தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொன்றைவேந்தன்

 • 2.4 கொன்றை வேந்தன்

  ஒளவையார் எழுதிய அறநூல்களில் ஒன்று கொன்றைவேந்தன். கொன்றை என்பது ஒரு மரம். அதில் மலரும் மலர் கொன்றை மலர் எனப்படும். கொன்றை மலரை விரும்பி அணிந்த இறைவன் சிவன். சிவனின் மக்களாக விநாயகனையும் முருகனையும் நாம் வணங்குகிறோம். அவர்களில் முருகனைப் போற்றி இந்த அறநூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் காப்புச் செய்யுள்,

  கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
  என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

  (காப்பு)
  என்று அமைந்துள்ளது.

  இதில் இடம்பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பது சிவனைக் குறிக்கிறது; கொன்றை வேந்தன் செல்வன் என்பது சிவன் மகனாகிய முருகனைக் குறிக்கிறது. இந்தக் காப்புச் செய்யுளில் முதலில் இடம் பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பதே இந்நூலுக்கு உரிய தலைப்பு ஆனது.

  கொன்றை மாலையை விரும்பிச் சூடிக் கொண்ட சிவபெருமானின் செல்வனாகிய முருகப் பெருமானை நாள்தோறும் நாம் போற்றி வணங்குவோம் என்று இந்தக் காப்புச் செய்யுள் தெரிவிக்கிறது.

  2.4.1 கல்வி

  ஒளவையார், ஆத்திசூடியில் கல்விக்கு முதன்மை கொடுத்தது போன்று கொன்றை வேந்தனிலும் முதன்மை இடம் கொடுத்துள்ளார். மனிதனை முழுமையாக்கும் தகுதி கல்விக்கு உண்டு என்பதைக் கொன்றை வேந்தன் தெளிவுபடுத்துகிறது.

  • எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்

  மனித உறுப்புகளில் கண் சிறப்பிடம் பெறுகிறது. அந்தக் கண்ணுக்கு இணையாகக் கல்வியை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். நமது முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. அந்த இரண்டு கண்களுக்கு இணையாகக் கருதத் தக்கவை எண்ணும் எழுத்தும். எனவே, ஒளவையார்

  எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

  (7)

  என்று பாடியுள்ளார். எண்ணும் எழுத்தும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆத்திசூடியில் படித்துவிட்டீர்கள். அதே பொருளில் தான் அவை இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

  நாம் பலவகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவற்றை விடவும் சிறந்த செல்வம் கல்வி ஆகும். ஏனைய செல்வங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கும். ஆனால் கல்விச் செல்வம் நம்மைவிட்டுச் செல்லாது. எனவே, ஏனைய செல்வங்கள் மெய்யான செல்வங்கள் அல்ல. கல்விச் செல்வம் மட்டுமே மெய்யான செல்வமாகக் கருதப்படும். இதையே ஒளவையார்,

  கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

  (22)

  என்று பாடியுள்ளார்.

  ஒருவன் கையில் இருக்கும் பொருள் செல்வத்தை விட, அவன் கற்ற கல்வியே உண்மையான செல்வம் என்பது இது தெரிவிக்கும் பொருள்.

  • நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

  கல்வி கற்றவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் உண்மையே பேசுவார்கள். நேற்று ஒன்றாகவும் இன்று வேறாகவும் பேசமாட்டார்கள். அதை ஒளவையார்,

  நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
  (50)

  என்னும் தொடர்மூலம் விளக்கியுள்ளார். எப்படிக் கற்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்கியுள்ளது.

  கல்வியைக் கற்கும்போது அது நம் மனத்தில் பதியும்படியாகக் கற்க வேண்டும். அவ்வாறு மனத்தில் நிலைக்கும்படியாகக் கற்றவர்கள், தாங்கள் சொன்ன சொல்லிலிருந்து தவறமாட்டார்கள் என்பது இதன் பொருள்.

  • நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

  மனத்தில் பதியும்படியாகக் கற்றவர்கள், தாம் கற்றவற்றிற்கு ஏற்ப ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும். ஒழுக்க வாழ்க்கை வாழ்கின்ற உயர்ந்தவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வார்கள். அந்த ஒழுக்க வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி ஆகும்.

  நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
  (53)

  என்று, ஒழுக்க வாழ்க்கைக்கு அறநூல்களைக் கற்றல் அடிப்படை என்பதை ஒளவையார் பாடியுள்ளார்.

  அறநூல்களைக் கற்று உணர்ந்து, அந்த அறவுரைகளுக்கு ஏற்ப ஒழுக்கத்தோடு வாழவேண்டும் என்பதே இத்தொடரின் பொருள் ஆகும்.

  கற்றவற்றின்படி நடக்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்குகிறது.

  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்

  கல்வி அறிவு இல்லாதவர்கள் நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே, எல்லோரும் அற நூல்களைக் கற்றல் வேண்டும். இதை,

  ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்

  (9)

  என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.

  நல்ல அற நூல்களைப் படிக்காதவர்களுக்கு நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் இருப்பது இல்லை என்பது இதன் பொருள் ஆகும்.

  கல்வி அறிவு இல்லாமையால் ஏற்படும் இழிவை இத்தொடர் விளக்குகிறது.

  2.4.2 முயற்சி

  முயற்சி உடையவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடந்து செல்லும் திறம் பெற்றவர்கள் ஆவார்கள். எனவேதான், திருவள்ளுவர் முயற்சி திருவினை ஆக்கும் (திரு-செல்வம்) என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவன் செல்வம் இல்லாதவனாக இருந்தாலும் அவனிடம் முயற்சி இருந்தால் அவனால் செல்வத்தைத் தேடி விட முடியும் என்பதை இது உணர்த்தும்.

  முயற்சி உடையவர்களுக்குத் தேவையான வழிகள் திறக்கும். அந்த வழிகள் திறப்பதற்கான முயற்சிகளை, அவர்களை அறியாமலேயே அவர்கள் செய்து முடித்திருப்பார்கள்.

  • போனகம் என்பது தான் உழந்து உண்டல்

  முயற்சியின் சிறப்பை ஒளவையார்,

  போனகம் என்பது தான் உழந்து உண்டல்

  (69)

  என்று குறிப்பிட்டுள்ளார்.

  போனகம் என்பது உணவைக் குறிக்கும். உழந்து என்பது வருந்தி உழைப்பதைக் குறிக்கும்.

  உழைத்தவர்களுக்கு மட்டுமே உண்பதற்கு உரிமை உண்டு என்பதை இத்தொடர் விளக்குகிறது. தான் முயன்று உழைத்து உருவாக்கிய செல்வத்தால் உண்பதே உணவு எனப்படுவது. தான் முயன்று சம்பாதித்த உணவுப் பொருளைப் பிறருக்கும் கொடுத்து உண்பது பெருமை உடையது ஆகும்.

  • ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

  ஒருவனுக்குச் சிறந்த அழகைத் தருவது தளரா முயற்சி. தளர்ச்சியில்லா முயற்சி இல்லாதவனிடம் இருக்கும் செல்வம் நிலைக்காது. அது குறைந்து கொண்டே போகும். முயற்சி உடையவனிடம் இருக்கும் செல்வமே மேலும் கூடும். எனவே,

  ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

  (86)

  என்று ஒளவையார் பாடியுள்ளார்.

  ஒருவன் முயற்சி உடையவனாக இருப்பதே சிறந்த செல்வமும் அழகும் ஆகும் என்பது இதன் பொருள்.

  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

  இருக்கின்ற செல்வத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வழி எது என்றால் மேலும் முயற்சி செய்து செல்வத்தைச் சேர்ப்பதே ஆகும். அவ்வாறு சேர்க்காமல், இருக்கின்ற செல்வத்தைச் செலவு செய்து கொண்டே இருந்தால் அனைத்துச் செல்வத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லாச் செல்வத்தையும் ஒருவன் இழந்துவிட்டால் அதுவே அவனுக்குப் பெரிய துன்பம் ஆக முடியும்.

  தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

  (44)

  (பாடு = துன்பம்)

  என்னும் தொடரின் வாயிலாக ஒளவையார் இதைத் தெளிவாக்கியுள்ளார்.

  • சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

  முயற்சி செய்து உழைக்காமல் இருப்பவர்கள் சோம்பர் என்று அழைக்கப்படுவார்கள். அவ்வாறு சோம்பராய் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கின்ற செல்வத்தையும் இழந்து திண்டாடுவார்கள். இதை,

  சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

  (36)

  என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

  முயற்சி செய்து உழைக்கின்றவர்களுக்கு எச்செயலையும் செய்வதற்குத் துணிவு ஏற்படும். முயற்சியுடன் துணிந்து செயல்படுகிறவர்களுக்குத் தோல்வி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வாறு முயற்சியும், துணிவும், உழைப்பும் இல்லாமல் சோம்பலுடன் இருப்பவர்கள் துன்பத்துடன் அலைவார்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ளமுடியும்.

  2.4.3 உழவு

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் போற்றிய தொழில் உழவுத் தொழில். இந்த உலகில் உழவுத் தொழில் நடைபெறவில்லை என்றால், மக்கள் உண்ண உணவு இல்லாமல் திண்டாட நேரிடும். ஒளவையார் உழவுத் தொழிலின் பெருமையைக் கொன்றைவேந்தனில் அழகாகப் பாடியுள்ளார்.

  • சீரைத்தேடின் ஏரைத் தேடு

  உழவுத் தொழிலை ஏர்த் தொழில் என்றும் கூறுவார்கள். ஏர் கொண்டு நிலத்தை உழுது உணவுப்பொருள் உற்பத்தி செய்வதால் இதை ஏர்த்தொழில் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏர்த் தொழிலின் சிறப்பை ஒளவையார்,

  சீரைத் தேடின் ஏரைத்தேடு
  (29)

  என்று பாடியுள்ளார்.

  ஒருவன் தனது வாழ்க்கையில் சிறப்பு வேண்டும் என்று தேடினால் ஏர்த் தொழிலைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். பிற தொழில்களைச் செய்கிறவர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு மட்டுமே பொருள் ஈட்டுகிறார்கள். ஆனால் ஏர்த்தொழில் செய்கிறவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருளுடன் உலக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் ஈட்டுகிறார்கள். எனவேதான் ஒளவையார், சிறப்பைத் தேடுபவர்களைப் பார்த்து ஏர்த் தொழிலைத் தேடச் சொல்லியுள்ளார்.

  • மேழிச் செல்வம் கோழைபடாது

  ஏர்த் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுள் முதன்மையானது கலப்பை. கலப்பையை மேழி என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். கலப்பை என்னும் கருவியால் செய்யும் ஏர்த் தொழிலால் உருவான செல்வம் எல்லாக் காலத்திலும் ஒருவனைக் காக்கும் என்பதை அவர்,

  மேழிச் செல்வம் கோழை படாது

  (77)

  என்று பாடியுள்ளார். இந்த உழவுத் தொழிலின் மூலம் ஈட்டிய செல்வம் என்றும் குறைவுபடாது என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.

  • உழுது ஊண் இனிது

  உணவானது அதன் சுவையால் மட்டுமே இனிமை தருவதில்லை. அது எந்த வழியில் வந்தது என்பதன் அடிப்படையிலும் இனிமையைத் தரும் என்று கொன்றை வேந்தன் தெரிவிக்கிறது.

  தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது

  (46)

  என்னும் கொன்றை வேந்தன் தொடர் இக்கருத்தை விளக்குகிறது.

  ஒருவரிடம் அடிமையாக இருந்து அவரை வணங்கிப் பெற்று உண்ணும் உணவு சுவையானதாக இருந்தாலும் அது இனியது அல்ல. உழவுத் தொழிலால் உருவாக்கி உண்ணும் உணவில் சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவே இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.

  2.4.4 விருந்தோம்பல்

  இல்லற வாழ்வின் இனிமையைக் கண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் இல்வாழ்க்கையில் முதன்மையானதாக விருந்தோம்பலைக் கூறி உள்ளனர். விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு உணவு வழங்கும் தன்மையை ஒளவையார் தமது கொன்றைவேந்தனில் சிறப்பாகப் பாடியுள்ளார்.

  உறவினர்களுடன் இணக்கமாய் வாழத் தெரிந்தவனுக்கு மற்றவர்களுடன் இணக்கமாக வாழவும் தெரியும். விருந்தினர்கள், உறவினர்களாக இருந்தாலும் உறவு அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு விருந்து படைக்கும் இன்முகம் கொண்டவர்கள் தமிழ்ப் பெண்கள்.

  • மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

  தங்களிடம் இருக்கும் உணவுப் பொருள்களைப் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ணும் வழக்கமே விருந்தோம்பலின் அடிப்படை. இந்தப் பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள், கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும், தாங்கள் மட்டும் தனியாக உண்போம் என்று கருதாமல் அதையும் விருந்தினருடன் பகிர்ந்து உண்பார்கள்.

  இந்தப் பண்பு உடையவர்களின் வாழ்க்கையில் இன்பம் குடிகொண்டிருக்கும். ஏனென்றால் இவர்கள் பிறர் மகிழ்ந்து உண்பதைப் பார்த்து இன்பம் அடையும் நல்ல குணம் கொண்டவர்கள். இந்த விருந்தோம்பல் பண்பில் மக்கள் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கருதிய ஒளவையார்,

  மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

  (70)

  (மருந்து = அமிர்தம்)

  என்று குறிப்பிட்டுள்ளார். 

  கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும் அதையும் விருந்தினருடன் சேர்ந்து உண்ண வேண்டும் என்பது இதன் பொருள் ஆகும்.

  • விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

  இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை,

  விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

  (83)

  என்று ஒளவையார் பாடியுள்ளார்.

  பொருந்திய ஒழுக்கம் என்பது இல்லற வாழ்க்கையைக் குறிக்கும். விருந்தினரைப் பேணும் பண்பு இல்லாதவர்க்கு இல்லற வாழ்க்கையின் பயன் கிடைப்பது இல்லை என்பது இதன்பொருள்.

  இத்தொடர் விருந்தோம்பலின் சிறப்பை விளக்குவது ஆகும்.

  இவை தவிர, கொன்றை வேந்தன் வாயிலாக, இல்லறத்தின் பெருமை, ஒற்றுமையின் வலிமை, சான்றோர் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:17:20(இந்திய நேரம்)