Primary tabs
5.3 வேற்றுமையில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்
வேற்றுமைப் புணர்ச்சியில் இடைத்தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர்க் குற்றியலுகரம், ஒற்று இடையில் மிகாத உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றின் முன் வருகின்ற வல்லினம் இயல்பாகும்.
இடைத்தொடர், ஆய்தத் தொடர், ஒற்று இடையில்
மிகா நெடில், உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
(நன்னூல், 182)
சான்று:
மார்பு + கடுமை= மார்பு கடுமை (இடைத்தொடர்)எஃகு + பெருமை= எஃகுபெருமை (ஆய்தத்தொடர்)நாகு + கால்= நாகு கால் (ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர்)வரகு + சோறு= வரகு சோறு (ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர்)(மார்பு கடுமை - மார்பினது கடுமை; எஃகு பெருமை - எஃகினது பெருமை, எஃகு - வேர். இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.)
- ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் வல்லினம் வேற்றுமையில் மிகுதல்
ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் இயல்பாகும் எனவே, ஒற்று இடையில் மிகும் அவ்விரு குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் என்பது பெறப்படும்.
சான்று:
ஆடு + கால் = ஆட்டுக்கால்
வயிறு + பசி = வயிற்றுப்பசிமேலும், இந்நூற்பாவில் வேற்றுமையில் மிகா எனப்பட்ட குற்றியலுகரங்களில் கூறப்படாத வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும்.
சான்று:
பாக்கு + தின்றான் = பாக்குத் தின்றான் (பாக்கைத் தின்றான்)
பாட்டு + பாடினாள் = பாட்டுப் பாடினாள் (பாட்டைப் பாடினாள்)
கொக்கு + சிறகு = கொக்குச் சிறகு (கொக்கினது சிறகு)இச்சான்றுகளில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம்.
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி (குரங்கினது குட்டி)
வண்டு + கால் = வண்டுக்கால் (வண்டினது கால்)
கூண்டு + கிளி = கூண்டுக் கிளி (கூண்டின்கண் கிளி)இச்சான்றுகளில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம்.
இதுகாறும் கூறியவற்றிலிருந்து, எந்த எந்தக் குற்றியலுகரங்களுக்கு முன் வரும் வல்லினம் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும், மிகாது என்பது பற்றி மூன்று கருத்துகள் பெறப்படுகின்றன. அவை வருமாறு.
1.
ஆய்தத் தொடர், இடைத் தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் மிகா (இயல்பாகும்).
2.
ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர், ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர், வன்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி, வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியலும் மிகும்.
3.
மென்தொடர்க் குற்றியலுகரத்துக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழியில் மிகா; வேற்றுமையில் மிகும்.