தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-4.6-இளமை நினைவுகள் (243ஆம் பாட்டு)

  • 4.6 இளமை நினைவுகள் (243ஆம் பாட்டு)

    243ஆம் பாட்டு இனி நினைந்து எனத் தொடங்குவது; பதினான்கு அடிகளை உடையது. இப்பாடலைப் பாடிய புலவர் தொடித்தலை விழுத்தண்டினார்.

    அழகான ஒரு குளக்கரை. குளம் ஆழமாக உள்ளது. குளக்கரையில் உள்ள பெருமரங்களின் கிளைகள் குளத்தின் நீர்ப்பரப்பை நோக்கி வளைந்திருக்கின்றன.. கரையில் முதியவர் ஒருவர் நிற்கிறார். நரையும் திரையும் அவரிடம் மிகுந்துவிட்டன. உடல் வளைந்துவிட்டது. எனவே கையில் வளைந்த பிடியைக் கொண்ட ஒரு கோலை ஆதரவாக வைத்திருக்கின்றார். அவரால் தொடர்ந்து பேசக்கூட முடியாது. ஓரிரண்டு சொற்களைப் பேசுவதற்குள் இருமல் வந்துவிடும். ஆனால் அந்த நாளில் அவர் இப்படியா இருந்தார்? சிறுவனாக இருந்த போது இந்த மரத்தின் கிளையில் ஏறிக் குளத்தில் ‘துடும்’ எனக் குதித்து மூழ்கி நீராடி மணலை அள்ளிக் காட்டியது உண்டல்லவா? இப்படி நினைக்கிறார் முதியவர். இந்தச் சூழலில் பாட்டுப் பிறக்கிறது.

    4.6.1 பாட்டின் கருத்து

    "இப்பொழுது நினைத்தால் வருத்தமாக உள்ளது. மணல் செறிந்த கரையில் செய்யப்பட்ட பொம்மைக்குப் (வண்டற்பாவை) பூவைப் பறித்துச் சூட்டி மகளிர் விளையாடுவர். அவரோடு கைகோத்துக் கொண்டு, தழுவிய போது தழுவியும், அசையும் போது அசைந்தும் மனத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனையின்றிச் சிறுவர் விளையாடுவர். அச்சிறுவர்களில் ஒருவனாக உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரத்தின் நீரில் வந்து படியும் கிளையிலே ஏறுவேன்; கரையிலே நிற்பவர் வியக்குமாறு, அலையெழுந்து நீர்த்துளிகள் தெறிக்க ஆழமிகுந்த மடுவில் (நீர்நிலையில்) துடுமென்று குதிப்பேன். மூச்சடக்கி ஆழத்தில் சென்று மணலைக் கையிலே அள்ளி வந்து காட்டுவேன். எதனையும் ஆழ்ந்து எண்ணிப் பாராத அந்த இளமை இப்போது இல்லையே என்பது இரங்கத்தக்கது. இப்போது பூண் மாட்டிய தலையைக் கொண்ட பெரிய கோலை ஊன்றிக்கொண்டு தளர்ந்து போய் இருமலுக்கிடையில் சில சொற்களைப் பேசும் பெரிய முதுமை கொண்ட எனக்கு அந்த இளமை எங்கே போயிற்றோ என நினைக்க வருத்தமாக உள்ளது.” என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

    தொடித்தலை விழுத்தண்டினார்

    இப்பாட்டை எழுதிய புலவரின் பெயர் அறியப்படவில்லை. ஆனால் ஒருவர் அடைந்த முதுமையை மிக அழகாக வருணித்துள்ளார்.

    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே

    என்று கூறும் போது முதியவர் கொண்ட கோலைத் ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்றார். பெயர் அறியப்படாத இப்புலவருக்கு இந்த அரிய தொடரே பெயராகி விட்டது. இவருடைய பெயர் ‘தொடித்தலை விழுத்தண்டினார்’ என்றே குறிக்கப்பட்டுவிட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:42:05(இந்திய நேரம்)