Primary tabs
- 2.2 தனிப்பாடல்கள்
ஒளவையார் பாடியதாகப் பல தனிப்பாடல்கள் உள்ளன. அவற்றுடன் தொடர்பு உடையவையாகப் பல நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவை உண்மையா? என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகள் சுவை உடையனவாகவும் அறிவுக்கு விருந்து தருவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றை இங்கே காண்போம்.
2.2.1 நாலு கோடி பாடல்சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.(ஒளவையார் தனிப் பாடல்:42)
என்பதே அப்பாடல்.இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
என்பவை எதிர்மறை ஆகும்.
என்பவை உடன்பாடு ஆகும்.2.2.2 சுட்ட பழமும் சுடாத பழமும்
ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.
ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது.
அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.
அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.
‘பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.
ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, ‘சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!’ என்றார்.
ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.
ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.
‘சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....’ என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.
மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.
ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.
‘பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினான்.
அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.
தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.
(கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை, நாணா = கலங்காத, கோடாலி = கோடரி, கதலித்தண்டு = வாழைத்தண்டு, ஈரிரவு = இரண்டு இரவு, துஞ்சாது = தூங்காது)
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.
ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.
‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.
2.2.3 கொடியதுமுருகனை வணங்கிய ஒளவையாரின் மனத்திலிருந்த புலமைக் கர்வம் அகன்றது; நெஞ்சில் அமைதி குடி கொண்டது.
ஒளவையாரைப் பார்த்து முருகன், ‘ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்’ என்றான்.
‘முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்’ என்றார் ஒளவையார்.
அப்போது முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும்.
தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
2.2.4 இனியதுஇந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது.
இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.
இப்பாடலில் தனிமை, இறைவனை வணங்குதல் முதலியவற்றை இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார். என்றாலும் இவற்றை விட இனிமையானதாக அறிவுடையாரைப் பார்ப்பதை ஒளவையார் கூறியுள்ளார். இதிலிருந்து அறிவுக்கு இருக்கும் மதிப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.
2.2.5 பெரியதுபெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!(ஒளவையார் தனிப் பாடல் : 56)
உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடியுள்ளார்.
2.2.6 அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே(ஒளவையார் தனிப் பாடல் : 57)உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.
மேலே நீங்கள் பார்த்த ஒளவையாரின் நான்கு தனிப்பாடல்களிலும்
நெடிய வெவ்வேலோய்
தனிநெடு வேலோய்
எரிதவழ் வேலோய்
வரி வடிவேலோய்என்னும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் வரும், 'வேலோய்' என்னும் சொல் வேலை உடையவனை அழைக்கும் சொல்லாய் அமைந்துள்ளது. வேலை உடையவன் வேலன். அவனது வேலின் தன்மையை இத்தொடர்கள் விளக்குகின்றன.
இவ்வாறு ஒளவையாரைப் பற்றி, பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக ஒளவையாரின் கவித்திறனையும் பெருமையையும் நாம் அறியமுடியும். இனி ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை நாம் காண்போம்.