தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-3:3-உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்கள்

  • 3.3 உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்கள்

    பாரதியின் பரந்த உள்ளத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தவை சில. அவற்றுள் விழுமிய கருத்துகள் எங்கிருந்தாலும் யார் எழுதியதாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனமும் அவர்களைப் போற்றும் போக்கும் பாரதியிடம் இயல்பாக இருந்த பண்புகள். அதனாலேயே அவருடைய கோட்பாடுகளுக்கு ஒத்த கருத்துடைய மேலைநாட்டுக் கவிஞர்கள் தம் கவிதைகள், கருத்தாக்கங்கள் அவரைக் கவர்ந்தன. அவை அவருக்குப் பெரிதும் தூண்டுகோலாய் அமைந்ததோடு பெருமளவு தாக்கத்தையும் (impact) ஏற்படுத்தின.

    அத்வைதக் கொள்கை அவருடைய உலகளாவிய நோக்கிற்கு வேராய் (root) அமைந்ததுபோல் மேலைநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளும் அறிஞர்களின் கருத்தாக்கங்களும் அந்த வேர்கள் ஆழமாயும் உறுதியாயும் பரவி நிற்க உரமாய் அமைந்தன. பாரதியின் உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்களைத் தந்த ஒரு சிலரின் கோட்பாடுகளைச் சுருக்கமாக இங்குக் காணலாமா?
     

    3.3.1 பாரதியும் ஷெல்லியும் (Shelley, P.B.)

    ஷெல்லி பெரும் புரட்சிக் கவிஞன். பாரதி புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தமக்கு முன்னோடியான ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்டிருந்ததில் எந்தவித வியப்புமில்லை. ஷெல்லியின் பாடல்களைப் பாரதி விரும்பிக் கற்றார். தமக்கு ‘ஷெல்லிதாசன்’ என்ற புனை பெயரையும் சூட்டிக் கொண்டார். ‘ஷெல்லி சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தையும் ஏற்படுத்தி, அதில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காட்டி வந்தார். அவருடைய கவிதைகளைப் பிறரும் அனுபவிக்கும்படி செய்தார். அந்த அளவுக்கு ஷெல்லியிடம் பாரதிக்கு ஈடுபாடு இருந்தது.
     

    ஷெல்லியின் தாக்கம்

    பாரதியார் மற்ற கவிஞர்களால் தாக்கம் பெற்றதைவிட ஷெல்லியால் தாக்கம் பெற்றதை அவர் கவிதைகள் எதிரொலிக்கின்றன. இருவர் மனத்திலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று பெரும் கோட்பாடுகள் பதிந்து இருந்தன. மனித மேம்பாட்டையே இருவரும் குறிக்கோளாகக் கொண்டனர்.
     

    இலட்சியங்கள்

    நிறுவனங்களுக்கு எதிராகக் கலகம் செய்வது, புரட்சி மனப்பான்மை, பெண் விடுதலைக்காக உழைத்தல், எல்லாவற்றையும் விட ஷெல்லியுடைய இலட்சியக் கோட்பாடுகளாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை பாரதியைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றையே பாரதியும் தம் இலட்சியமாகக் கொண்டார்.
     

    3.3.2 பாரதியும் வால்ட் விட்மனும் (Walt Whitman)

    ஷெல்லிக்கு இணையாகப் பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர் அமெரிக்கக் கவிஞரும் அறிஞருமான வால்ட் விட்மன். பாரதியின் வசன கவிதைக்குத் தூண்டுகோலாய் அமைந்தவர் வால்ட் விட்மன். அவருடைய ‘புல்லின் இதழ்கள்’ (The Leaves of Grass) என்ற கவிதையே பாரதியின் வசன கவிதைக்கு அடித்தளமிட்டது.
     

    பொதுப் பண்புகள்

    பெண் விடுதலை பற்றி பாரதி, விட்மனைப் போலவே விரிவாகப் பாடுகிறார். இருவரும் பூமி மீதும் வாழ்க்கை மீதும் மக்கள் மீதும் பற்றுடையவர்கள். அதனாலேயே நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கவிதைகள் படைத்தார்கள். அவரவர் நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று விரும்பினர். சுருங்கிய தேசியம் என்ற வட்டத்திலிருந்து விரிந்த உலகளாவிய பார்வைக்குப் பரிணமிக்க விட்மனின் கவிதைகளும் கட்டுரைகளும் பாரதிக்குப் பெரிதும் உதவின என்பதை உறுதியாகக் கூறலாம்.
     

    அனைத்துயிருடனும் ஒன்றிய நிலை

    இயற்கையில் தம்மை மறந்தவர் விட்மன். வயல்வெளிகளில் காட்சிதரும் விலங்குகளோடும் பறவைகளோடும் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு (அவற்றின் மகிழ்ச்சியில்) மகிழ்ந்தவர் விட்மன். பாரதியும் உலகத்தைக் கண்டு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடி மகிழ்ந்தவர். காக்கை, குருவி, கடல், மலை போன்றவற்றோடு தம்மை இணைத்துக் கொண்டு மகிழ்கிறார். விட்மனின் ஜனநாயகக் குரலும் பாரதியைப் பெரிதும் ஈர்த்தது. பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு விட்மன் உரமூட்டியதோடு பெரும் தூண்டுதலாகவும் அமைந்ததைத் தெளிவாக அறியலாம்.
     

    3.3.3 பாரதியும் பைரனும் (Byron, G.G.)

    கிரேக்க நாட்டின் நாகரிகம் உலகமறிந்தது. அதுதன்னிலை கெட்டு, அன்னியருக்கு அடிமையானதையும் கலைகளெல்லாம் மங்கி நின்ற நிலையினையும் எண்ணி பைரன் வருந்துகிறார். பாரதியும் இந்திய நாட்டின் அடிமை நிலையை எண்ணி ஏங்குகிறார். பெருமை பல பெற்ற பாரதநாடு அடிமைப்பட்டு அல்லல் உறுவதைக் கண்டு வருந்துகிறார். ஷெல்லி போற்றிய பைரன் மீது ஷெல்லிதாசனாகிய பாரதிக்கு ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பில்லை. பைரனை விரும்பிப் படித்தவர் பாரதி.

    ‘பைரனுக்கும் பாரதிக்கும் இடையே நிலவிய உறவு இவர்களிடம் மேலோங்கி நின்ற விடுதலைத் தீயே’ என்று சுத்தானந்த பாரதி கூறுவார். ‘விடுதலைக்காகப் போராடும் பாரதிக்கு ஓர் ஒளியூட்டும் கண்ணியமான எடுத்துக்காட்டாக, பைரன் திகழ்ந்திருக்க வேண்டும்’ என்பார் கா.மீனாட்சிசுந்தரம்.
     

    3.3.4 பாரதியும் கீட்ஸும் (Keats, John)

    உணர்ச்சி மிகுந்த கவிஞன் கீட்ஸ். இளம் வயதிலேயே மரணம் அடைந்தவர். உணர்ச்சி மிகுந்த கவிஞனாகிய கீட்ஸின் கவிதைகள் பாரதிக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கீட்ஸின் அழகு தத்துவம் பாரதியின் குயில்பாட்டில் வெளிப்பட்டது என்பர் திறனாய்வாளர். அழகைத் தேடும் தேடல் அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என மகிழும் பாரதிக்குக் கீட்ஸின் அழகுணர்ச்சி வசப்பட்டதில் என்ன ஆச்சரியம்? ‘உண்மையே அழகு. அழகே உண்மை’ என்பதில் இருவருமே இணைந்து போகின்றனர்.
     

    3.3.5 பிற அறிஞர்கள்

    மேலும் பல மேலைநாட்டு அறிஞர்கள் பாரதியின் இதயத்தைக் கவர்ந்துள்ளார்கள்.பாரதி தம் கட்டுரைகளிலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற மேல்நாட்டு அறிஞர்களின் கருத்துகளைத் தமிழர்க்கும் பாரதநாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு தோன்ற ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார். தொழில் என்னும் கட்டுரையில் சீனஞானி சீஇங், உருஷ்ய ஞானி டால்ஸ்டாய் (Tolstoy), அமெரிக்க ஞானியாகிய தோரோ (Thoreau), கார்லைல் (Carlyle) ஆகிய ஆங்கில ஆசிரியர்களைப் போற்றுகிறார்.
     


     

    பாரதியும் உலக அறிஞர்களும்

    இவையனைத்தும் நமக்குத் தெளிவாகக் காட்டுவன யாவை? பாரதி உலக அறிஞர்கள் பலரை நன்கு படித்துள்ளார்;அவர்களின் கருத்துகளைத் தம்வயமாக்கிக் கொண்டுள்ளார். அவர்களின் உணர்வு ஒத்த கருத்தாக்கங்களின் தாக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதன் காரணமாக அவருடைய நாட்டு விடுதலை, பெண் விடுதலை, அழகைத் தேடும் தேடல், சமத்துவக் கோட்பாடு ஆகியவை உரம் பெற்றதோடு அவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் அவை வேகத்தோடும் வீச்சோடும் இடம் பெற்றன என்பதைத் தெளிவாக அறியலாம்.
     

    பொது நலத்தொண்டர்கள்

    ஒன்றை இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாரதியின் உள்ளத்தை ஈர்த்தவர்கள் அனைவருமே தம் மக்களுக்கும், தம் நாட்டிற்கும் மட்டுமன்றி உலக மக்களுக்கும் பொருந்தும் சிந்தனைகளைத் தந்தவர்கள். எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டு மக்களின் விடுதலை மையப் பொருளாக அமைந்தது. மக்களின் சமத்துவத்திற்காக அவர்கள் எழுதினார்கள்; போராடினார்கள்; வாழ்ந்தார்கள். பாரதிக்கும் பேச்சும் மூச்சும் மக்களைப் பற்றியதாகவே இருந்தது. அப்படிப்பட்டவரின் உள்ளத்திற்கு மேற்கூறிய பெரியோர்களின் எழுத்தும் செயலும் வலுவாக அமைந்ததில் என்ன வியப்பு?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:37:52(இந்திய நேரம்)