தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-1:5

 • 1.5 பாரதியாரின் கடைசி மூன்று ஆண்டுகள்

  பாரதியார் வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளிலும் துயரமும், சோதனைகளும், ஏமாற்றங்களும் தாம் கலந்து இருந்தன. ஆயினும் கொள்கைப் பிடிப்பில் தளராமலும், மனம் சோராமலும் பாரதியார் அனைத்தையும் எதிர்கொண்டார். மக்கள் தூற்றியதைப் பொருட்படுத்தாமல் தம் சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார். கவிஞன் என்ற பெயருக்கு மாசுபடாமல் கௌரவம் காத்தார். இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கடையத்திலும் ஓர் ஆண்டு சென்னையிலும் வாழ்ந்தார்.

  1.5.1 பாரதியாரைக் கடையத்து மக்கள் தூற்றுதல்

  பாரதியார் ஏறத்தாழ இரண்டு ஆண்டுக் காலம் கடையத்தில் வாழ்ந்தார். அங்கு இருந்தபடியே 'சுதேசமித்திர'னுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; 'கலா நிலையம்' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ்ப்பணி புரிய விரும்பினார். தனி மனித சுதந்திரம்  சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயம்  ஆண், பெண் நிகர்  கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகச் செய்தல் முதலான தம் சீரிய கனவுகளை முற்போக்கான சிந்தனைகளைச் செயற்படுத்த முற்பட்டார்; ஆயின், கடையம் மக்களோ அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தூற்றினர். இதனால் சலிப்பும் சோர்வும் உற்றார் பாரதியார்.

  1.5.2 கனவுகள் பொய்த்தாலும் ஊக்கம் தளராமை

  கடையத்தில் பாரதியாருக்கு இருக்க விருப்பமில்லை. எனவே, அவர் திருவனந்தபுரம், எட்டயபுரம் ஆகிய ஊர்களிலும் சிறிது காலம் வாழ்ந்தார். எட்டயபுரத்தில் தங்கியிருந்த சமயத்தில்  1919ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் தமக்கு உதவி செய்ய வேண்டி வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு இரு சீட்டுக்கவிகள் எழுதினார். இவற்றின் வாயிலாகப் பாரதியாரின் உள்ளப் பாங்கினை நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது. பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகத் தம்மைக் கருதாமல், கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்க வேண்டும் என்பதை இச்சீட்டுக்கவிகள் விளக்குகின்றன. வறுமையில் உழன்றாலும் தன்மானம் இழக்கத் துணியாத பாரதியாரின் செம்மையான உள்ளப் பண்பே இங்குச் சுடர் விட்டு நிற்கின்றது எனலாம்.

  பாரதியாருக்கு ஜமீன்தாரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்தன. என்றாலும், மனம் கலங்காத பாரதியார் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன் மூலம் தம் கவலைகளை மறந்தார்; திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்து கவிதைகள் பாடி மக்களை மகிழ்வித்தார். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை சென்றபோது ராஜாஜி இல்லத்தில் பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார்; காந்தியடிகள் தொடங்கப் போகும் இயக்கத்திற்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்; அன்று மாலை திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் 'வாழ்க நீ எம்மான்' என்ற பாடலால் காந்தியடிகளை மனங்குளிர வாழ்த்திப் பாடினார்.

  சென்னையில் சிலநாள்கள் தங்கி இருந்துவிட்டு, மீண்டும் கடையம் புறப்பட்டார் பாரதியார். பின்னர், அவர் கானாடு காத்தான், காரைக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்தார்; தம் கவிதைத் திறத்தாலும் சொல்வன்மையாலும் மக்களைக் கவர்ந்தார். 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் 'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' என்ற பொருள் பற்றி உரையாற்றினார். இந்நிலையில் தமது நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பாரதியார் உள்ளத்தில் எழுந்தது; தமது நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கி மதுரை நண்பர் சீனிவாச வரதனுக்குக் கடிதம் எழுதினார்; நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கிச் சுற்றறிக்கையாகவும் பலருக்கு அனுப்பி வைத்தார். வழக்கம் போலவே இம் முயற்சியிலும் பாரதியாருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

  1.5.3 மீண்டும் சென்னையில் பத்திரிகைப்பணி

  1920ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பணியாற்ற வருமாறு மீண்டும் ரெங்கசாமி ஐயங்காரிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது; அதனை ஏற்று அவர் சென்னை சென்றார்; 'சுதேசமித்திர'னில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார்; தம் இயற்பெயரிலும், 'காளிதாசன்', 'சக்திதாசன்' என்னும் புனைபெயர்களிலும் தம் படைப்புகளை எழுதிவந்தார்.

  சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும், பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார். இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா, துரைசாமி ஐயர் ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களுடன் உரையாடிப் பொழுதுபோக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று. பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியூர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார்: கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார். 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார்.

  1.5.4 கோயில் யானை தூக்கி எறிதல்

  பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார். அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார்; யானைக்குத் தேங்காய், பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது. வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார்; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார். கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது. காயமுற்று, உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை, குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார்.

  பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால், உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது. சில நாட்களில் அவர் உடல்நலம் பெற்றார். என்றாலும், முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை. வழக்கம் போல் 'சுதேசமித்திரன்' அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார்; வெளியூர்களுக்குச் சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார். 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார்; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்; ஆகஸ்ட் 2ஆம் நாள் ஈரோட்டில் வாய்க்கரையில் 'இந்தியாவின் எதிர்கால நிலை' என்பது பற்றி உரையாற்றினார். முதல்நாள் ஆன்மிகச் சொற்பொழிவு; அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு. ஆன்மிகத்தையும் அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகள் இவையே ஆகும்.

  1.5.5 மகாகவியின் மரணம்

  யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும், உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது. ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை. மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார்; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில், அவர் உயிர் பிரிந்தது ஆம்; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார் மகாகவி பாரதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:50:11(இந்திய நேரம்)