தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012264.htm-அறிஞர்கள்

 • 6.4 அறிஞர்கள்

  கல்வி கற்று அடங்கியவர்களை அறிஞர்கள் என்கிறோம். அவர்கள் எதையும் அறிவால் அணுகுவதுடன் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் அந்த அறிவின் துணையாலேயே போக்கி விடுவார்கள். இத்தகைய அறிவுடையவர்கள் பழி என்றால் அஞ்சுவார்கள். கோடி பொருள் கொடுத்தாலும் பழிநேரும் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

  அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
  செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறை நுதால்
  வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
  கண்அஞ்சு மோஇருளைக் கண்டு
  (34)

  (அது பெறார் = அறிவில்லாதார், செறி = சேரும், பிறைநுதால் = பிறைபோன்ற நெற்றியைக் கொண்ட பெண்ணே)

  என்னும் நன்னெறிப்பாடல், அறிவுடையவர்கள் பழிக்கு அஞ்சுவார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. ஒளி பொருந்திய கண்கள் இருளைக் கண்டு அஞ்சும். ஒளியே இல்லாத குருட்டுக் கண்கள் ஒளியைக் காணுவதும் இல்லை. அவை இருளைக் கண்டு அஞ்சுவதும் இல்லை. அது போல அறிவுடையவர்கள் தம்மேல் வரும் பழியைக் கண்டு அஞ்சுவார்கள், அறிவில்லாதவர்கள் பழியைக் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  6.4.1 அறிஞர் வீரம்

  கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினால் அது மேலும் பெருமை சேர்க்கும், அறிஞர்கள் அறிவுத்திறத்துடன் வீரமும் பெற்று விளங்குவார்கள் என்பதை நன்னெறி தெரிவித்துள்ளது.

  பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
  வீரமொடு காக்க விரைகுவார்-நேரிழாய்
  மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
  கைசென்று தாங்கும் கடிது
  (31)

  (நேரிழாய் = பெண்ணே, வியன் = பெரிய; கடிது = விரைந்து)

  என்னும் பாடலில் அறிஞர்களின் வீரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீரமும் பிறருக்கு உதவும் பொருட்டே வெளிப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உணர்த்துவதற்கு ஓர் உண்மையைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

  நமது உடலில் படுகின்ற அடியை விரைந்து சென்று கை தாங்கிக் கொள்ளும். அதைப்போல, பிறருக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு அறிஞர்கள் வீரத்துடன் விரைந்து செல்வார்கள் என்று நன்னெறி கூறுகிறது.

  இப்பாடலில் வீரம் என்பது, பிறர் துன்பத்தைத் தீர்ப்பது என்று பொருள் தருகிறது.

  6.4.2 அறிஞர் கோபம்

  அறிஞர்கள் பிறர்மீது கோபம் கொண்டாலும் அக்கோபத்தால் பிறருக்குக் கேடு எதுவும் விளைவதில்லை. ஏனென்றால் அறிஞர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. மாறாக உதவும் எண்ணமே மிகுந்திருப்பதால் அவர்கள் கோபப்பட்டாலும் உதவுவார்கள்.

  முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
  கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
  காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
  ஆயினும் ஆமோ அறை
  (28)

  (முனிவினும் = கோபப்பட்டாலும், நல்குவர் = வழங்குவர், நனி = நன்றாக, விளைவில் = விளையாத, எட்டி = ஒருவகைக் காய். அறை = சொல்)

  என்னும் பாடல் அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்வார்கள் என்பதை விளக்குகிறது.

  வாழைக்காய் பழுத்துப் பழமாகாமல் காயாக இருந்தால் கூட உணவுப் பொருளாகி உதவும். ஆனால் எட்டிக்காய் பழுத்திருந்தாலும் எதற்கும் உதவாது. அதைப்போல, அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவுவார்கள். ஆனால், கயவர்கள் அன்பொழுகுமாறு பேசினாலும் பிறருக்கு உதவமாட்டார்கள் என்று சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.

  இப்பாடலில் அறிஞர்கள் உதவி செய்வதை விளக்குவதற்கு வாழைக்காயையும் கயவர்கள் உதவி செய்யமாட்டார்கள் என்பதை விளக்குவதற்கு எட்டிக் கனியையும் உவமையாக நன்னெறி காட்டியுள்ளது. வாழைக்காய், காயாக இருந்தாலும் உணவுக்கு உதவும் என்பதன் மூலம் அறிஞர்கள் கோபப்பட்டாலும் உதவுவார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. எட்டிக்காய் பழுத்த கனியாக இருந்தாலும் எதற்கும் பயன்படாது என்பதன் மூலம் கயவர்களின் உதவாத தன்மை விளக்கப்பட்டுள்ளது.

  6.4.3 அறிஞரா, மன்னனா?

  அறிஞர் உயர்ந்தவரா? மன்னன் உயர்ந்தவனா? என்ற வினாவைச் சிவப்பிரகாசர் எழுப்பியுள்ளார். அந்த வினாவிற்கு அவரே விடையும் தந்துள்ளார். அந்த விடையையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கூறியுள்ளார். அந்த வினாவையும் விடையையும் உள்ளடக்கிய பாடல் இதோ இங்கே தரப்பட்டுள்ளது.

  பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
  மன்னும் அறிஞரைத்தாம் மற்றுஒவ்வார்- மின்னுமணி
  பூணும் பிறஉறுப்புப் பொன்னே அது புனையாக்
  காணும்கண் ஒக்குமோ காண்
  (40)

  (புனையா = அணியா, ஒவ்வார் = ஒப்பாகமாட்டார், பூணும் = அணிகலன்களை அணியும், ஒக்குமோ = ஒப்பாகுமோ)

  மன்னன் பலவகையான அணிகலன்களை அணிந்திருப்பான். ஆனால் அறிஞரோ அத்தகைய அணிகலன்களை அணிந்திருப்பதில்லை. என்றாலும் மன்னனை விடவும் அறிஞரே மதிக்கப்படுவார். மன்னனை விடவும் அறிஞர் எப்படி மதிக்கப்படுவார் என்னும் ஐயம் நம்முள் எழுகிறது அல்லவா? இதே ஐயம் சிவப்பிரகாசருக்கும் எழுந்துள்ளது. இந்த ஐயத்தை அகற்றுவதற்குச் சிவப்பிரகாசர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள்.

  நமது உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகளில் அழகுக்காகப் பல அணிகலன்களை அணிகிறோம். கையில் வளையலும் விரலில் மோதிரமும் மூக்கில் மூக்குத்தியும் கழுத்தில் மாலைகளும் காதில் தோடும் காலில் கொலுசும் அணிகிறோம். ஆனால் கண்ணில் ஏதேனும் அணிகலனை அணிகிறோமா? அணிவதில்லை. அணிகலன் எதுவும் அணியவில்லை என்று நாம் யாராவது கண்ணை இழிவாகக் கூறுவதுண்டா? உயர்வுபடுத்தித் தான் கூறுவோம். பேச்சு வழக்கில் உயர்வான பொருள்களைக் கூறுவதற்கு மட்டுமே கண்ணை உவமையாகக் கூறுவோம்.

  கண்ணைப்போல் காப்பேன், கண்ணே,

  என்றுதான் உவமைப்படுத்துகிறோம். எனவே, அணிகலன்களை அணிகிற உறுப்புகளை விடவும் அணிகலன்கள் எதையும் அணியாத கண்ணை உயர்வாகக் கூறுகிறோம். அதைப் போன்றே, பலவகையான அணிகலன்களை அணிகிற மன்னனை விட அணிகலன் எதுவும் அணியாத அறிஞரே உயர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார். இப்போது கூறுங்கள்! யார் உயர்ந்தவர்? மன்னனா, அறிஞரா?

  இந்தப் பாடலில் மேலும் ஒரு கருத்தையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார். கண் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் கண்ணுக்கு அணிகலனாக அதன் ஒளி இருக்கிறது. அதைப் போன்றே அறிஞரும் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் அவருக்கு அணிகலனாக அறிவு இருக்கிறது. இந்த இயற்கை அணிகலன்களைத் தவிர, செயற்கையாக அணியும் அணிகலன்களால் பயன் எதுவும் இல்லை என்பதும் இதன்மூலம் விளக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:21:29(இந்திய நேரம்)