தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உலகளாவிய நோக்கு

  • 3.1 உலகளாவிய நோக்கு

    ‘பாரதியின் உலகளாவிய நோக்கு’ என்ற இப்பாடத்தில் பாரதியின் உலகளாவிய பாங்கு எத்தகையது எனப் பார்க்கலாமா? உலகளாவிய நோக்கு என்றால் என்ன? இதுதானே உங்கள் உள்ளங்களில் எழும் கேள்வி?

    சாதி, சமயம், உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன், ஆண், பெண், கற்றவன், கல்லாதவன், நாடு, மொழி, இனம் இவையனைத்தையும் கடந்து நின்ற கவிஞன் மனம் உலக முழுவதையும் தழுவிச் செல்ல வேண்டும்.

    என் சாதி, என் மதம், என் மொழி, என் நாடு, என் மக்கள் என்றில்லாமல் இந்த வரையறைகளை எல்லாம் தகர்த்துக் கொண்டு அனைத்துலக மக்களும் எனது சகோதரர்கள்; அனைத்துலக மக்களின் துன்பமும் எனது துன்பம்; அனைத்துலக மக்களும் சமம் என்று நினைக்கின்ற சமநோக்கு உலகளாவிய நோக்கு எனலாம்.
     

    3.1.1 மானிடத்தின் பொது உணர்வுகள்

    இன மொழி வேறுபாட்டால் உணர்வு வேறாகுமோ? எவை மாறுபட்டாலும் உணர்வுகள் வேறாவதில்லை. நாட்டுக்கு நாடு மொழி, இனம், பண்பாடு இவற்றில் வேற்றுமையுண்டு. அப்படியிருக்கும்போது எப்படி உலகளாவிய சிந்தனையை ஒருவர் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதா? உண்மைதான். நிலம், நிறம், மொழி, இனம், பண்பாடு எல்லாமே வேறாக இருக்கலாம். ஆனால் மனித சமூகத்தின் - மானிடத்தின் (Humanity) உணர்வுகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதாவது உண்மை, பொய்மை, இன்பம், துன்பம், ஆசை, நிராசை, நம்பிக்கை, அவநம்பிக்கை, வீரம், அச்சம், ஏக்கம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே? ஒருவர்க்கு மகிழ்ச்சி தருவது பிறர்க்குத் தராமல் இருக்கலாம்; ஒருவர் ஏங்குவதற்குப் பிறர் ஏங்காமல் இருக்கலாம். ஆனால் அடிப்படை உணர்வுகளில் மாற்றமில்லை. உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கின்ற - அடைகின்ற உணர்வுகள் இவை!
     

    3.1.2 மானிடத்தின் பொதுத் துயரங்கள்

     

     

    உணர்வுகளுக்குக் கூறியது போலவே அந்த உணர்வுகளால் உருவாகும் துயரங்களும் ஒன்றாகவே உள்ளன. அவற்றை அனுபவிக்கின்ற அளவு வேண்டுமாயின் மாறலாம்; குறையலாம்; கூடலாம். ஆயினும் துயரங்கள் பொதுவானவைதாம். அதனால் தான் ஓரிடத்தில் மனித இனத்தின் துயரம் பேசப்படும்போது அந்தத் துயரத்தை அனுபவிக்கும் மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அவர்களுக்கும் அது பொதுவாகிறது; பொருத்தமாகிறது. உதாரணமாக வறுமையில் வாடும் மக்களின் துயரம் எந்த நாட்டு மக்களைப் பற்றியதாக இருந்தால்தான் என்ன? அது பொதுவானதுதானே? ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையால் அடிமைப்படும் மக்கள் யாராக இருந்தால் தான் என்ன? அது பொதுவானதல்லவா? எண்ணிப் பாருங்கள்!

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:37:45(இந்திய நேரம்)