தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விகுதி - அறிமுகம்

 • 6.1 விகுதி - அறிமுகம்

  பகுபதத்தில் கடைசியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும். இதனை இறுதிநிலை என்றும் கூறுவர். இந்த விகுதியைப் பலவாறாகப் பகுத்துக் கூறுகிறது தமிழ் இலக்கணம்.

  • விகுதிகளின் எண்ணிக்கை

  நன்னூல் ‘அன் என்று தொடங்கி, ‘உம் என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அவை,

  அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்
  அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்
  அம், ஆம், எம், ஏம், ஓம்
  கும், டும், தும், றும்
  ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர்,
  க, ய, உம் - என்பனவாம்.

  இந்த விகுதிகளை நன்னூல் நூற்பா (140) தொகுத்துக் கூறுகிறது. இவற்றுள் கு, டு, து, று என்னும் நான்கும் தன்மை ஒருமை விகுதிகள். இவற்றுக்குள் து, று, டு என்னும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளும் அடங்கியுள்ளன. ஆகவே விகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆகும்.
   

  • விகுதிகளின் வகைகள்

  விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  (1)
  வினைமுற்று விகுதிகள்
  (2)
  பெயர் விகுதிகள்

  6.1.1 தெரிநிலை வினைமுற்று விகுதிகள்

  காலத்தை வெளிப்படையாகக்காட்டும் வினைமுற்றுகள் தெரிநிலை வினை முற்றுகள் என்பதை முன்னரே அறிந்துள்ளீர்கள். இவ்வகையில் தெரிநிலை வினைமுற்றுகளுக்கு விகுதியாய் வருபவை தெரிநிலை வினைமுற்று விகுதிகள் ஆகும். இத்தெரிநிலை வினைமுற்று விகுதிகள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களிலும் வருவன.

  I. படர்க்கை வினைமுற்று விகுதிகள்:

  (1)
  நடந்தனன், நடந்தான்
  - அன் - ஆன்
  - ஆண்பால்
  (2)
  நடந்தனள், நடந்தாள்
  - அள், ஆள்
  - பெண்பால்
  (3)
  நடந்தனர், நடந்தார் நடப்ப, நடமார்
  - அர், ஆர், - ப, மார்
  - பலர்பால்
  (4)
  நடந்தன, நடவா
  - அ, ஆ
  - பலவின்பால்
  (5)
  குறுந்தாட்டு, நடந்தது, போயிற்று
  - டு, து, று
  - ஒன்றன்பால்

  (குறுந்தாட்டு = குறுகிய தாள்களை உடையது.)

  II. தன்மை வினைமுற்று விகுதிகள்

  தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம்.

  முதலில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளைக் காண்போம்.

  கு, டு, து, று. என்னும் விகுதிகள்:
  யான்
  நடக்கு (நடப்பேன்) உண்டு (உண்டேன்) நடந்து (நடந்தேன்) சேறு (செல்வேன்)

  இவை இன்று வழக்கில் இல்லை. இவற்றோடு என், ஏன், அல், அன் என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.

  யான்

  நடந்தனென், நடந்தேன் - என், ஏன்

  நடப்பல், நடப்பன் - அல், அன்

  நடப்பல் என்பது நடப்பேன் என்று பொருள்படும்.

  தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகள்:

  அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்

  யாம்

  நடப்பம் - நடப்பாம் - அம், ஆம் நடப்பெம் - நடப்பேம் - எம், ஏம் நடப்போம், - ஓம்

  யாம்

  நடக்கும், உண்டும், நடந்தும், சேறும் - கும், டும், தும், றும்.

  III. முன்னிலை வினைமுற்று விகுதிகள்

  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்:

  நடந்தனை, நடந்தாய், நடத்தி - ஐ, ஆய், இ முன்னிலை ஒருமை விகுதிகள்

  (நடத்தி என்பது நடப்பாய் என்று பொருள்படும்.)

  முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்:

  நடமின்
  - மின்
  நடந்தனிர்
  - இர்
  நடந்தீர்
  - ஈர்
  முன்னிலைப் பன்மை விகுதிகள்

  இவற்றோடு வியங்கோள் வினைமுற்று விகுதிகளையும் ‘செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியையும் சேர்த்துக் காண்பது பொருத்தமாகும்.

  வியங்கோள் வினைமுற்று விகுதிகள்:

  நிலீயர்
  - ஈயர்
  நிற்க
  - க
  வாழிய
  - ய

  செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி, ‘உம் என்பதாம்.

  அவன் நடக்கும்
  - உம்

  6.1.2 குறிப்பு வினைமுற்று விகுதிகள்

  வினைமுற்று விகுதிகளில் அடுத்ததாக வருபவை குறிப்பு வினைமுற்று விகுதிகள் ஆகும். இவை குறிப்பாகக் காலங்காட்டுவன என்பதால், மேலே கண்ட விகுதிகளுள், காலம் காட்டும் விகுதிகளைத் தவிர மற்ற விகுதிகளான, அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏம், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்னும் 22 விகுதிகளோடு அந்தக் குறிப்பு வினைமுற்றுகள் வரும். இவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் கீழே காண்போம்.

  கரியன், கரியான் கரியள், கரியாள் கரியர், கரியார் கரிய கருந்தாட்டு, கரிது, குழையிற்று
  - அன், ஆன் - அள், ஆள் - அர், ஆர் - அ - டு, து, று
  படர்க்கை
  கரியென், கரியேன் கரியம், கரியாம் கரியெம், கரியேம் கரியோம்
  - என், ஏன் - அம், ஆம் - எம், ஏம் - ஓம்

  தன்மை

  கரியை, கரியாய் வில்லி கரியிர், கரியீர்
  - ஐ, ஆய் - இ - இர், ஈர்
  முன்னிலை

  இதுவரையில் வினைமுற்று விகுதிகளைக் கண்டோம். இனிப் பெயர் விகுதிகளைக் காண்போம்.

  6.1.3 எச்சவினை விகுதிகள்

  எச்சவினை விகுதிகளையும் இங்குக் காண்போம்.

  தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள்:

  நடந், நடக்கின், நடவா, நடக்கும் - இவற்றுள் , உம் விகுதிகள்.

  குறிப்புப் பெயரெச்ச விகுதிகள்:
  சிறி
  -
  பெரி
  -
  தெரிநிலை வினையெச்ச விகுதிகள்:

  தெரிநிலை வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு.

  உ, இ, ய், பு, ஆ, ஊ, என, ஏ, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே, து முதலியன. இவற்றில் மல், மை, மே, து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன.

  இனி இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

  நடந்து, சென்று
  டி, நாடி
  போய்
  ய்
  உண்ணா
  உண், ஆ
  உண்டால், பார்த்தால்
  ஆல்
  உண்ணாமல், உண்ணாமை
  மல், மை
  உண்ணாமே, உண்ணாது
  மே, து

  இனி, குறிப்பு வினையெச்ச விகுதிகளைக் காண்போம்.

  குறிப்பு வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு :

  அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்னும் 9 விகுதிகள்.

  இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

  மெல் - அ
  அன்றி - றி
  அல்லது - து
  அல்லால் - ஆல்

  என வருவன.

  6.1.4 பெயர் விகுதிகள்

  பெயர்ப்பகுபத விகுதிகளையும் நன்னூல் நூற்பா சுட்டிக் காட்டுகின்றது. அவை,

  அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ

  என்பவை. இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

  சிறியன், சிறியான்
  - அன், ஆன்
  சிறியள், வானத்தாள்
  - அள், ஆள்
  குழையர், வானத்தார் தேவிமார்
  - அர், ஆர், மார்

  சிறியது, சிறிய, பொன்னி - து, அ, இ

  இவற்றோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம்.

  வடமான், கோமான், கோக்கள்
  - மன், மான், கள்
  வை, இவை
  - வை.
  எந்தை, எங்கை,
  - தை, கை
  எம்பி, எம்முன், தோன்றல்
  - பி, முன், அல்
  பிறன், பிறள், பிறர், அவ்
  - ன், ள், ர், வ்

  6.1.5 தொழிற்பெயர் விகுதிகள்

  பெயர்ப் பகுபதங்களில் தொழிற்பெயர்களும் அடங்கும். எனவே தொழிற்பெயர் விகுதிகளையும் இங்குச் சேர்த்துக் காண்போம்.

  தொழிற்பெயர் விகுதிகள் பின்வருமாறு:

  தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் 19 விகுதிகள். இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

  நடததல் - தல்; ஆடல் - அல்; வாட்டம் - அம்; கொலை - ; பார்வை - வை; போக்கு - கு; நடப்பு - பு; நடவாமை - மை.

  6.1.6 பண்புப் பெயர் விகுதிகள்:

  பண்புப் பெயர்களுக்கு அமைந்த விகுதிகள் பத்து. அவை,

  மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

  நன்மை - மை
  தொல்லை - ஐ
  மாட்சி - சி
  மாண்பு - பு
  மழவு - வு
  நன்கு - கு
  நன்றி - றி
  நன்று - று
  லம் - அம்
  நன்னர் - அர்

  6.1.7 பிறவினை விகுதிகள்

  பிறவினை விதிகளை முன்பே அறிந்துள்ளீர்கள். அவை, வி, பி, கு, சு, டு, து, பு, று என்பனவாம்.

  இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

  செய்வி - வி
  நடப்பி - பி
  போக்கு - கு
  பாய்ச்சு - சு
  உருட்டு - டு
  நடத்து - து
  எழுப்பு- பு
  துயிற்று - று

  என்பன.

  6.1.8 விகுதிகள் புணர்ந்து கெடுதல்

  சில விகுதிகள் புணர்ந்து கெடுகின்றன. எனவே வழக்கில் அச் சொல்லில் அவ்விகுதிகள் வெளிப்படுவதில்லை.புணர்ந்து கெட்ட விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள்:.

  ஆய் விகுதி புணர்ந்த சொல்:

  நீ நட; நீ நடப்பி; நீ செல் - இவற்றில் ஆய்விகுதி புணர்ந்து கெட்டது. ‘நீ நடப்பாய் எனவராமல் 'நீ நட' என்று வருதலே மரபாயிற்று.

  பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெடல்:

  கொல்களிறு, ஓடாக்குதிரை இவற்றில் பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன. இவற்றில் கொன்-அ; ஓடா-அ எனும் விகுதிகள் கெட்டன.

  தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெடல்:

  அடி, கேடு, - இவற்றில் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. அடித்தல், கெடுதல், என்பவை விகுதி கெட்டு அடி, கேடு என வந்துள்ளன.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  விகுதியின் இலக்கணத்தைக் கூறுக.
  2.
  நன்னூலார் கூறும் விகுதிகள் எத்தனை?
  3.
  விகுதிகளை முதல்நிலையில் எவ்வாறு பிரித்துக் காணலாம்?
  4.
  வினைமுற்று விகுதிகளின் வகைகள் எத்தனை? எடுத்துக் காட்டுத் தருக.
  5.
  தொழிற் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக.
  6.
  பண்புப் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
  7.
  புணர்ந்து கெடும் விகுதிகளை விளக்குக.
புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 17:32:52(இந்திய நேரம்)