Primary tabs
- 6.6 உதவி
மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.
உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்.
கொள்ளும் கொடும்கூற்றம் கொள்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்துஅறம் செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார், பேசு (30)(கொள்ளும் = உயிரைப் பறிக்கும், கூற்றம் = யமன், குறுகுதன் முன் = வந்து சேர்வதன் முன், உய்க = பிழைத்துக் கொள்க, அணைகோலி = அணைபோட்டு, பேசு = சொல்)
வெள்ளம் வருவதற்கு முன்பே அந்த வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் அணைபோட்டுவிட வேண்டும். வெள்ளம் வந்தபிறகு அணைபோட முயன்றால் அது முடியாது. வெள்ளத்தின் வேகமானது அணைபோடும் போதே அடித்துச் சென்றுவிடும். அது போல, எமன் வந்து நமது உயிரை எடுப்பதற்கு முன்பே நாம் சேர்த்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து நற்பயனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நன்னெறி கூறியுள்ளது.
பிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் நாம் உதவிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாகக் கருதப்படும். பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. இதைத் திருவள்ளுவர்,
என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருளில்லாத ஏழையால் பெறும் உதவிக்குப் பதில் உதவி செய்ய இயலாது. அப்படிப்பட்ட வறியவர்களுக்குச் செய்வதுதான் உதவி என்பது திருவள்ளுவரின் கருத்து. இதைச் சிவப்பிரகாசர்,
(கைம்மாறு = பதில் உதவி, உகவாமல் = எதிர்பார்க்காமல், மெய்வருந்தி = உடல் வருந்துமாறு, எயிறு = பல், வலியன = கடினமான பொருள்கள்)
என்று பாடியுள்ளார்.
கல்வி அறிவு பெற்ற அறிஞர்கள் பயனை எதிர்பார்க்காமல் பிறர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் செய்கின்ற உதவி எதைப் போன்று இருக்கிறது என்பதையும் நன்னெறி தெரிவித்துள்ளது.
வாயில் உள்ள பல்லானது உணவுப் பொருள்களை மென்று, உணவின் சுவையை நாவிற்கு உணர்த்துகிறது. உணவை மென்று நாவிற்குக் கொடுக்கும் பல், பயன் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதைப்போன்றே கற்றறிந்தவர்கள் பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்வார்கள் என்று இப்பாடல் தெரிவிக்கிறது.
பிறருக்கு உதவி செய்கிறவர்கள் எந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் நன்னெறி கூறியுள்ளது. பெரியவர்கள் தம்மிடம் இருக்கும் பொருளின் அளவுக்கு ஏற்ப மனம் உவந்து உதவி செய்வார்கள். மிகுதியாகப் பொருள் இருக்கும் போது மிகுதியாகக் கொடுத்தும், குறைவாகப் பொருள் இருக்கும் போது குறைவாகக் கொடுத்தும் உதவுவார்கள்.
(பெருக்கம் = மிகுதி, சுருக்கம் = குறைவு, மதி = நிலவு, கலையளவு = வளர்தல், (தேய்தலின் அளவு)
நிலவின் அளவுக்கு ஏற்பவே நிலவின் ஒளி இருக்கும். அதாவது பிறைநிலவாய் இருக்கும்போது அதன் ஒளி குறைவாகவும் அது வளர வளர ஒளி மிகுதியாகவும் இருக்கும். அதைப்போல, பெரியவர்கள் பொருள் குறைவாக இருக்கும் போது குறைவாகவும், பொருள் மிகுதியாக இருக்கும்போது மிகுதியாகவும் கொடுத்து உதவுவார்கள் என்று சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.
பெரியோர்கள் அளவு அறியாமல் உதவி செய்து பொருள் எல்லாம் தீர்ந்து விட்டாலும் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ
நின்று பயன்உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி (17)(எந்தை = எம் தந்தை, நல்கூர்ந்தான் = வறுமை நிலை அடைந்தான், ஈந்து = கொடுத்து, பைந்தொடி = பசும்பொன்னால் ஆன வளையல் அணிந்த பெண்ணே, அரம்பை = வாழைமரம்)
அரம்பை என்பது வாழை மரத்தைக் குறிக்கும். வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்படும். ஒரு வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்பட்டு இல்லாமல் போய்விட்டாலும் அந்த வாழைமரத்தின் கீழ்வளரும் கன்றும் வளர்ந்து உணவாகப் பயன்படும். அதைப்போல, தந்தை தம்மிடம் இருந்த பொருளை எல்லாம், இல்லாதவர்களுக்குக் கொடுத்து வறியவராகி விட்டார் என்று நினைத்து, அவரது மகன் பிறர்க்குக் கொடுப்பதை நிறுத்தி விடுவதில்லை. அவனும் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிசெய்து வாழ்வான் என்று சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.
இப்பாடலில் உதவி செய்து வாழ்கின்ற வள்ளல் மனப்பான்மை கொண்டவரின் குலப்பெருமை விளக்கப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது.
உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள்.
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்
தம்மை மதியார் தமைஅடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல் (16)(இழியினும்= தாழ்ந்தவராக இருந்தாலும், இடர் = துன்பம், அல்கு கழியினும் = சுருங்கிய உப்பங்கழியிலும்)
கடலானது அளவில் மிகப்பெரியது. உப்பங்கழி அளவில் சிறியது. அளவில் பெரிய கடல்நீர், அளவில் சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அதுபோல, சான்றோர்கள் தமது உயர்வைப் பெரிதாகக் கருதாமல், தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் தேடிப்போய் உதவி செய்வார்கள். இப்பாடலில் உதவி செய்வதற்கு உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் பார்க்கத் தேவையில்லை என்ற கருத்து விளக்கப்படுகிறது.
உதவி செய்யும் போது பேதம் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்திய சிவப்பிரகாசர் உதவி தேவைப்படுபவருக்கு உதவ வேண்டும் என்பதை அறிவித்துள்ளார். மேலும் அந்த உதவியைப்பெற விரும்புபவர் சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவராக இருந்தால் அத்தகையோருக்கு உதவி செய்யக்கூடாது என்பதையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.
(தக்கார் = தகுதி உடையவர், ஈவர் = கொடுப்பர், தகார் = தகுதி இல்லாதவர், இல் = இல்லை, மிக்கார் = நல்வழியை மீறிச் செயல்படுபவர், உதவார் = உதவமாட்டார், விழுமியோர் = சிறந்த குணம் உடையவர், எக்காலும் = எந்தக் காலத்திலும், காட்டு முளி = காட்டில் காய்ந்து கிடக்கும புல்)
என்னும் பாடலில் நல்லநெறிப்பட்டு வாழாதவர்களுக்கு உதவக்கூடாது என்பது விளக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் வருகின்ற நீரை நெற்பயிருக்கு இறைத்து ஊற்றுவார்கள். காட்டில் உள்ள பயனற்ற புல்லுக்கு ஊற்றுவார்களா? ஊற்றமாட்டார்கள். அதுபோல, தகுதி உடையவர்களுக்கு மட்டுமே சான்றோர்கள் உதவி செய்வார்கள்; தீயவர்களுக்கு உதவ மாட்டார்கள்.
உதவி தேவைப்படுபவர்களுக்குச் சான்றோர்கள் தாமே முன்வந்து உதவி செய்வார்கள். ஆனால் உதவி செய்வதற்கு முன்வராதவர்களிடமிருந்தும் உதவி பெறவேண்டியிருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.
தங்கட்கு உதவிலர்கைத் தாம்ஒன்று கொள்ளின்அவர்
தங்கட்கு உரியவரால் தாம்கொள்க - தங்கநெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின் பால்
கன்றினால் கொள்ப கறந்து (3)(உதவிலர் = உதவி செய்யாதவர், கைத்தாம் = கையில் இருக்கும் பொருள், உரியவர் = வேண்டியவர், ஆவின் = பசுவின்)
பசுவின் பாலைக் கறக்க விரும்புபவர்கள், முதலில் பசுவின் மடியில் கன்றைப் பால்குடிக்க விடுவார்கள். கன்று பால் குடித்துக் கொண்டிருக்கும் போது அதைப்பிடித்து இழுத்து அருகில் கட்டிவிட்டு, பாலைக் கறப்பார்கள். அவ்வாறு, கன்றை முதலில் பால் கறக்க விடவில்லை என்றால் பசுவின் மடியில் பால்சுரக்காது. பால் சுரக்காத மடியில் இருந்து பால் கறக்க முடியாது அல்லவா? எனவே, பசுவின் பாலைக் கறக்க வேண்டும் என்றால் கன்றுக்குட்டி முதலில் பசுவிடம் பால் குடிப்பது அவசியம். அதைப்போல, உதவி செய்யாதவர் ஒருவரிடம் இருந்து உதவிபெற வேண்டும் என்றால், அவருக்கு வேண்டியவர் மூலமாக முயற்சி செய்து உதவி பெற வேண்டும் என்று நன்னெறி வழி காட்டுகிறது.