தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-4.1-இருநூற்று இருபத்து ஆறாம் பாட்டும் இருநூற்று இருபத்து எட்டாம் பாட்டும்

  • 4.1 இருநூற்று இருபத்து ஆறாம் பாட்டும் இருநூற்று இருபத்து எட்டாம் பாட்டும்

    226ஆம் பாட்டு செற்றன் றாயினும் எனத் தொடங்குவது. ஆறடிகளை உடையது. இப்பாட்டு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது மாறோக்கத்து நப்பசலை என்ற புலமகளால் பாடப் பெற்றது (துஞ்சிய = இறந்த). 228ஆம் பாட்டு கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே எனத் தொடங்குவது; பதினைந்து அடிகளை உடையது. இப்பாட்டு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது ஐயூர் முடவனார் என்ற புலவராற் பாடப் பெற்றது.

    4.1.1 கிள்ளிவளவனும் நப்பசலையாரும்

    சோழன் கிள்ளி வளவன் புகழ்மிக்க வேந்தன். இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். இவ்வேந்தன் செய்யுள் இயற்றுதலில் வல்லவன். இவன் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உள்ளது (173). இவ்வேந்தன் மீது புலவர்கள் பாடியுள்ள பதினேழு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இவன் குளமுற்றம் என்ற ஊரில் இறந்துபட்டமையால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் பெற்றான். இவன் இறந்த போது பிரிவாற்றாது வருந்தி மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்ற புலவர் மூவர் வருந்திப் பாடினர். அவற்றுள் இரண்டு பாடல்கள் நமக்குப் பாடமாக அமைந்துள்ளன.

    பாட்டும் கருத்தும்

    சோழன் கிள்ளிவளவன் இறந்துவிட்டான். மக்களும் புலவர்களும் மனம் வருந்திக் குழுமியிருக்கின்றனர். ஆற்றல் மிக்க இப்பெருவேந்தனின் உயிரைக் காலன் எப்படி வந்து கவர்ந்திருக்க முடியும் என்று பலரும் கருதினர். அந்தச் சூழலில் நப்பசலையாரின் பாட்டுப் பிறந்தது.

    “நெருங்கி வரும் போரில் தன்னை எதிர்த்து நிற்கும் பகைவரை எதிர்நின்று வெல்லுகின்ற படையை உடையவன் கிள்ளிவளவன்; அவ்வரசன் வலிமை மிக்க தேரைக் கொண்டவன்; பொன்னாலாகிய மாலையை அணிந்தவன். இத்தகையவன் உயிரைக் கூற்று (எமன்) எப்படிக் கவர்ந்திருக்க முடியும்? கூற்றுவன் தன் மனத்தே கறுவு கொண்டவனாயினும் வெளிப்படத் தன் கோபத்தை அவ்வேந்தனிடம் காட்டியிருக்க இயலாது; போர் செய்யும் நோக்கோடு நெருங்கி வந்த கையோடு உடம்பைத்தொட்டுச் சோழன் வருந்தச் செய்திருந்தால் அக்கூற்றுவன் பிழைத்திருக்க முடியாது. எனவே கூற்றுவன் பாடுகின்றவர்களைப் போலத் தோன்றி, கையால் தொழுது ‘உயிரைக் கொடுத்துவிடு’ என இரந்து பெற்றிருக்க வேண்டும்" என்பது பாட்டின் பொருளுரை.

    காலனும் அஞ்சுகின்ற பேராற்றல் உடையவன் என்பது பாட்டின் கருத்தாகும்.

    4.1.2 கிள்ளிவளவனும் ஐயூர் முடவனாரும்

    சோழன் கிள்ளிவளவன் இறப்பிற்கு வருந்தி ஐயூர் முடவனார் பாடிய பாடல் (228) இது. பழங்காலத்தில் புகழ்பெற வாழ்ந்து இறந்தவர்களை மண்ணால் சமைத்த பெரிய தாழியில் இட்டுப் புதைப்பது வழக்கம். இறந்த கிள்ளிவளவனின் புகழுக்குப் பொருந்தத் தாழி பெரியதாக அமைய வேண்டுமே என்று கருதினார் புலவர் ஐயூர் முடவனார். எனவே கலம் செய்யும் வேட்கோவரை (குயவர்) நோக்கிக் கூறுகின்றார்:

    “சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! உன்னுடைய சூளை இப்பழைய ஊரில் அகன்ற பெரிய இடத்தில் உள்ளது. அந்தச் சூளையிலிருந்து புகை எழுந்து விரிந்து பரந்த வானத்தில் சென்று நிற்கும். அப்போது இருள் ஓரிடத்தில் செறிந்து நிற்பது போல் தோன்றும். இத்தகு சூளையில் கலங்களைச் செய்யும் குயவனே! நீ மிகவும் இரங்கத்தக்கவன் ஆனாய்! நீ மிகப்பெரிய வருத்தம் அடைவாய்! கிள்ளிவளவனின் சேனை நிலம் முழுதும் பரந்து நின்றது. வானத்தின் கண் விளங்கும் சூரியன், அறிவுடையோரால் புகழப்பெற்ற பொய்யற்ற நல்ல புகழையும் சுடரினையும் உடையவன். அவனைப் போன்றே கிள்ளிவளவனும் புகழும் பெருமையும் மிக்கவன். சூரியன் அகன்ற ஆகாயத்தில் தொலைவில் இருந்தாலும் அதன் சுடர் பரந்து செல்வது போல, செம்பியர் (சோழர்) குடியில் தோன்றிய சோழனின் புகழும் திசைகளில் எல்லாம் சென்று விளங்கிற்று. அவ்வளவன் கொடிகள் அசைகின்ற யானையினை உடைய பெருமை உடையவன். அவன் தேவர்கள் வாழும் விண்ணுலகத்தை அடைந்தான். அதனால் இவ்வளவு பெரும் புகழ்க்குரிய ஒருவனைக் கவித்து மூடும் பெரிய தாழியை நீ செய்ய விரும்பினால் எப்படிச் செய்வாய்? இந்தப் பெரிய நிலத்தையே சக்கரமாகவும், இமய மலையையே மண்ணாகவும் கொண்டு தாழி செய்ய உன்னால் முடியாதே! ஆகவே நீ இரங்கத் தக்கவன்தான்” என்பது பாட்டின் கருத்து.

    குயவர் மட்கலம் செய்யச் சக்கரமும் மண்ணும் வேண்டும். மிகப்பெரிய கலங்களைச் செய்ய அதற்கேற்றாற் போலச் சக்கரமும் மண்ணும் வேண்டும். கிள்ளிவளவனின் புகழுக்குத் தகுந்தாற் போல இவை அமைய வேண்டுமாயின், இந்நிலவுலகையே சக்கரமாகவும், இமய மலையை மண்திரளாகவும் கொள்ள வேண்டும். அந்த அளவு வளவனின் புகழ் பெரியது என்றார் புலவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:41:36(இந்திய நேரம்)