Primary tabs
-
1.4 தொகுப்புரை
மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்குப் பல அறக்கருத்துகளைச் சான்றோர்கள் படைத்துள்ளனர். அக்கருத்துகளைத் தாங்கி, பல அறநூல்கள் தோன்றியுள்ளன. அந்த அறநூல்களில் பதினெண்கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பதினோர் அறநூல்களும் முதன்மையானவை ஆகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆறாம் நூற்றாண்டுவரை தோன்றியுள்ளன. இந்நூல்களுக்குப் பிறகு பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பிற்கால அறநூல்கள் படைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு எழுதப்பட்டுள்ள அறநூல்கள் பல. அவற்றுள் சில அறநூல்கள் சிற்றிலக்கியங்களாக உள்ளன. மேலும் சில அறநூல்கள் சமயம் சார்ந்தவையாக உள்ளன. மேலும் சில அறநூல்கள் மிகவும் பிற்காலத்தில் 19, 20ஆம் நூற்றாண்டுகளிலும் எழுந்துள்ளன. இந்த அறநூல்களின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல அறங்களை நாம் அறிந்து கொள்ள இயலும். அவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவரின் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாக அமைவதுடன் மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கையாகவும் அமையும். இந்தப் பாடம் பிற்கால அறநூல்களைப் பொதுவாக அறிமுகம் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. எனவே இதில் பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களாக இருபது நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அறநூல்களில் ஒன்பது அறநூல்களை, இத்தொகுதியில் இடம்பெறும் ஏனைய ஐந்து பாடங்களும் விரிவாக விளக்கும். ஏனைய பதினோர் அறநூல்கள் பற்றிய குறிப்புகளை இப்பாடம் வழங்கியுள்ளது.