தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012223.htm-ஆத்திசூடி

 • 2.3 ஆத்திசூடி

  ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.

  காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல் முதலில் அமையும் செய்யுள் ஆகும்.

  ஆத்திசூடி அமர்ந்த தேவனை
  ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

  (ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)

  ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்குவோம் என்று ஆத்திசூடி தொடங்குகிறது. இந்நூல் 109 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள அடிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும்.

  2.3.1 கல்வி

  கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பண்புகளைக் கற்பிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூல் ஆத்திசூடி. எனவே, கல்வி பற்றிய பல செய்திகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைக் கற்போர், கல்வியின் சிறப்பையும் தேவையையும் புரிந்து கொள்ள இயலும்.

  • நூல் பல கல்

  நூல் பல கல் (71) என்பது ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள தொடர். பல வகை நூல்களைக் கற்க வேண்டும் என்பது இதன்பொருள். இதே கருத்தை, ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்னும் பழமொழியும் உணர்த்துகிறது. கண்ணில் காணும் நூல்களை எல்லாம் கற்கின்ற ஒருவன் அறிஞன் ஆவான் என்பது இப்பழமொழி உணர்த்தும் கருத்து ஆகும். இதற்கு ஏற்பவே ஆத்திசூடியும் சிறு சொற்றொடரின் துணையுடன் ‘நூல் பல கல் என்று குறிப்பிட்டுள்ளது.

  • ஓதுவது ஒழியேல்

  ஓதுதல் என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். கல்வியும் கற்பித்தலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல்கள். கற்கக் கற்க அறிவு வளரும். கல்வியைக் கற்காமல் இடையில் நிறுத்தினால் அறிவு வளர்ச்சி குறைவது மட்டும் அல்லாமல் முன்பு கற்ற கல்வியும் மறந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் ஒளவையார்,

   

  ஓதுவது ஒழியேல்
  (11)

  என்று பாடியுள்ளார்.

  அறிவுக்கு அடிப்படையானது கல்வி. கல்விக்குக் கரை கிடையாது. ஆனால் அதைக் கற்கின்ற மனிதனின் வாழ்நாள் குறைவு. இந்தக் குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதன் இடைவிடாது கற்க வேண்டும். அவ்வாறு கற்றால்தான் அறிவைப் பெறமுடியும் என்பது இதன் பொருள்.

  • எண் எழுத்து இகழேல்

  எண் என்பது கணிதம் முதலான அறிவியல் கல்வியையும் எழுத்து என்பது இலக்கியம் முதலான கலையியல் கல்வியையும் குறிக்கும். இவை இரண்டும் மனிதனின் இருகண்களைப் போன்றவை. மனிதனின் இரு கண்களும் சேர்ந்து ஒரு பார்வையைக் கொடுப்பது போல அறிவியல் கல்வியும் கலையியல் கல்வியும் சேர்ந்து மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றன. எனவே மனிதன் தனது வாழ்நாளில் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் இகழ்ந்து ஒதுக்கக் கூடாது. ‘எண் எழுத்து இகழேல்’ (7) என்னும் ஆத்திசூடி வரி இதையே கூறுகிறது. தொடர்ச்சியாகக் கற்கும் இயல்பைக் கொண்ட மனிதன் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

  • இளமையில் கல்

  கல்வியை ஒருவன் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் அதை இளமை முதலாகக் கற்றல் வேண்டும். இளமையில் ஒருவன் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் எளிதில் சென்று பதியும். எனவே தான்,

  இளமையில் கல்
  (29)

  என்று ஒளவையார் பாடியுள்ளார்.

  இளமைப் பருவம் என்பது தொல்லைகள் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். இந்தக் காலத்தில் கற்கின்ற கல்வியானது அவனது வாழ்க்கை முழுவதும் உதவும் வகையில் உள்ளத்தில் ஆழ்ந்து பதியும். இளமையில் கற்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறவர்கள் முதுமையில் துன்பப்பட நேரிடும் என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண இயலும். எனவே ஒவ்வொருவரும் இளமையில் முயன்று கல்வி கற்றல் வேண்டும்.

  • கேள்வி முயல்

  கற்றல் இருவகையில் நிகழும். ஒன்று: நூல்களில் இருக்கும் பல்வேறு கருத்துகளை நாமே படித்து அறிந்து கொள்ளுதல். இன்னொன்று: நல்ல கல்வி அறிவு உடையவர்களின் அறிவுரைகளைக் கேட்டல் என்பவை ஆகும். கற்றலை விடவும் கேட்டலே நன்று என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். அதையே ஒளவையாரும்

  கேள்வி முயல்
  (39)

  என்று பாடியுள்ளார்.

  ஒவ்வொரு நூலாகத் தேடிப் பிடித்து நாம் கற்பது என்றால் அதற்கு நெடுங்காலம் ஆகும். ஆனால் பல நூல்களைக் கற்று அறிந்த அறிஞர்களின் உரையைக் கேட்பதன் மூலம் அந்த நூல் கருத்துகளை நம்மால் சில மணிநேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.

  கேள்வி அறிவு என்பது கற்றவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். இதைத் திருவள்ளுவர்,

  கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
  ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

  (414)

  (ஒற்கம் = மனத்தளர்ச்சி, ஊற்று = ஊன்றுகோல்)

  என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் இல்லை என்றாலும், கல்வி அறிவு பெற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். அது அவனுக்குத் தக்க சமயத்தில் உதவும், அந்த உதவி எவ்வாறு இருக்கும் என்பதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

  முதுமையினால் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு ஊன்றுகோல் எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோல் மனத்தளர்ச்சி ஏற்படும் போது கேள்வியறிவு உதவும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இதையே நாலடியாரும்,

  கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
  நல்லறிவு நாளும் தலைப்படுவர்

  (139)

  என்று குறிப்பிட்டுள்ளது.

  2.3.2 ஒழுக்கம்

  ஒழுக்கம் என்பது ஒழுங்கு என்ற பொருள் அடிப்படையில் தோன்றியது. ஒழுங்கு என்பது முறையாகச் செய்தலைக் குறிக்கும் சொல் ஆகும். முறையான வாழ்க்கையின் நிலைப்பாடுதான் ஒழுக்கம். மனித வாழ்வில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஆத்திசூடியின் நோக்கம். ஒழுக்கத்தைத் தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் என்னும் இருநிலைகளில் காணமுடியும்.

  • தனிமனித ஒழுக்கம்

  ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையின் நிலைப்பாடுதான் தனிமனித ஒழுக்கம். ஒளவையாரின் ஆத்திசூடி, தனிமனித ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்துள்ளது. தனிமனிதனைப் பார்த்துக் கட்டளையிட்டுக் கூறுவது போன்றே ஆத்திசூடித் தொடர்கள் அமைந்துள்ளன.

  அறம் செய விரும்பு (1)

  என்னும் முதல் தொடரின் இறுதிச் சொல் ‘விரும்பு’ என்பது. இந்தச் சொல் கட்டளையிடுவது போல் அமைந்திருப்பதை நீங்கள் காணமுடியும்.

  எல்லோருமே அறம் செய்ய விரும்ப வேண்டும் என்றாலும் ஒரு மனிதனை நோக்கிச் சொல்வதை நாம் உணர முடியும்.

  அறம்:வாழ்க்கைக்குத் தேவையான நெறி முறையும் ஈதல்
  முதலான கொடைச் செயல்களும் அறம் ஆகும்

  பிறருக்குக் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும்; அவ்வாறு வாழ விரும்ப வேண்டும் என்பதை ஒளவையார் இதன்மூலம் தெரிவித்துள்ளார்.

  தனிமனிதனை நிலைகுலையச் செய்வதில் சினம் தலைமை இடத்தைப் பெறுகிறது. எனவே, ஒருவன் சினத்தை அடக்க வேண்டும். இதை, ஒளவையார்,

  ஆறுவது சினம்
  (2)

  என்று குறிப்பிட்டுள்ளார்.

  இவையும் இவை போன்ற பிற தொடர்களும் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதை நாம் காணமுடியும்.

  • சமுதாய ஒழுக்கம்

  மனிதன் சமுதாயமாகக் கூடி வாழும் இயல்பு கொண்டவன். ஒவ்வொரு தனி மனிதனும் தத்தமக்கு உரிய ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் ஒழுக்கம் நிலவும். என்றாலும் சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு இல்லாமல் கலந்து வாழ்வதற்குச் சில பொதுவான ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும். அந்த ஒழுக்க நெறிகளையும் ஒளவையார் தமது ஆத்திசூடியில் பாடியுள்ளார்.

  • ஒப்புரவு ஒழுகு

  உலக மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழவேண்டும். அவ்வாறு வாழாமல் மாறுபட்டு வாழ்பவன் தனிமரமாகி நிற்பான் என்னும் கருத்தை ‘ஒப்புரவு ஒழுகு(10) என்னும் தொடர் வாயிலாக ஒளவையார் பாடியுள்ளார். இதே கருத்தைத் திருவள்ளுவரும்,

   

  உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
  கல்லார் அறிவிலா தார்
  (140)

  என்று பாடியுள்ளார்.

  உலக நடைமுறைக்கு ஏற்ப வாழத்தெரியாதவர் பல நூல்களைக் கற்றவராக இருந்தாலும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் ன்பது இக்குறளின் கருத்து. இந்த உலகுடன் பொருந்தி வாழச்சொல்லி ஒளவையார் தனிமனிதனிடம் எடுத்துச் சொல்வது சமுதாய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

  • ஊருடன் கூடிவாழ்

  மனிதன் சேர்ந்து வாழத்தொடங்கியதும் ஊர் என்னும் அமைப்பு ஏற்பட்டது. அந்த ஊரில் பலதிறப்பட்ட மனிதர்கள் வாழ்வார்கள். அந்த மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். ஊருக்கு என்று நிகழும் பொது நிகழ்ச்சிகளிலும் தனியாள் வீட்டில் நிகழும் நல்ல, கெட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல் வேண்டும் என்பது சேர்ந்து வாழ்தலின் பொருள். இதை ஊருடன் கூடிவாழ் (103) என்று ஆத்திசூடி தெரிவித்துள்ளது.

  2.3.3 ஈகை

  ஈகை என்னும் சொல் ஏழைக்குக் கொடுத்தல் என்னும் பொருளைக் கொண்டது. எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் எதுவும் இல்லாதவர்க்கு வழங்குவதை இச்சொல் குறிக்கும். இந்த ஈகைச் செயலைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதை ஒளவையார் பல தொடர்களில் விளக்கியுள்ளார்.

  • தானமது விரும்பு

  பிறருக்குப் பொருள்களை வழங்குவதற்கு விரும்ப வேண்டும். ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கின்றோமே என்று வேண்டா வெறுப்பாகக் கொடுக்கக் கூடாது. எவர்க்கும் பொருள்களை விரும்பிக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பிறருக்குப் பொருளைக் கொடுக்க ஏன் விரும்ப வேண்டும் என்னும் கேள்வி நம்மிடையே எழுகிறது அல்லவா? ஒருவர் நம்மிடம் ஒரு பொருளுக்காக இரங்கி நிற்கிறார் என்றால் அவர் தமது பெருமைகளையும் மானத்தையும் கருதாமல்தான் வந்து நிற்கிறார் என்பதை நாம் உணர்ந்து அவருக்கு உதவ வேண்டும் என்னும் கருத்தைத் ‘தானமது விரும்பு’ (55) என்று ஒளவையார் பாடியுள்ளார்.

  • இயல்வது கரவேல்

  வறுமை நிலையை அடைந்த ஒருவர், பொருள் வேண்டி வந்து நின்றால் அந்தப் பொருளை அவருக்குத் தயங்காமல் வழங்கிட வேண்டும். நம்மால் கொடுக்கக் கூடியதை, ‘இல்லை‘ என்று சொல்லி அப்பொருளை மறைத்து வைக்கக்கூடாது என்னும் கருத்தை ‘இயல்வது கரவேல்‘ (3) என்று ஒளவையார் கூறியுள்ளார்.

  • ஈவது விலக்கேல்

  பிறருக்குத் தேவைப்படும் பொருளைக் கொடுத்து உதவுவது பண்புகளில் மிகச்சிறந்தது. அந்தச் சிறந்த பண்பு நம்மிடம் இருந்தால் அதை விட்டுவிடக்கூடாது. நம்மிடம் வந்து ஒரு பொருளைக் கேட்கும் நிலைக்குத் தாழ்ந்து விட்ட ஒருவருக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்பது எல்லார்க்கும் பொதுவானது. அந்தச் சிறந்த பண்பு ஒருவரிடம் இயல்பாக இருந்தால் அந்த ஈகைப் பண்பை ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது என்பதை உணர்த்த ‘ஈவது விலக்கேல்’(4) என்று ஒளவையார் பாடியுள்ளார். இதற்குப் பிறர் வழங்கும் ஈகைச் செயலைத் தடுக்கக் கூடாது என்றும் பொருள் கூறுவார்கள்.

  2.3.4 போர்

  காதலும் வீரமும் சங்ககாலத்தில் போற்றப்பட்டுள்ளன. ஆனால் அறநூல் கால ஒளவையார் வாழ்ந்த சூழ்நிலையில் அமைதியான வாழ்க்கையையே மக்கள் பெரிதும் விரும்பியிருக்கிறார்கள்.

  இரு நாடுகளுக்கு இடையிலும் இரு குழுக்களுக்கு இடையிலும் ஏற்படும் போர்களால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் அழிகின்றன. மனிதன் தனது எதிர்கால வாழ்க்கைக்கு என்று சேர்த்து வைத்த பொருட் செல்வம் அழிகிறது. கண்ணைக் கவரும் வகையில் உருவாகி இருக்கும் இயற்கை வளங்களும் செயற்கைக் கட்டுமானங்களும் அழிகின்றன. எனவே, அறிஞர்கள் போர் இல்லா உலகை விரும்பியுள்ளார்கள்.

  • போர்த் தொழில் புரியேல்

  உலகை நன்றாக உருவாக்குவதற்கு என்று பலவகைத் தொழில்கள் இருக்கின்றன. அத்தொழில்களை ஒதுக்கிவிட்டு, உலகை அழிக்கும் போர்த் தொழிலைச் செய்யாதே என்னும் கருத்தை இத்தொடர் விளக்குகிறது.

  இனத்தின் காரணமாகவோ, நிறத்தின் காரணமாகவோ வேறு எந்தக் காரணமாகவோ மனிதன் போர் புரிய வேண்டிய தேவையில்லை. அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார், ‘போர்த் தொழில் புரியேல்‘ (86) என்று குறிப்பிட்டுள்ளார்.

  • முனைமுகத்து நில்லேல்

  மனிதனுக்கு எந்த வகையான நெருக்கடி ஏற்பட்டாலும் இன்னொரு நாட்டுடன் போர் புரியும் நோக்கத்துடன் போர்முனைக்குச் செல்லக் கூடாது என்பது இதன் பொருள். அவ்வாறு போர் முனைக்குச் சென்று போர் புரிவதன் மூலம் ஏற்படும் வெற்றியுடன் இழப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இழப்புகளே மிகுதி என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் ஒளவையார் ‘முனைமுகத்து நில்லேல் (92) என்று பாடியுள்ளார். மேலும் தகுந்த ஏற்பாடுகள் இல்லாமல் போர் முனைக்குச் செல்லக் கூடாது என்பதையும் இத்தொடர் விளக்குகிறது.  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவை எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளன?
  2.
  ‘நூல் பல கல்’ என்பதற்கு இணையான பழமொழி எது?
  3.
  ‘எண்’ என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
  4.
  ‘எழுத்து’ என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
  5.
  ஒழுக்கத்தின் இருநிலைகள் யாவை?
  6.
  அறம் எனப்படுவது யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:19:45(இந்திய நேரம்)