தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.8 தொகுப்புரை

    இதுகாறும் ஆறுவகைக் குற்றியலுகரங்களின் புணர்ச்சி பற்றியும், திசைப்பெயர்களின் புணர்ச்சி பற்றியும் நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம். அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

    அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்; ஏனைய ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது.

    வேற்றுமைப் புணர்ச்சியில் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் ஒற்று இடையில் மிகுதல், ஒற்று இடையில் மிகாதல் என்னும் இருவகையாக வரும்.

    வேற்றுமையில் இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.

    வேற்றுமையில் வன்தொடர், மென்தொடர் என்னும் குற்றியலுகரங்கள் முன் வரும் வல்லினம் மிகும்.

    வேற்றுமையில் நெடில்தொடர், உயிர்த்தொடர் என்னும் குற்றியலுகரங்களில் ஈற்றில் வரும் ட, ற என்னும் மெய்கள் இரட்டிக்கும்.

    மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சிலவும், பிற குற்றியலுகரச் சொற்கள் சிலவும் ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்று வருதல் உண்டு.

    வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, குணக்கு, குடக்கு ஆகியன திசைகளைக் குறிக்கும் பெயர்கள்.

    வடக்கு, குணக்கு, குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் புணர்ச்சியில், ஈற்று உயிர்மெய் குவ்வும், அதன் அயலே உள்ள கவ்வும் நீங்கி வருமொழிகளோடு புணரும்.

    தெற்கு என்பதில் உள்ள றகரம் னகரமாகவும், மேற்கு என்பதில் உள்ள றகரம் லகரமாகவும் திரியும்.

    கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தில் உள்ள அகர உயிர் நீங்கி, முதல் எழுத்து நீண்டு வரும். இவற்றை எல்லாம் இப்பாடத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுள் சில வேற்றுமையில் எவ்வாறு திரியும்?
    2.
    கருப்புவில் - பிரித்து எழுதுக.
    3.
    மருந்து + பை = வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும்?
    4.
    பண்டு + காலம் - சேர்த்து எழுதுக.
    5.
    கிழக்குத் திசையையும், மேற்குத் திசையையும் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
    6.
    நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும், கவ்வொற்றும் நீங்கிப் புணரும் திசைப்பெயர்கள் யாவை?
    7.
    திசைப்பெயர்களில் றகரமெய் னகரமெய்யாகத் திரியும் திசைப்பெயர் யாது?
    8.
    தெற்கு + நாடு - எவ்வாறு புணரும்?
    9.
    புணர்ச்சியில் முதல் எழுத்து நீண்டு வரும் திசைப்பெயர் எது?
    10.
    தேங்காய் - பிரித்துக் காட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 11:59:00(இந்திய நேரம்)