Primary tabs
-
2.4 மொழியியலார் கண்ணோட்டத்தில் கூட்டொலிகள்
மொழியியலார் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றித் தமிழில் பழங்காலந்தொட்டு இருந்துவந்த இருவேறு கருத்துகளையும் குறிப்பிடுகின்றனர். ‘அகரமும் இகரமும் கூடி ஐகாரம் ஆகும் ; அகரமும் உகரமும் கூடி ஒளகாரம் ஆகும்’ என்ற முதல் கருத்தினை வடமொழியில் உள்ள ஐ, ஒள என்னும் சந்தியக்கரங்களின் தாக்கத்தால் தமிழில் ஏற்பட்டதாகக் கொள்கின்றனர். இருப்பினும் அகரத்தின் பின்னர் யகரமெய்யும், வகர மெய்யும் இணைத்து எழுதப்பட்டவையே (அய், அவ் என்பன) ஐ, ஒள ஆகும் என்ற இரண்டாவது கருத்தே மொழியியல் முறைக்குப் பொருந்துவதாய் உள்ளது என்று மொழியியலார் கூறுகின்றனர். அக்கருத்தைத் தக்க சான்றுகள் கொண்டு வலியுறுத்துகின்றனர். அவை பின்வருமாறு :
ஐயர் என்ற சொல் உரைநடையில் அய்யர் எனவும், கைவேல் என்ற சொல் செய்யுளில் கய்வேல் (திருக்குறள், 774) எனவும் எழுதப்பட்டுள்ளன. கை என்ற சொல் பேச்சுமொழியில் கய் என உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் ஒளவை என்ற சொல் அவ்வை எனவும், சௌக்கியம் என்ற சொல் சவுக்கியம் எனவும் எழுதப்படுகின்றன.
இவ்வாறு ஒரு குறில் உயிரையும் (அ), ஒரு மெய்யையும் (ய் அல்லது வ்) இணைத்து எழுதுவதற்கு இடம் தரலால், தமிழில் யாப்பிலக்கண நூலார் இவ்விரண்டு கூட்டொலிகளுக்கும் ஒன்றரை மாத்திரை என்றே ஒலியளவு கூறியுள்ளனர்.
அ - ஒரு மாத்திரை
ய், வ் - அரை மாத்திரை
அய், அவ் - ஒன்றரை மாத்திரை
இவை வடமொழியில் இருப்பது போலச் சந்தியக்கரங்களாயின் இரண்டு மாத்திரை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். ஒன்றரை மாத்திரை எனக் கூறப்பட்டதால் இவை ஈருயிர் ஒலிகள் இணைவால் உருவாகும் சந்தியக்கரம் அல்ல என்பது புலனாகும்.
ஐகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் விளியேற்கும்போது அடையும் மாற்றங்கள், தொடக்கக் காலத்தில் ஐ, ஒள ஆகிய இரண்டும் அய், அவ் என்றே இருந்திருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. அன்னை, தந்தை, குழந்தை என்ற சொற்கள் விளியேற்கும்போது அன்னாய், தந்தாய், குழந்தாய் என மாற்றம் அடைகின்றன.
அன்னை > அன்னாய் (அன்னையே)
தந்தை > தந்தாய் (தந்தையே)
குழந்தை > குழந்தாய் (குழந்தையே)
இச்சொற்களில் ஐ என்பது ஆய் என திரிந்தது என்று தொல்காப்பியர் கூறுவார்.
ஐ ஆய் ஆகும் (தொல். சொல், 121)
நன்னூலாரும் இவ்வாறே கூறுவார் (நன்னூல், 306).
தொல்காப்பியரும், நன்னூலாரும் இவ்வாறு கூறுவது பொருத்தம் உடையதாக இல்லை. மக்கள் என்ற சொல் விளியேற்கும்போது மக்காள் (மக்களே) என மாற்றம் அடைகிறது. இங்கே அள் என்பது ஆள் என நீண்டு அமைந்துள்ளது. அதேபோல,
அன்னய் > அன்னாய்
தந்தய் > தந்தாய்
குழந்தாய் > குழந்தாய்
என அய் என்பது ஆய் என்று திரிந்ததாகக் கூறுவதே பொருத்தம் உடையது. இதுவே மொழியியல் முறைக்கு ஒத்ததாக உள்ளது.
எனவே தமிழில் ஐ, ஒள என்பன அய், அவ் என்பனவற்றின் வேறல்ல என்பதும், வடமொழியில் உள்ளது போல ஈருயிர் ஒலிகளின் கூட்டொலியாகிய சந்தியக்கரம் அல்ல என்பதும் தெளிவாகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.