தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அல்வழியில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

  • 5.1 அல்வழியில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

    வன்தொடர்க் குற்றியலுகரம் நீங்கிய, மற்ற ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் அல்வழிப் புணர்ச்சியில் மிகாது; இயல்பாகும்.

    சான்று:

    காடு + கொடிது = காடு கொடிது (நெடில் தொடர்)
    எஃகு + பெரிது = எஃகு பெரிது (ஆய்தத் தொடர்)
    வரகு + சிறிது = வரகு சிறிது (உயிர்த்தொடர்)
    வந்து + தந்தான் = வந்து தந்தான் (மென்தொடர்)
    செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான் (இடைத் தொடர்)

    இவற்றில் காடு கொடியது, எஃகு பெரிது, வரகு சிறிது என்பன எழுவாய்த் தொடர், வந்து தந்தான், செய்து கொடுத்தான் என்பன வினையெச்சத் தொடர்.

    நூற்பாவில் வன்தொடர் அல்லன முன்மிகா என்று கூறப்பட்டிருப்பதால், வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.

    சான்று:

    கொக்கு + பறந்தது = கொக்குப் பறந்தது
    எடுத்து + கொடுத்தான் = எடுத்துக் கொடுத்தான்
    கற்று + தந்தான் = கற்றுத் தந்தான்
    பார்த்து + சிரித்தாள் = பார்த்துச் சிரித்தாள்

    இவற்றில் கொக்குப் பறந்தது எழுவாய்த் தொடர். மற்றவை வினையெச்சத் தொடர்.

    அல்வழியில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது எனக் கூறப்பட்டது. சான்று: வந்து தந்தான். இவ்விதிக்கு மாறாகச் சில மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வருகின்ற வல்லினம் மிகுதல் காணப்படுகிறது.

    ஏழாம் வேற்றுமைக்கு இடப்பொருள், காலப்பொருள் என்னும் இருவகைப் பொருள்கள் உண்டு. இவற்றுள் இடப்பொருளை உணர்த்துகின்ற ‘அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு; ஆண்டு, ஈண்டு, யாண்டு’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகும்.

    சான்று:

    அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
    இங்கு + சென்றான் = இங்குச் சென்றான்
    உங்கு + தந்தான் = உங்குத் தந்தான்
    எங்கு + போனான் = எங்குப் போனான்?

    ஆங்கு + கண்டாள் = ஆங்குக் கண்டாள்
    ஈங்கு + சென்றாள் = ஈங்குச் சென்றாள்
    ஊங்கு + தந்தாள் = ஊங்குத் தந்தாள்?
    யாங்கு + போனாள் = யாங்குப் போனாள்?

    ஆண்டு + கண்டோம் = ஆண்டுக் கண்டோம்
    ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்
    யாண்டு + போனாய் = யாண்டுப் போனாய் ?

    ஆனால், ஏழாம் வேற்றுமைக்கு உரிய மற்றொரு பொருளான காலப்பொருளை உணர்த்துகின்ற ‘அன்று, இன்று, என்று, பண்டு, முந்து’ என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வருகின்ற வல்லினம் மிகாது.

    சான்று:

    அன்று + கொடுத்தேன் = அன்று கொடுத்தேன்
    இன்று + கண்டேன் = இன்று கண்டேன்
    என்று + காண்பேன் = என்று காண்பேன்
    பண்டு + தந்தேன் = பண்டு தந்தேன்
    முந்து + பெற்றேன் = முந்து பெற்றேன்

    (பண்டு - முன்னர்; முந்து = முன்னமே)

    இவையாவும் சொல்லால் அல்வழியும், பொருளால் வேற்றுமையும் ஆதலால், சில அல்வழி விதியையும் (அன்று, இன்று முதலியன), சில வேற்றுமை விதியையும் (அங்கு, இங்கு முதலியன) பெற்றன.

    அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் கட்டாயம் மிகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு. வினைத்தொகையில் மட்டும் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகின்ற வல்லினம் மிகாது.

    சான்று:

    ஈட்டு + புகழ் = ஈட்டு புகழ் (ஈட்டிய, ஈட்டுகின்ற, ஈட்டும் புகழ்)

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 10:25:57(இந்திய நேரம்)