தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:2-பாரதியின் உலகநோக்கு

  • 3.2 பாரதியின் உலக நோக்கு

    பாரதி என்ற மானிடனின் உலக நோக்கிற்கு எது அடிப்படை? அவர் காலத்தில் வாழ்ந்த பிற மக்களில் பெரும்பாலோர்க்கு அத்தகைய எண்ணம் இல்லையே, அப்படியானால் பாரதிக்கு இச்சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது எது?
     

    அணிசெய் காவியம் ஆயிரங் கற்பினும்
    ஆழ்ந்திருக்குங் கவிஉளம் காண்கிலார்

                                              (சுயசரிதை: 22)

    என்ற பாரதியின் கவிதை வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இலக்கியவாதிகளின் படைப்புகளில் ஆழ்ந்து, அங்குப் பொதிந்து கிடக்கும் எழுத்தாளரின் உளப்பாங்கைச் சீர் தூக்கிப் பார்ப்பது படிப்பவர்க்கு அழகு. அவ்வழியில் பாரதியின் கவிதைகளில் ஆழ்ந்திருக்கும் அவர் கவியுள்ளத்தை நோக்கினால் அது பாரதியின் உள்ள உயர்வையும் உலகளாவிய அவர்தம் நோக்கையும் தெளிவாகக் காட்டி நிற்கும்.
     

    3.2.1 பாரதி என்ற மானிடன்
     

     

    பாரதி என்ற மானிடன் தமிழகத்தை மட்டும் எண்ணிப் பார்க்கவில்லை. பாரத நாட்டையும் ஒருங்கிணைத்துப் பார்த்தார். அப்படிப் பார்க்கும்போதே உலகப் பார்வையைப் பெற்றார். இங்குள்ள மக்களின் பிரச்சனையைத் தேசியப் பிரச்சனையாக, உலக மக்களின் பிரச்சனையாக அவர் உள்ளம் பார்த்தது. அதனால் அவர் தமிழர்கள் பிரச்சனையைப் பேசினாலும் இந்தியர்களின் பிரச்சனையைப் பேசினாலும் அது உலகப் பிரச்சனையாகியது. அவற்றைத் தீர்க்க அவர் கூறிய தீர்வுகள், செயல்பாடுகள் அனைவர்க்கும் பொருந்துவதாயின. பாரதி என்ற படைப்பாளர், கவிஞர் ஒரு மானிடராக உயர்ந்து நிற்கிறார். இந்த மானிடர் சக மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்பவர்; சக மனிதர்களின் சிக்கல்களைக் கண்டு வருந்துபவர். வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் அவர் ஏக்கங்களும் தவிப்பும் செயல்பாடுகளாய் உருவாயின; சக மனிதர்களைத் தட்டியெழுப்பும் பள்ளியெழுச்சியாக அமைந்தது. போர்க்கோலம் கொள்ளச் செய்யும் முரசொலியாக முழங்கியது. எங்கெல்லாம் மக்கள் துயரமடைந்தார்களோ அங்குள்ள மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து, இங்குள்ள மக்களை எழுச்சியுறச் செய்தவர்; வேறு வேறு நாடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் துல்லியமாகக் கணித்து, அவற்றைப் பாராட்டியவர்; அதன் வழி தம் மக்களைச் செயல்திறம் கொண்டவர்களாக உருவாக்க நினைத்தவர் பாரதி. எந்த இன மக்கள் எங்குத் துயரத்தில் மூழ்கினாலும் அவர்களுக்காகப் பெரிது வருந்தும் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தார் பாரதி. இதற்கு எது அடிப்படையாக அமைந்தது?
     

    3.2.2 அத்வைதம் வகுத்த அடிப்படை

    பாரதி இந்து சமயத்தைச் சார்ந்தவர்; ஆயினும் எந்தச் சமயத்தின் மீதும் அவருக்கு வெறுப்பில்லை, பகைமையில்லை; உயர்வு தாழ்வு என்ற எண்ணமில்லை. எல்லாச் சமயங்களும் சமம் என்றே எண்ணினார். மதித்தார். ஆயினும் தாம் சார்ந்த சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தம் சமயத்தை நேசித்ததாலேயே பிற சமயத்தையும் நேசித்தவர்; மதித்தவர். வேதாந்தக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்; ஆயினும் வெற்று (empty / hollow) வேதாந்தியாக அவர் உருவாகவில்லை. அவர் எப்போதும் மக்களைப் பற்றியே கவலை கொண்டிருந்தார். அவர்கள் எந்நாட்டவராயினும் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் எச்சாதியைச் சார்ந்தவராயினும் சமமாகவே மதித்தார். கிறித்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தம் சகோதரர்களாக எண்ணினார்.

    பாரதி வேதாந்திதான்; ஆனால் வேதாந்தத்தின் உட்பொருளை உணர்ந்த பாரதி உண்மையான வேதாந்தி. வேதாந்தத்தின் உட்பொருளாவது, அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறான், அனைவரும் சமம் என்பதாகும். பக்தியாளன்தான் பாரதி; ஆனால் வெறித்தனமில்லாத பக்தியாளர். இந்து மக்கள் வழிபடும் அத்தனை தெய்வங்களையும் வழிபடுபவர்; ஆயினும் ஆயிரம் தெய்வங்களைப் பாடினாலும் தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏனென்றால் ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் சூட்டி மகிழ்ந்த மக்களின் உள்ளத்தை நன்கறிந்தவர். அதனால் தான் அல்லாவையும் ஏசுவையும் வேறுபடுத்திப் பார்க்கும் மனம் அவர்க்கில்லை. அத்வைதக் கொள்கை தந்த கொடையிது. ஆமாம். அத்வைதக் கொள்கை என்றால் என்ன? நீங்கள் அறிவீர்களா?

    அத்வைதக் கொள்கை

    ‘அத்வைதம்’ என்பதன் பொருள்; ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். அதாவது தெய்வம் ஒன்றுதான்; அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது; என்னிடத்திலும் இருக்கிறது. ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது. அனைத்து சீவன்களிலும் உள்ளது. அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது. அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே? எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது? பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு அடிப்படை வகுத்தது இந்த அத்வைதக் கோட்பாடுதான். இதற்கு மேலும் உரமிட்ட பிற தூண்டுதல்களை இனிப் பார்க்கலாமா?

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    பாரதி பாட்டின் திறத்தால் எதைச் செய்ய நினைத்தார்?
    2.
    பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு எப்படியிருந்தது?
    3.
    உலகளாவிய நோக்கு என்றால் என்ன?
    4.

    மானிடத்திற்குப் பொதுவான ஏதேனும் இரு உணர்வுகளையும் இரு துயரங்களையும் குறிப்பிடவும்.

    5.

    பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு எது அடிப்படையாக அமைந்தது?

புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2017 12:36:51(இந்திய நேரம்)