ்நிலை பாரதியாருக்கு நிரம்பவும் பிடித்துப் போயிற்று; அவர் அங்கேயே நிலையாகத் தங்கிவிடவும் எண்ணம் கொண்டார். ஆனால், எழுதிச் செல்லும் விதியின் கை பாரதியின் வாழ்க்கைப் போக்கை வேறு விதமாக எழுத முடிவு செய்தது.

    1.2.2 எட்டயபுரம் சமஸ்தானப் பணி

     

    விக்டோரியா மகாராணி மரணமடைந்து, ஏழாம் எட்வர்டு பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி, கர்ஸன் பிரபு தில்லியில் ஒரு தர்பார் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற எட்டயபுரம் மன்னர், திரும்பும் வழியில் பாரதியாரைச் சந்தித்துத் தம் அரண்மனைக்கு வரும்படியாகக் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பினை ஏற்று, பாரதியார் 1902 ஆம் ஆண்டு காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பினார். இது குறித்துச் செல்லம்மாள் பாரதி தம் நூலில் பதிவு செய்திருப்பது வருமாறு:

    “காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டுக்கு அழைத்து வந்தவர் எட்டயபுரம் மகாராஜாதான். மகாராஜா பாரதியாரைச் சந்தித்துத் தம்முடன் எட்டயபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்.  அவரைத் தட்டிச் சொல்ல மனமின்றி, ஊருக்கு வந்து என்னையும் அழைத்துக் கொண்டு எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பித்தார்” (பாரதியார் சரித்திரம், பக். 35).

     

    எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதியார் பணியில் அமர்ந்தார். மன்னருக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்துக் காட்டுவது, அரசவைக்கு வருகின்ற வித்துவான்களுடன் கலந்துரையாடுவது, வேதாந்த, தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது இவைதாம் பாரதியாரின் அன்றாட அலுவல்கள்.

    எட்டயபுர வாழ்க்கை செல்லம்மாளுடன் இணைந்து மனையறம் நடத்தும் வாய்ப்பினைப் பாரதியாருக்கு நல்கியது. இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது. இதனை, “அந்தக் காலத்தில் அவர் 'ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு” (பாரதியார் சரித்திரம், பக். 29) எனச் செல்லம்மா பாரதி தம் நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

    1.2.3 மதுரையில் ஆசிரியர் பணி

    விடுதலை உணர்வில் தீராத வேட்கை கொண்டிருந்த பாரதியாருக்கு நாளடைவில் சமஸ்தானப் பணி சலிப்பைத் தந்தது. 1904ஆம் ஆண்டு அவர் அப் பணியில் இருந்து விடுதலை பெற்றார்; எட்டயபுரம் ஊரை விட்டும் வெளியேறினார். தம் மனத்திற்கு உகந்த பணி ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து அவர் மதுரைக்கு வந்தார். மதுரையில் புலவர் கந்தசாமி நடத்திய 'விவேகபாநு' என்ற பத்திரிகையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் பாரதியாரின் 'தனிமை இரக்கம்' என்ற பாடல் வெளியாயிற்று. இதுவே அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடலாகும் என்பர் (தமிழகம் தந்த மகாகவி, பக். 18).

     

    மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் தற்காலிகமாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார்; 1.8.1904 ஆம் ஆண்டு முதல் 10.11.1904 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ மூன்று மாத காலம் அப்பணியில் இருந்தார். அதிலும் அவரது மனம் முழுமையாக  ஈடுபடவில்லை. பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தையே பாலித்திட விழைந்தவர் அல்லவா அவர்? எனவே, மதுரையிலே ஒரு தமிழாசிரியராக மட்டும் தம்வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.

    1.

    பாரதியாரின் பிறந்த நாளைச் சுட்டுக.

    2.

    பாரதியாரின் செல்லப் பெயர் யாது?

    3.

    தந்தையார் 'கணக்குப் போடு' என்றபோது, பாரதியார் என்ன செய்தார்?

    4.

    பாரதியார் எத்தனை வயதில் தம் தாயை இழந்தார்?

    5.

    பாரதியார் தாம் இளமையில் அனுபவித்த தனிமைத் துயரினைப் பற்றி எங்ஙனம் பாடியுள்ளார்?

    6.

    சுப்பையா  சுப்பிரமணிய பாரதி ஆனது எப்போது?

    7.

    பாரதியார் நெல்லை சென்றது எதற்காக?

    8.

    பாரதியாருடைய துணைவியாரின் பெயரைச் சுட்டுக.

    9.

    தமது தந்தையார் இறந்த அவலத்தைப் பாரதியார் எங்ஙனம் குறிப்பிட்டுள்ளார்?

    10.

    பாரதியார் காசி நகருக்குச் செல்லக் காரணமாக இருந்தவர் யார்?

    11.

    பாரதியார் வைத்துக்கொண்ட புனைபெயர் ஒன்றினைச் சுட்டுக.

    12.

    அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடல் எது?

    13.

    பாரதியார் மதுரையில் எங்கே தமிழாசிரியராகப் பணியாற்றினார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 25-10-2017 18:22:37(இந்திய நேரம்)