Primary tabs
5.7 திசைப்பெயர்ப் புணர்ச்சி
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் திசைப்பெயர்கள் ஆகும். இவையாவும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும். மேலும் கிழக்குத் திசையைக் குறிக்க, குணக்கு என்ற சொல்லும், மேற்குத் திசையைக் குறிக்க, குடக்கு என்ற சொல்லும் இலக்கியங்களில் வழங்குகின்றன. குணக்கு, குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும்.
- திசைப்பெயரோடு திசைப்பெயரும், பிறபெயரும் புணரும் முறை
குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டு நிலைமொழியில் இருக்கும் திசைப்பெயர்களோடு, வருமொழியில் மற்றத் திசைப்பெயர்களும், பிற பெயர்களும் வந்து புணரும் போது, நிலைமொழியின் ஈற்றில் நிற்கும் ‘கு’ என்னும் உயிர்மெய்யும், அதன் அயலில் (இடப்புறத்தில்) நிற்கும், ‘க’ கர மெய்யும் நீங்குதலும், ஈற்று உயிர்மெய் (கு) நீங்கி, அதன் அயலில் நிற்கும் றகரமெய் னகரமெய்யாகவும், லகர மெய்யாகவும் திரிதலும் ஆகும் புணர்ச்சியைப் பெறும் என்கிறார் நன்னூலார்.
திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற (நன்னூல், 186)(உயிர்மெய் - கு என்பதாகும்)
நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும் (கு என்பதும்) கவ்வொற்று நீங்குதல், குணக்கு, குடக்கு, வடக்கு என்பனவற்றிற்கும், றகரம் னகரமாகத் திரிதல் தெற்கு என்பதற்கும், றகரம் லகரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் ஆகும். நூற்பாவில் ‘பிற’ என்றதனால், கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தின் அகர உயிர் நீங்கி, முதல் நீண்டு வருதலும் கொள்ளப்படும்.
எனவே, இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார் என்பது புலனாகின்றது. அவற்றினைச் சான்றுடன் கீழே காண்போம்.
1.
ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்
சான்று:
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + திசை = வடதிசை
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
வடக்கு + நாடு = வடநாடு
குடக்கு + மலை = குடமலை
குடக்கு + நாடு = குடநாடு
குணக்கு + நாடு = குணநாடுஇச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள திசைப்பெயர்களின் ஈற்று உயிர்மெய்யும், அதன் அயலே நின்ற ககரமெய்யும் நீங்கியமை காணலாம்.
2.
றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்
சான்று:
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + திசை = தென்றிசை (தென்திசை)
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + நாடு = தென்னாடுஇச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி, அதன் அயலே நின்ற றகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது காணலாம்.
3.
றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்
சான்று:
மேற்கு + நாடு = மேல்நாடு
மேற்கு + திசை = மேல்திசைஇச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள மேற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி, அதன் அயலே நின்ற றகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது காணலாம்.
4.
ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்
சான்று:
கிழக்கு + நாடு = கீழ்நாடு
கிழக்கு + திசை = கீழ்த்திசைஇச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள கிழக்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய்யும், கவ்வொற்றும் நீங்கி, அவற்றின் அயலே நின்ற ழ என்பதில் அகர உயிர் நீங்கி, ‘கி’ என்னும் முதல் எழுத்து ‘கீ’ என நீண்டது காணலாம்.
மேல், கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு.
சான்று:
மேல் + நாடு = மேலை நாடு
கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரைதிசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும், பிறபெயர்களோடும் புணரும்போது, மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு என்பது பெறப்படும்.
சான்று:
தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு
கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு
வடக்கு + திசை = வடக்குத் திசை
மேற்கு + திசை = மேற்குத் திசை- தெங்கு முன்னர்க் காய்
தெங்கு என்னும் நிலைமொழியின் முன் காய் என்னும் சொல் வருமொழியாக வந்தால், தெங்கு என்னும் அந்நிலைமொழியின் முதல் நீண்டு அதன் ஈற்றில் உள்ள கு என்ற உயிர்மெய் நீங்கும்.
தெங்குநீண்டு ஈற்றுஉயிர் மெய்கெடும் காய்வரின் (நன்னூல், 187)
(தெங்கு - தென்னை மரம்)
சான்று:
தெங்கு + காய்
தேங்கு + காய் (முதல் நீளல்)
தேங் + காய் (ஈற்று உயிர்மெய் நீங்கல்)
= தேங்காய்