Primary tabs
-
2.5 கூட்டொலிகளின் வருகை
ஐ, ஒள ஆகிய இரண்டும், ஏனைய உயிர் ஒலிகளைப் போலத் தனி ஒலிகளாக இல்லாமல் கூட்டொலிகளாக இருப்பதால் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய நிலைகளில் இவை எவ்வாறு வந்தமைகின்றன என்பது பற்றிச் சிறிது காண்போம்.
ஐ என்னும் கூட்டொலி சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய எல்லா நிலையிலும் வருவதைக் காண முடிகிறது.
-
சொல்லின் முதல்
சொல்லின் முதலில் தனித்தும், மெய்யொடு சேர்ந்தும் ஐ வருகிறது.
சான்று :
ஐயம், ஐவர், ஐம்பது.
கைக்கிளை, தையல், நைந்தது, மையம்.
-
சொல்லின் இடை
சொல்லின் இடையில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.
சான்று :
இளைஞர், இடையன்.
-
சொல்லின் இறுதி
சொல்லின் இறுதியில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.
சான்று :
பகை, பசை, கதை, தலை, களை, ஒளவை.
ஐகாரம் சொல்லின் எல்லா நிலைகளிலும் வந்தாலும், ய், ர், ல், ழ், ள் ஆகிய மெய்யொலிகளுக்கு முன்னர் வருவது இல்லை.
ஒள என்னும் கூட்டொலி சொல்லின் முதலில் மட்டும் வரும். அவ்வாறு வரும்போது தனித்தும், மெய்யோடு சேர்ந்தும் வரும்.
பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்
(தொல். எழுத்து, 59)என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஒளகாரம் மொழி முதலாவதைக் குறிப்பிடுகிறார்.
ஒளகாரம் சொல்லுக்கு முதலில் மட்டும் வருமே தவிர, சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் தனித்தும், மெய்யோடு சேர்ந்தும் வருவது இல்லை.
சொல்லுக்கு முதலில் ஒளகாரம் வருவது பழங்காலத் தமிழில் மிகுதியாகக் காணப்படுகிறது.
சான்று :
ஒளவையார்
மௌவல் (முல்லை மலர்)
நௌவி (மான்)
கௌவை (அலர், பழிச்சொல்)
பௌவம் (கடல்)
-