தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-5:2-பாரதியாரின் தனித்தன்மை

  • 5.2 பாரதியாரின் தனித்தன்மை

    பாரதியாரின் சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்தும் அவருக்கு முன்பு வாழ்ந்த புலவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது. பாரதநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காலத்தில், சமுதாயம் தாழ்வுற்று வறுமையடைந்திருந்த நிலையில், பாரத நாட்டு மக்கள் அடங்கி, ஒடுங்கி, அஞ்சி வாழ்ந்த சூழ்நிலையில் பாரதி தோன்றினார். அவருடைய வரவு, பாரதிதாசன் சொல்வது போல், ‘நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’வாக ஒரு புதிய விழிப்பை, விடியலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது.

     

     

    பிற புலவர்களை விட அவரிடம் நாட்டுப் பற்று, மொழிப்பற்று, சமுதாய உணர்வு ஆகிய சிந்தனைகள் எழுச்சி பெற்று விளங்கின. பாரதியின் மனம் புதுமை மீது மிகுந்த விருப்பம் கொண்டதாக விளங்கியது. இருப்பினும் பழையதைப் போற்றியிருக்கிறார். பழமையில் புதுமை படைத்து, முற்றிலும் புதிய வகைகளைத் தந்து தமிழ்க் கவிதைகளுக்குப் புதுப் பொலிவு கொடுத்திருக்கிறார். தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய பாதையை வகுத்து வழிகாட்டியிருக்கிறார் பாரதி.

    இந்த மறுமலர்ச்சி யுகத்தைப் ‘பாரதி யுகம்’ என்று சிறப்பித்துப் பேசலாம் என்பார் பி.ஸ்ரீ. (பாரதியார் இதயம், பக்: 16).

    யுகம் என்றால் என்ன? யுகம் என்ற சொல்லுக்கு நீண்ட காலம் என்பது பொருள். பாரதியார் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடியவர். ஆகையால் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தம் மனத்தில் பட்டதைக் கவிதையில் சொல்லோவியமாகப் படைத்து விடுகிறார். அதுவே பாடுபொருளாக அமைந்து விடுகிறது. பாரதி தமக்கு முன்பு வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடுபொருள் போல் பாடியது மட்டுமன்றிப் புதிய வடிவம், எளிய மொழி நடை முதலியவற்றைக் கையாண்டிருக்கிறார்.

    பாரதியாரின் விடுதலை வேட்கையும் சமுதாயச் சீர்திருத்த எண்ணமும் அவரை அவ்வாறு பாடத் தூண்டியிருக்கக் கூடும். பெரும்பான்மையான பாடல்களில் பாடுபொருள் ஒன்றாக இராமல் பலவாக விளங்குகின்றன. அது மட்டுமன்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முறை சொன்னதை மீண்டும் அவர் கூறுவதையும் காண முடிகிறது. அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா?

    பாரதி வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் கூறாமல் பாரதி வாழ்கிறார், பாரதி வாழ்வார் என்று நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் கூறும் வண்ணம் அவர் தோற்றுவித்த யுகம் இக்காலத்தும் தொடர்கிறது.

    பாரதியாரின் அடிச்சுவட்டில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை போன்ற பல கவிஞர்கள் பாடியிருக்கின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:51(இந்திய நேரம்)