தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற்கால அறநூல்கள் தோன்றக் காரணம்

  • 1.2 பிற அறநூல்கள் தோன்றக் காரணம்

    பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினோர் அறநூல்களும், மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை எடுத்துக் கூறியுள்ளன. அவற்றிற்குப் பின்னரும் அறநூல்கள் ஏன் தேவைப்பட்டன என்பது எண்ணத்தக்கது ஆகும்.

    1.2.1 எளிமை

    பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் ஆறாம் நூற்றாண்டுவரை எழுதப்பட்டவை. அவற்றைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த மக்கள் கற்று வந்தார்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய பிறகு ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த மக்களுக்கு அவற்றை விட எளிமையான நூல்கள் தேவைப்பட்டன. எனவே, பிற அறநூல்கள் தோன்றியுள்ளன. அவை எளிமையும் சுருக்கமும் கொண்டவையாக உள்ளன.

    1.2.2 கல்வி பரவல்

    பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அக்கோயில்களைச் சார்ந்து கல்வி பயிற்றும் பணியும் நடைபெற்றிருக்கிறது.

    இதே காலத்தில் மடங்களும் கல்விப் பணியை ஆற்றியுள்ளன. இந்தக் கல்விப் பணிக்கும் எளிய அறநூல்கள் தேவைப்பட்டன. இதற்காகவும் பல அறநூல்கள் தோன்றியுள்ளன. கல்வி பயிற்றும் இடங்களுக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அறநூல்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

    ஒளவையார் இயற்றிய பெரும்பாலான அறநூல்களில் காப்புச் செய்யுள்கள் சைவ சமயக் கடவுளர்களை வாழ்த்துகின்றன. அதே காலத்திலும் அதற்கு அடுத்த நூற்றாண்டிலும் அருங்கலச்செப்பும் அறநெறிச்சாரமும் தோன்றியுள்ளன. இவை சமண சமய கருத்துகளுக்கு இடையே அறநெறிகளைத் தெரிவிக்கின்றன. சமண சமயம் சார்ந்த பள்ளிகளில் கற்பிப்பதற்கு என்று இந்நூல்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் சிவன்மீதும் முருகன்மீதும் விநாயகன்மீதும் காப்புச் செய்யுள்களைக் கொண்ட ஒளவையார் பாடல்களுக்கு மாற்றாக, சமணர்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியதாகக் கொள்ளமுடியும்.

    1.2.3 பாவகை மாற்றம்

    பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் அனைத்தும் வெண்பாவால் பாடப்பட்டுள்ளன. அந்தப் பாவகையிலிருந்து மாறுபட்டு நூற்பா அமைப்புக்கு ஏற்ப ஆத்திசூடி பாடப்பட்டுள்ளது. கொன்றை வேந்தனும் வெற்றிவேற்கையும் ஆத்திசூடியைப் போன்றே ஓரடியுடன் காணப்படுகின்றன.

    உலக நீதி விருத்தப்பா வகையைச் சேர்ந்தது. மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், நன்னெறி, நீதிவெண்பா ஆகியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் போன்று வெண்பாவில் அமைந்துள்ளன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    எவை அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன?
    2.
    பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் எந்த நூற்றாண்டுவரை எழுதப்பட்டவை?
    3.

    ஒளவையார் இயற்றிய அறநூல்களின் கடவுள் வாழ்த்தில் போற்றப்பட்டுள்ள கடவுளர் யாவர்?

    4.
    சமண சமயம் சார்ந்த அறநூல்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 11:14:30(இந்திய நேரம்)