Primary tabs
-
2.3 தமிழில் கூட்டொலிகள்
வடமொழியைப் போலவே தமிழிலும் ஐ, ஒள என்னும் இரண்டும் கூட்டொலிகள் எனக் கூறப்படுகின்றன. இவ்விரண்டையும் தமிழ் இலக்கண நூலார் நெடில் உயிர் ஒலிகளாகக் குறிப்பிடுகின்றனர். ஏனைய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய ஐந்து நெடில் உயிர் ஒலிகளுக்கு முறையே அ, இ, உ, எ, ஒ என்னும் குறில் உயிர் ஒலிகள் இனமாக அமைந்துள்ளன. ஆனால் ஐ, ஒள என்பன நெடில் உயிர் ஒலிகளாகக் கூறப்பட்டாலும் அவற்றிற்கு இனமாகிய குறில் உயிர் ஒலிகள் இல்லை. ஏனெனில் இவை கூட்டொலிகளாக இருக்கின்றன.
2.3.1 கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகள்
தமிழில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. ஒன்று, இவை இரண்டும் வடமொழியைப் போல இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். மற்றொன்று, ஓர் உயிர் ஒலி, ஒரு மெய் ஒலி ஆகிய இரண்டு ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். இவ்விரு கருத்துகளையும் தமிழ் இலக்கண நூலாராகிய தொல்காப்பியரும் நன்னூலாரும் குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்விரு கருத்துகளின் அடிப்படையில் அமைந்த ஐகார, ஒளகாரச் சொற்களைச் சங்க கால இலக்கியங்களிலும், தற்காலத் தமிழிலும் காணலாம்.
2.3.2 தொல்காப்பியர் குறிப்பிடும் கருத்துகள்
அகர உயிர் ஒலியும், இகர உயிர் ஒலியும் கூடி ஐகாரம் ஆகும் என்றும், அகர உயிர் ஒலியும், உகர உயிர் ஒலியும் கூடி ஒளகாரம் ஆகும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதனை,
அகர இகரம் ஐகாரம் ஆகும் (தொல். எழுத்து, 54)
அகர உகரம் ஒளகாரம் ஆகும் (தொல். எழுத்து, 55)
என்ற நூற்பாக்களால் அறியலாம். தொல்காப்பியரின் இக்கருத்து வடமொழியில் ஐ, ஒள பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்தைப் பின்பற்றியதாகும்.
அ + இ = ஐ (a + i = ai)
அ + உ = ஒள (a + u = au)
ஐ என்பது பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறியுள்ளார். அகர உயிர் ஒலியையும், யகர மெய் ஒலியையும் இணைத்து அய் என எழுதும் கூட்டொலியாகவும் ஐகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதனை,
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
(தொல். எழுத்து, 56)என்ற நூற்பாவால் அறியலாம். இது போல ஒள என்பதை அகர உயிர் ஒலியையும் வகர மெய் ஒலியையும் இணைத்து அவ் என்று எழுதும் ஒலியாகத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இக்கருத்தை எடுத்துக்காட்டி, அதற்கு ஒளவை - அவ்வை என்பதை உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
அ + ய் = அய் (a + y = ay)
அ + வ் = அவ் (a + v = av)
2.3.3 சங்க கால இலக்கியங்களில் ஐ, ஒள
சங்க காலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலை அடுத்துத் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் எனக் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதைக் காண்போம்.
சங்க இலக்கியங்களில் ஐகாரம் , அகரமும் இகரமும் கூடிய ஒலியாகக் கருதப்பட்டு ஐ என்று மட்டுமே எழுதப்பட்டது ; அய் என்று எந்த ஓர் இடத்திலும் எழுதப்படவில்லை. அதாவது சங்க இலக்கியங்களில் ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர், அய்ந்து, அய்ம்பது என்றாற்போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஐவர், ஐந்து, ஐம்பது என்றாற்போல மட்டுமே எழுதப்பட்டன.
ஆனால் இதற்கு மாறாக, ஒளகாரமோ சங்க கால இலக்கியங்களில் ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. பௌவம் (கடல்) என்ற சொல், பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டது. அதே போலக் கௌவை (அலர் அல்லது பழிச்சொல்) என்ற சொல், கௌவை என்றும், கவ்வை என்றும் எழுதப்பட்டது.
நிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு
(குறிஞ்சிப்பாட்டு : 47)(நிறைந்த கரிய கடலினது நீர் குறையும் படி முகந்து கொண்டு)
பவ்வம் மீமிசைப் பாற்கதிர் பரப்பி
(பொருநராற்றுப்படை : 135)(இளஞாயிறு கடலின்மீது பகற்பொழுதைச் செய்யும் கதிர்களைப் பரப்பி.)
ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிது
(அகநானூறு, 186 : 7)(தலைவனால் எனக்கு ஊரில் ஏற்பட்ட பழிச்சொல்லோ பெரிதாகும்.)
பகல்வரின் கவ்வை அஞ்சுதும் (அகநானூறு, 118 : 6)
(தலைவனே ! தலைவியைக் காணப் பகற்பொழுதில் வரின் அதனால் ஏற்படும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம்.)
சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களை நோக்கும்போது ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிப் பழங்காலத்திலேயே இருவேறு கருத்துகள் இருந்தன என்பது புலனாகிறது.
2.3.4 நன்னூலார் குறிப்பிடும் கருத்துகள்
இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலார், தமக்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகள் இருப்பதைக் கண்டார். எனவே அவர் தமது நன்னூலில் அவ்விரு கருத்துகளையும் சேர்த்துக் குறிப்பிடலானார்.
அம்முன் இகரம் யகரம் என்றுஇவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் ; அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன
(நன்னூல், 125)நன்னூலார் கருத்துப்படி ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பின்வருமாறு இருவகையில் அமைந்து விளங்கும்.
அ + இ = ஐ
அ + ய் = அய்
அ + உ = ஒள
அ + வ் = அவ்
இவ்வாறு நன்னூலார் இருவகையாகக் கூறினார் என்றாலும், அய், அவ் என்பனவற்றை முறையே அஇ (ஐ), அஉ (ஒள) என்பனவற்றிற்குப் போலி என்று கொள்கிறார். ஒரு சொல்லில் ஓர் எழுத்து நிற்றற்கு உரிய இடத்தே, அதற்குப் பதிலாகப் பிறிதோர் எழுத்து வந்துநின்றால், அதனால் அச்சொல்லின் பொருள் மாறவில்லை என்றால் அவ்வெழுத்து போலி எனப்படும். ஈண்டு அஇ, அஉ என்னும் கூட்டொலிகளில் இ, உ என்பனவற்றிற்குப் பதிலாக முறையே ய், வ் என்னும் எழுத்துகள் அவ், இவ் என்னும் சொற்களில் வந்ததால், அவ்வெழுத்துகள் போலி ஆகும்.
தற்காலத் தமிழிலும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் முறையே அய் எனவும் அவ் எனவும் எழுதப்படுவதைக் காணலாம்.
ஐயர் - அய்யர்
ஐயா - அய்யா
ஐயனார் - அய்யனார்
ஒளவையார் - அவ்வையார்
சௌக்கியம் - சவுக்கியம்
இதுகாறும் கண்டவற்றால் தமிழில் கூட்டொலிகளாகிய ஐ, ஒள என்னும் இரண்டும் ஈருயிர்களின் கூட்டொலி என்ற முறையிலும், ஓர் உயிர் ஒரு மெய் என்ற ஈரொலிகளின் கூட்டொலி என்ற முறையிலும் ஆக இருவேறு முறையில் பழங்காலந்தொட்டுத் தற்காலம் வரை எழுதப்பட்டு வந்திருக்கும் இயல்பினை அறியலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I