தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-3:6-உலகநோக்கில் சகோதரத்துவம்

  • 3.6 உலகநோக்கில் சகோதரத்துவம்

    உலகிலுள்ள அனைவரையும் சகோதரர்களாக எண்ணி அவர்தம் மகிழ்ச்சியில் மகிழ்ந்து, துன்பத்தில் துயரமுற்று, அவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நேயம் சகோதரத்துவம் எனலாம்.

    மனிதர்களாகப் பிறந்தவர் யாராயினும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆணாயினும் பெண்ணாயினும் வேறுபாடில்லை. எந்நாட்டைச் சார்ந்தவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும், எச்சாதியைச் சார்ந்தவராயினும், எவ்வினத்தைச் சார்ந்தவராயினும் மானிடர் எல்லோரும் சமமே. பாரதி எல்லா விஷயங்களிலும் இத்தகைய சமத்துவத்தையே விரும்புகிறார். சமத்துவம் எங்கு நிலவும்? சுதந்திரம் உள்ள இடத்தில்தானே சமத்துவம் வேர்கொள்ள முடியும்? அடிமைக்கு ஏது சுதந்திரம்? சுதந்திரமில்லையென்றால் எப்படித் தானாகச் செயலாற்ற முடியும்? தானாகச் செயலாற்ற முடியாதபோது கட்டுண்ட நிலைதானே? அதனால் முதலில் விடுதலை. பின்னர் சமத்துவம். சமத்துவ உணர்வு வந்துவிட்டால் வேற்றுமைகள் மறைந்துவிடும். சகோதரத்துவம் தானாக மலர்ந்துவிடும் என்கிறார்.

     

    3.6.1 இறைவன் எங்குமுளன்

    ‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவன் கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. ‘உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்’.

    இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்? ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் தெய்வம் மறைந்து நிற்கிறது என்பதைத்தானே? இதைப்பற்றி இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார்?

    ‘ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்ததுபோல் நிற்கும் ஒளியே தெய்வம்’ என்கிறார். ‘தெய்வம் எது? ஜகத்தின் உயிர்தான் தெய்வம்!’ அப்படியாயின் எல்லாப் பொருள்களிலும் இருப்பது தெய்வந்தானே?
     

    எங்கும் நிறைந்திருப்பது ஒரே சக்தி

    அதனால் எல்லா மதங்களும் உண்மைதான்;ஒரு மதமும் முழு உண்மையன்று. மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதங்களும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். பெயர் தான் வேறு வேறு. பல்வேறு இடங்களிலிருந்து ஓடிவரும் நதிகள் இறுதியில் சங்கமம் ஆவது கடலில்தான். அதைப்போலவே பல்வேறு மதங்கள். வேறு வேறு கடவுள் பெயரைக் கூறினாலும் இறுதியில் ஒரு சக்தியையே அது குறிக்கிறது. அப்படியிருக்க மதங்களுக்குள் ஏன் வீண்போராட்டமும் பிணக்கும்? இதில் உயர்வு தாழ்வுக்கு ஏது இடம்? என்னுள்ளும் உன்னுள்ளும் பிறருள்ளும் இருப்பது ஒரே சக்திதான்; இறைவன்தான். அவனை இயேசு என்றாலும் அல்லா என்றாலும் ஒன்றுதான். பின் ஏன் இந்த மயக்கம்?

     

    3.6.2 பாரதியின் அரவணைக்கும் உள்ளம்

    நமக்குத் தொழில் கவிதை என்று முழங்கிய பாரதி, கவிதைத் திறத்தால் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்? பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திட வேண்டுமாம். நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் களையப்பட வேண்டுமென்று விருப்பமாம். எப்படி அவர் உள்ளம் விழைகிறது பார்த்தீர்களா? மானிடச் சாதியை ஒன்றெனக் கொண்ட பாரதி உள்ளம் பரந்த உள்ளம். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உள்ளம் அது. அதனால்தான்

     

    கடமையாவன தன்னைக் கட்டுதல்

    (விநாயகர் நான்மணிமாலை-8)
     

    என்று தனிமனித நிலையைக் கூறிய பாரதி அடுத்து

    பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்

    (விநாயகர் நான்மணிமாலை-8)

    என்று கூறுவதோடு அமையாது

    அல்லா! யெஹோவா....... என்று உலகில் வேறு வேறு பெயர்களில் போற்றும் இறைவன் ஒருவரையே போற்ற வேண்டும் என்கிறார். தெய்வம் ஒன்று என்றால் மக்கள் அனைவரும் ஒன்றுதானே? சமம்தானே? சகோதரர்கள்தானே? சிந்தித்துப் பாருங்கள்!

     

    3.6.3 பாரதியின் வேண்டுகோள்

    விநாயகர் நான்மணிமாலையில் பாரதி எதை வேண்டுகிறார்?
     

    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
    கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
    விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள்
    யாவும் என்வினையால் இடும்பை தீர்ந்தே
    இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும் தேவதேவா!

    (விநாயகர் நான்மணிமாலை - 32)
     

    (என்வினையால = என் செயலால், இடும்பை = துன்பம், இணங்கி = ஒற்றுமையாய்)

    இப்படிப்பட்ட நெஞ்சம்

     

    காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்

    (ஜெயபேரிகை, 3)
     

    என்று பிரகடனப்படுத்துவதில் என்ன வியப்பு?

     

    காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே!
    கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே!

    (கண்ணபெருமானே, 1)
     

    என்று வியந்து கேட்பவர்

     

    தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! - நின்னைத்
    தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்தலாலா

    (நந்தலாலா,-4)
     

    (தீண்டும் = தொடும்)

    என்று தன்னைமறந்து மெய்சிலிர்க்கும் பாரதி, ஆத்திசூடியில் ‘பரம்பொருள் ஒன்றே’ என உறுதிபடக் கூறுகிறார். வேறு என்னதான் கேட்கிறார்?

     

    பெண்விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும்
    மண் பயனுற வேண்டும்; வானம் இங்கு தென்படவேண்டும்

    (மனதில் உறுதி வேண்டும், 2)
     

    (பயனுற = பயன் அடைய, வானம் = சொர்க்கம்)

    என்பார். எப்போதும் அவர் நினைவெல்லாம், பேச்செல்லாம், செயலெல்லாம் மக்கள், மக்களே; அதுமட்டுமா? எங்கும் தெய்வம். எல்லாம் தெய்வம்.

     

    >

     

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை,
         ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
    பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்கு
         பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
         மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
         எழுதுகோல் தெய்வமிந்த எழுத்து தெய்வம்

    (பாரதி அறுபத்தாறு - 18)
     

    இப்படிக் கூறுகிற மனம் தன் நாட்டைப் பற்றி மட்டுமே தன் இன மக்களைப் பற்றி மட்டுமே நினைக்குமா? எண்ணிப் பாருங்கள்.

     

    3.6.4 சகோதரத்துவம் மலர்ந்தால்

     


     

    பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
         பற்றும் சகோதரத் தன்மை
    யாருக்கும் தீமை செய்யாது - புவி
         யெங்கும் விடுதலை செய்யும்

    (முரசு - 30)

     

    என்று சகோதரத்துவத்தின் மேன்மையை அழுத்தமாகக் கூறுகிறார்.

    நாடு, மொழி, இனம் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனிதகுலம் முழுமையும் மட்டுமன்றி அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தையும் அரவணைக்கத் துடிக்கிறார். சகோதரத்துவம் என்னும் உணர்வின் மொத்த உருவமாகிறார். இவருடைய உலகளாவிய நோக்கு வியத்தற்குரியது.

    கம்பருக்குப்பின் அதாவது ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறான் என்று பாரதியைப் பற்றி ஒரு அறிஞர் பாராட்டியிருப்பது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

    பாரதி உலகளாவிய நோக்குடைய மகாகவிகளில் ஒருவர்; அவர் தமிழ்நாட்டில் பிறந்தது தமிழும் தமிழரும் தமிழ்நாடும் செய்த தவப்பயன் எனப் பெருமிதம் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 18:33:23(இந்திய நேரம்)