தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012261.htm-நட்பு-பகுதி 6.1

  • 6.1 நட்பு

    இருவர்க்கு இடையே ஏற்படும் தொடர்புகளில் மிகவும் பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஆகும். நட்பின் பெருமையைச் சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது. பாரிக்கும் கபிலருக்கும் இடையே இருந்த நட்பும், அதியமானுக்கும் ஒளவையாருக்கும் இடையே இருந்த நட்பும், கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பும் அனைவரும் அறிந்த நட்பு ஆகும். நட்பின் பெருமையைத் திருக்குறள்,

    செயற்குஅரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்குஅரிய யாவுள காப்பு
    (781)

    என்று கூறியுள்ளது. திருக்குறள் நல்ல நட்புக் கிடைப்பதை மிகவும் அரியது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நல்ல நட்புக் கிடைத்துவிட்டால் அந்த நட்பே ஒருவனுடைய செயலுக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

    6.1.1 நல்லவர் நட்பும் தீயவர் நட்பும்

    நல்லவர் நட்பு எப்படிப் பட்டது, தீயவர் நட்பு எப்படிப்பட்டது என்பதைச் சிவப்பிரகாசர் பின்வரும் பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

    நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
    அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்
    காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
    போய்முற்றின் என்ஆகிப் போம்
    (38)

    (கேண்மை = நட்பு, அல்லார் = நண்பர் அல்லாதவர். ஆகாது = உதவாது, நல்லாய் = பெண்ணே)

    காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பாடலில் நல்லவர் நட்பிற்கு உவமையாகக் காய் முற்றி, கனி ஆவதையும் தீயவர் நட்பிற்கு உவமையாக இலை முற்றி, சருகு ஆக மாறுவதையும் உணர்த்தியுள்ள பாங்கு உணர்ந்து இன்புறத்தக்கது. நட்பு என்பது ஒன்று. அதில் நன்மை தருவது ஒருவகையாகவும் தீமையைத் தருவது இன்னொரு வகையாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். அது போன்றே செடி என்பது ஒன்று தான். அதில் உள்ள காய் முற்றினால் கனியாகப் பயன்தருகிறது. அதில் உள்ள இலை முற்றினால் சருகாகிப் பயனற்றுப் போகிறது என்று ஒரே பொருளை அடிப்படையாகக் கொண்டு உவமை அமைத்துள்ள தன்மையைக் காணமுடிகிறது.

    6.1.2 தீய நட்பு

    நல்லவருடன் கொண்டுள்ள நட்பையும் தீயவருடன் கொண்டுள்ள நட்பையும் குறிப்பிட்டுள்ள சிவப்பிரகாசர், தீயவர் நட்பு எப்படிப் பட்டது என்பதை மட்டும் பின்வரும் பாடலில் தெரிவித்துள்ளார்.

    கற்றுஅறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
    உற்றுழியும் தீமைநிகழ்வு உள்ளதே - பொற்றொடீ
    சென்று படர்ந்த செழுங்கொடியின் பூமலர்ந்த
    அன்றே மணம் உடையதாம்
    (39)

     

    (கடுநட்பு = ஆழ்ந்த நட்பும், உற்றுழி = நட்புக் கொண்ட உடனே, பொற்றொடீ = தொடி என்னும் நகையணிந்த பெண்ணே)

    கொடியில் பூக்கின்ற மணமிக்க பூவானது பூத்த அன்றே வாடிவிடும் இயல்பைக் கொண்டது. அது போல, கல்வி அறிவு இல்லாத தீயவரிடம் கொண்டுள்ள நட்பும் தோன்றிய அன்றே மறைந்துவிடும் இயல்பு உடையது என்பதை இப்பாடல் விளக்குகிறது. நிலையற்ற நட்பை உணர்த்துவதற்கு நிலையற்ற பூவை உவமைப்படுத்தியுள்ள திறம் போற்றுதற்கு உரியது ஆகும்.

    6.1.3 நட்பில் பிரிவு

    இருவர் ஒன்றாகக் கலந்து நட்புக் கொண்டு வரும்போது அந்த நட்பில் பிரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிவு ஏற்பட்டபின் மீண்டும் நட்புக் கொண்டாலும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று நன்னெறி தெரிவித்துள்ளது.

    நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
    நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
    நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
    புல்லினும் திண்மைநிலை போம்
    (5)

    (நீக்கம் = விலகுதல், நொய்து = இழிவு, புல்லினும் = சேர்ந்தாலும், திண்மை = உறுதி)

    என்னும் பாடலில் நட்பில் பிரிவு கூடாது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமையை அவர் தெரிவித்துள்ளார்.

    நெல்லின் உட்பகுதியில் அரிசி இருக்கும். அதன் வெளிப்பகுதியில் அரிசிக்குப் பாதுகாப்பாய் உமி இருக்கும். அந்த உமியில் பிளவு ஏற்பட்டு அரிசி வெளியே வந்தபிறகு மீண்டும் அந்த உமியைப் பொருத்தி அரிசிக்குப் பாதுகாப்பைக் கொடுக்க இயலாது. அதுபோல இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டால் மீண்டும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று சிவப்பிரகாசர் உணர்த்தியுள்ளார். எனவே நண்பர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படாமல் நட்பைக் காத்துக்கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:21:08(இந்திய நேரம்)