தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-4.8-பாடல்களின் திணை துறை விளக்கம்

  • 4.8 பாடல்களின் திணை, துறை விளக்கம்

    இங்குக் குறித்த எட்டுப் பாடல்களும் துன்பச் சுவை உடையனவே. இவற்றின் திணை துறை குறித்த பட்டியல் வருமாறு:

    வரிசை எண்
    பாட்டு எண்
    பாட்டின் தொடக்கம்

    திணை

    துறை

    1.
    226
    செற்றன்றாயினும்
    பொதுவியல்
    கையறுநிலை
    2.
    228
    கலஞ்செய் கோவே

    பொதுவியல்

    ஆனந்தப் பையுள்
    3.
    229
    ஆடியல் அழற் குட்டத்து
    பொதுவியல்
    ஆனந்தப் பையுள்
    4.
    235
    சிறியகட் பெறினே
    பொதுவியல்
    கையறுநிலை
    5.
    239
    தொடியுடைய தோள்
    பொதுவியல்
    கையறுநிலை
    6.
    242
    இளையோர் சூடார்
    பொதுவியல்
    கையறுநிலை
    7.
    243
    இனிநினைந்து
    பொதுவியல்
    கையறுநிலை
    8.
    245
    யாங்குப் பெரிதாயினும்
    பொதுவியல்
    கையறுநிலை

    இவை எட்டுப் பாடல்களுக்கும் திணை பொதுவியல். வெட்சி முதலாகப் பாடாண் ஈறாகக் கூறப்பட்ட ஏழு திணைக்கும் பொதுவானவற்றைக் கூறுதலாலும், மனிதர் அனைவர்க்கும் பொதுவாக உரிமையுடைய செய்திகளைக் கூறுவதாலும் இவை பொதுவியல் எனப்பட்டன.

    பாடல்கள் 228, 229 மட்டும் ஆனந்தப் பையுள் என்ற துறை உடையன. சுற்றத்தார் வருந்திக் கூறுவது ஆனந்தப் பையுள் என்னும் துறையாகும். இவ்விரு பாடல்களில் முறையே கிள்ளிவளவனையும், மாந்தரஞ் சேரலையும் இழந்து வருந்திய நிலையில் பாடியமையின் இவை ஆனந்தப் பையுள் துறை பெற்றன. ஆனந்தம், பையுள் ஆகிய இருசொற்களும் அக்காலத்தில் வருத்தத்தைக் குறிக்க வழங்கின.

    எஞ்சிய ஆறு பாடல்கள் (226, 235, 239, 242, 243, 245) கையறு நிலைத் துறைக்குரியன.

    செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
    கையறவு உரைத்துக் கைசோர்ந் தன்று

    எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். தம் மன்னன் இறந்ததற்கு வருந்திப் பாடுவது கையறு நிலை எனக் குறித்தாலும், எந்த இழப்பையும் எண்ணி வருந்துவது கையறு நிலைத் துறைக்குரியது. இந்த ஆறு பாடல்களில் 226, 235, 239, 242 ஆகிய நான்கும் மன்னர்கள் இறப்புக்கு வருந்திப் பாடியவை. 243ஆம் பாட்டு இளமை போயிற்றே என்று வருந்திப் பாடியது. 245ஆம் பாட்டு வேந்தன் ஒருவன் தன் மனைவியின் இறப்புக்கு வருந்திப் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-10-2017 18:04:33(இந்திய நேரம்)