தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுவனவும் மிகாதனவும்

  • 5.2 வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுவனவும் மிகாதனவும்

    ஆறுவகைக் குற்றியலுகரங்களுள் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையில் மிகுவன, ஒற்று இடையில் மிகாதன என்ற இருவகையில் வருகின்றன. (ஒற்று - மெய் எழுத்து)

    • ஒற்று இடையில் மிகுவன

    சான்று:

    ஆடு + கால் = ஆட்டுக்கால் (நெடில் தொடர்)
    வயிறு + பசி = வயிற்றுப்பசி (உயிர்த் தொடர்)

    (ஆட்டுக்கால் - ஆட்டினது கால், ஆறாம் வேற்றுமைத் தொகை; வயிற்றுப்பசி - வயிற்றின் கண் பசி, ஏழாம் வேற்றுமைத் தொகை)

    இவை, ஒற்று இடையில் மிக்கவை ஆகும். ஆடு என்ற நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் இடையில் டகர ஒற்றும், வயிறு என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகத்தின் இடையில் றகர ஒற்றும் மிகுந்தன. இவை ஆடு கால், வயிறு பசி என்று இடையில் ஒற்று மிகாமல் வருவது இல்லை.

    • ஒற்று இடையில் மிகாதன

    சான்று:

    நாகு + கால் = நாகு கால் (நெடில் தொடர்)
    வரகு + சோறு = வரகு சோறு (உயிர்த் தொடர்)

    (நாகு - பசு; நாகு கால் - நாகினது கால், பசுவினது கால் - ஆறாம் வேற்றுமைத் தொகை; வரகு சோறு - வரகு என்னும் தானியத்தால் ஆக்கப்பட்ட சோறு, மூன்றாம் வேற்றுமைத் தொகை)

    இவை ஒற்று இடையில் மிகாதவை ஆகும். இவை நாக்குக் கால், வரக்குச் சோறு என்று இடையில் ஒற்று மிகுந்து வருவது இல்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 10:30:49(இந்திய நேரம்)