Primary tabs
-
5.0 பாட முன்னுரை
சங்க காலத்தில் தோன்றிய தமிழறிஞர்கள் எல்லாம் வளமான இலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்த்தனர். அவர்கள் படைத்த பாடல்களுள் காதல் பற்றிய பாடல்கள் அக இலக்கியங்கள் என்று பெயர் பெற்றன. வீரம், புகழ், கொடை, கல்வி முதலியன பற்றிய பாடல்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன. இந்த இலக்கியங்கள் மொழி, நாடு, அரசு, சமுதாயம், பண்பாடு முதலியவை பற்றிக் கூறின.
கடைச்சங்க காலத்தில் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கான கருத்துகளைக் கூறும் திருக்குறள், பழமொழி, நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றின. கடைச்சங்க காலத்தை அடுத்துச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்னும் பெருங்காப்பியங்கள் தோன்றின.
அதன் பின்னர் வீடு பேறு அடைதலையே தலையாய குறிக்கோளாகக் கொண்டு, நாயன்மார்களும் ஆழ்வார்களும் முறையே சிவபெருமானையும், திருமாலையும் பாடி வழிபட்டனர். அவர்கள் இறையுணர்வு மேலீட்டால் பாடினர். ஆகையால் இவற்றில் சமுதாயத்தையோ, நாட்டின் நிலையையோ, அரசியலையோ பற்றி மிகுதியாக அறிய முடியவில்லை.
இதையடுத்து முகமதியர், தெலுங்கர் போன்ற அந்நிய ஆட்சியின் ஆதிக்கங்கள் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கைத் தேய்த்தன. தமிழ்ப்புலவர்கள் கற்றவர்கள் மட்டுமே பொருள் உணரக் கூடிய வகையில் கலம்பகம், சித்திர கவி, யமகம், திரிபு போன்ற இலக்கியங்களைப் படைத்தனர். சிற்றரசர்கள், செல்வச் சீமான்கள் ஆகியோரை பொருள் பெறும் நோக்கத்துடன் மட்டுமே பலவாறு புகழ்ந்து பாடியிருக்கின்றனர். அந்தப் பாடல்கள் சமுதாயப் பாடல்களாக, தேசியப் பாடல்களாக அமையவில்லை.
தாயுமானவரும் இராமலிங்க அடிகளாரும் தம் பாடல்களில் சமூகச் சிந்தனையைச் சிறிதளவு கொண்டு வர முனைந்துள்ளனர். ஆயின், சமூகச் சிந்தனைகளையே பாடுபொருளாகக் கொண்டு முதன் முதலாகப் பாடியவர் பாரதியே. சமூகத்தின் எல்லா நிலையினரும் பயன்பெறும் வகையில் எளிய நடையில் பாடினார். அன்றாடச் சொல் வழக்கைக் கவிதையில் கொண்டு வந்த பெருமை பாரதியாரையே சாரும்.