தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012263.htm-கல்வி-பகுதி 6.3

 • 6.3 கல்வி

  கல்விக்கு எல்லை கிடையாது. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம். அவ்வாறு, வாழ்நாள் முழுவதும் ஏன் கல்வி கற்க வேண்டும்? அப்படிக் கற்பதால் என்ன பயன்? என்னும் கேள்விகள் எழுகின்றன அல்லவா? இந்தக் கேள்விக்கு வெற்றி வேற்கையில் அதிவீரராம பாண்டியன் பதிலளித்துள்ளார். கல்வி கற்றவர்களை உயர்ந்த பதவிகள் தேடிவரும் என்றும் எந்தக் குடியில் பிறந்தவராக இருந்தாலும் கல்வி கற்றவர்களை அறிஞர்கள் போற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

  அதிவீரராம பாண்டியனின் கருத்துக்கு ஏற்பவே கல்வியின் பெருமையை நன்னெறியும் தெரிவித்துள்ளது. அவற்றை இங்கே காண்போம்.

  6.3.1 உண்மைக் கல்வி

  கல்வி என்பது மனிதனை முழுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது. நன்கு கற்று அறிந்தவன் வீண் ஆரவாரங்களில் காலத்தை வீணாக்கமாட்டான். அறிவுக்கும் மனித உயிருக்கும் உதவும் உண்மைக் கல்வியையே மேலும் மேலும் கற்றுத் தெளிந்து கொண்டிருப்பான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகவே கல்வியைக் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள். அவ்வாறு கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன்னால் கல்வியில் முழுமை அடையாதவர்கள் அஞ்சி ஒடுங்குவார்கள் என்று சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.

  எழுத்துஅறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
  எழுத்துஅறிவார் காணின் இலையாம் - எழுத்துஅறிவார்
  ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டஅளவில்
  வீயும் சுரநீர் மிகை
  (21)

  (அறியார் = அறிவில்லாதவர், இலை = இல்லை, அவிர் = ஒளி, வீயும் = அடங்கும், சுரநீர் = விண்ணிலிருந்து பாயும் நீர். மிகை = மிகுதி)

  என்னும் நன்னெறிப் பாடல் இக்கருத்தை விளக்குகிறது. இதற்குச் சிவனது சடைமுடியையும் வானதியாகிய கங்கையையும் பயன்படுத்தியுள்ளார்.

  பகீரதன் என்பவன் விண்ணுலகில் பாய்ந்து கொண்டிருந்த கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டு வருவதற்காகத் தவம் செய்தான் என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. அதில் பகீரதனின் தவத்திற்கு ஏற்ப, விண்ணுலகக் கங்கை பூமிக்கு வந்து கொண்டிருந்தது. அவ்வாறு வரும்போது அதன் வெள்ளப் பெருக்கு மிகுதியாக இருந்ததால் அந்தப் பெருக்கில் பூமியே மூழ்கி விடும் என்று அனைவரும் அஞ்சினார்கள். கங்கையின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி உதவ வேண்டும் என்று சிவனை நோக்கி, பகீரதன் தவம் செய்தான். பகீரதனின் தவத்திற்கு மனம் இரங்கிய சிவபெருமான், கங்கையின் வெள்ளப் பெருக்கைத் தனது தலையில் உள்ள சடைமுடியில் தாங்கி அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதாக அந்தக் கதை கூறுகிறது.

  இந்தக் கதை நிகழ்வைச் சிவப்பிரகாசர் இப்பாடலில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார். சிவபெருமானின் சடைமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் வெள்ளப்பெருக்கு அடங்குவதைப் போல், உண்மைக் கல்வி அறிவு பெற்றவர்களைக் கண்டதும் ஆரவாரக் கல்வி அறிவு பெற்றவர்கள் அனைவரும் அடங்கி விடுவார்கள் என்று நன்னெறி விளக்குகிறது.

  6.3.2 கற்றவரும் மற்றவரும்

  கல்வி அறிவில் சிறந்து விளங்குகின்றவர்கள் தம்மைப்போல் கல்வி அறிவில் சிறந்தவர்களிடம் சேர்ந்து பழகும் போது அவர்களின் குணம் மேலும் சிறப்பை அடையும். சிறந்த கல்வி அறிவு பெற்றவர்கள், கயவர்களிடம் சேர்ந்து பழகும் போது அவர்கள் தங்கள் கல்விப் பெருமையை இழப்பதுடன் இழிவையும் அடைகிறார்கள்.

  கல்லா அறிவுஇல் கயவர்பால் கற்றுஉணர்ந்த
  நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார்
  கணையில் பொலியும் கருங்கண்ணாய்! -
  நொய்தாம் புணையில் புகும்ஒண் பொருள்
  (25)

  (கனம் = பெருமை, நண்ணார் = அடையமாட்டார், கணை = அம்பு, நொய்து = குறைவு)

  என்னும் நன்னெறிப் பாடல் இந்தக் கருத்தை விளக்கியுள்ளது.

  புணை என்பதற்குத் தெப்பம் என்று பொருள். தெப்பம் நீரில் மிதக்கும் இயல்புடையது. எவ்வளவு கனமான பொருளைத் தெப்பத்தில் வைத்தாலும் அதுவும் தெப்பத்துடன் மிதக்கும்; தனது கனத்தை இழக்கும். அதைப்போல, கயவர்களுடன் பழகும் கற்றவர்களும் தங்கள் பெருமையை இழப்பார்கள். இப்பாடல் மூலம் கற்றவர்கள் கல்வி கற்காத கயவர்களுடன் பழகினால் தங்கள் பெருமையை இழக்க நேரிடும் என்பதைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

  6.3.3 கண்அளவா, விண்அளவா?

  கல்வி கற்றவர்களின் பெருமையை அவர்களது அறிவின் துணைகொண்டுதான் அறிய முடியும். அவ்வாறு அறிய முயலாமல் கல்வி கற்றவர்களின் உடல் அழகைக் கொண்டோ, உடை அழகைக் கொண்டோ அறிய முயன்றால் உண்மையான அறிஞர் யார் என்பதை அறிந்து கொள்ள இயலாது.
   

  உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
  கடலின் பெருமை கடவார் - மடவரால்
  கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்
  விண்அளவா யிற்றோ விளம்பு
  (26)

  (கடவார் = அறியார்; விளம்பு = சொல், மடவரால் = பெண்ணே)

  என்னும் நன்னெறிப் பாடல், உண்மை அறிஞரை அறிவதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளது.

  கதிரவனின் ஒளி நமது பார்வை செல்லும் தொலைவில் மட்டும் பரந்து உள்ளதா அல்லது விண்முழுவதும் பரந்து உள்ளதா என்று ஒரு கேள்வி கேட்கிறார். இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சிவப்பிரகாசர் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. ஏனெனில் கதிரவனின் ஒளி, உலகம் முழுவதும் பரந்து காணப்படுவதை அனைவரும் அறிந்துள்ளார்கள். இது உலக உண்மை.

  விண்முழுவதும் பரந்து காணப்படும் கதிரவனின் ஒளியை எவ்வாறு நமது கண்ணால் அளவிட முடியாதோ அதைப்போல, கற்றவர்களின் அறிவுத்திறத்தை நமது கண்ணால் அளவிட முடியாது. அறிவால்தான் அளவிட முடியும் என்று நன்னெறி கூறியுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:21:26(இந்திய நேரம்)