தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காவடிச் சிந்துப் பாடல்களில் சந்தங்கள்

  •     

    5.4 காவடிச்சிந்துப் பாடல்களில் சந்தங்கள்

        சென்னிக்குளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும். பழனி, கழுகுமலை, திருச்செந்தூர் போன்ற முருகன் தலங்களில் திருப்புகழோடு காவடிச்சிந்தும் பாராயணம் செய்யப்படும். முருகனுக்குக் காவடி எடுக்கும் போது பாடும் சிந்துப் பாடல் ஆதலால் காவடிச்சிந்து ஆயிற்று. காவடிச் சிந்துவின் சந்த மெட்டுக்களை அண்ணாமலையாரே அமைத்தார். இச்சந்த மெட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அருட்கவி அரங்க. சீனிவாசன் காவடிச்சிந்தும் கவிஞன் வரலாறும் என்ற நூலில் கூறுவது போல பண்டிதர்க்கு மரபும், பாமரர்க்கு எளிமையும், இசையறிஞர்க்குப் புதுப்புது மெட்டுகளும் ஒருங்கே தந்த காவடிச்சிந்து முத்திறத்தாரையும் சங்கமமாக்கும் திரிவேணியாகத் திகழ்கிறது.

    சென்னி குளநகர் வாசன் - புகழ்
    தேறும்அண் ணாமலைத் தாசன் - செப்பும்
    ஜெகம்மெச்சிய மதுரக்கவி
    யதனைப் புது வரையிற்புனை தீரன்
                அயல் வீரன்
    தன்னன்ன தன்னன்ன தானா - தன
    தன்னன்ன தானன்னா தானா - தன
        தனனத்தன தனனத்தன
        தனனத்தன தனனத்தன தானா தன தானா

    இது முதலடி. இதுபோல் இக்காவடிச்சிந்தில் ஏனைய 3 அடிகள் உள. இதே நிலையில் இச்சந்தம் ஏனைய அடிகளிலும் இடம் பெறும். இச்சிந்துப் பாடலில் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாட்டில் தன்னை மறந்த நிலையை ஆசிரியர் உரைத்துள்ளார்.

    அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
    அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
        அடியார்கணம் மொழிபோதினில்
        அமராவதி இமையோர்செவி அடைக்கும்
            அண்டம் உடைக்கும்

    5.4.1 காவடிச்சிந்தின் தோற்றம்

        ஊற்றுமலை சமீன்தார் கழுகுமலை முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்தார். ஊற்றுமலையிலிருந்து கழுகுமலை வரை நடந்து சென்றார். அண்ணாமலையாரும் வேறு சிலரும் உடன் சென்றனர். வழிநடைக்களைப்புத் தோன்றா வகையில் இசை இனிமையுடன் கூடிய காவடிச்சிந்துப் பாடலை அண்ணாமலை ரெட்டியார் பாடிக் கொண்டே வந்தார்.

    பொன்னுலவு சென்னிகுள
    நன்னகர்அண் ணாமலைதனி
        புந்தியில் மகிழ்ந்துநித்தம் நின்றவன் - முந்தி
        வெந்திறல் அரக்கர்களை வென்றவன் - மயில்
        போல ஏனலின் மீது லாவுகி
        ராத மாதுமுன் ஏகி யேஅடி
        பூவையே உனதுதஞ்சம் என்றவன் - ஈயும்
        மாவையே இனிதுமென்று தின்றவன்

    வழிச்செல்வோர் முருகா! முருகா! என்று கூறிக்கொண்டே சென்றனர். இந்தப் பயணம் தமிழிசை உலகிற்கு அருமையான சந்தமெட்டுடைய காவடிச்சிந்தைத் தந்தது.

    மூசுவண்டு வாசமண்டு
    காவில்மொண்டு தேனைஉண்டு
        மோகன முகாரிராகம் பாடுமே - மைய
        லாகவே பெடையுடனே கூடுமே - அலை
    மோது வாரிதி நீரை வாரிவிண்
    மீது லாவிய சீத ளாகர
    முகில்பெருஞ் சிகரம் முற்றும் மூடுமே - கண்டு

    மயிலினம் சிறகை விரித் தாடுமே.

    5.4.2 பாரதியைக் கவர்ந்த மெட்டு

        பாரதியார் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுர அரண்மனையில் பாரதி இருந்த பொழுது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார்.

    பச்சைத் திருமயில் வீரன்
        அலங் காரன்
        கவு மாரன் - ஒளிர்
    பன்னிரு திண்புய பாரன் - அடி
        பணி சுப்பிர
        மணியற்கருள்
        அணிமிக் குயர்
        தமிழைத் தரு
    பக்தர்க் கெளியசிங் காரன் - எழில்
        அண் ணாமலை யூரன்

    பாரதி பாடியதில் இந்த ஒரு கண்ணி மட்டும் கிடைத்துள்ளது. ஏனையவை கிடைக்கப் பெறவில்லை. பாரதி பாடல்களில் ‘எங்கள் தாய்’ என்ற தலைப்பில் அமைந்த ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும்’ என்னும் பாடல் அண்ணாமலை ரெட்டியாரின் ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற காவடிச்சிந்து மெட்டைப் பின்பற்றிப் பாடப்பட்டதாகும். மாகாளியின் புகழைப் பாடும் ‘காலமாம் வனத்திலண்ட’ என்ற பாடல் அண்ணாமலையாரின் ‘பாலைவாய்க் கமுகில் வந்தூர்’ என்ற காவடிச்சிந்தின் மெட்டில் அமைந்த பாடலாகும். ‘தேடியுனைச் சரணடைந்தேன்’ என்ற முத்து மாரியம்மன் பாடலைக் காவடிச் சிந்தில் பாடி வருகின்றனர். மக்களால் பெரிதும் போற்றப்பட்ட காவடிச்சிந்தை மக்களுக்காகக் கவிபாடிய பாரதியும் பாடினார்.

    5.4.3 உயிரைக் காத்த மெட்டு

        காவடிச்சிந்து தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய ஒருவரின் உயிரைக் காத்தது. மேலும் சமயம் கடந்த நிலையில் மக்களை ஈர்த்தது. ஆர்மோனியம் காதர்பாட்சா என்ற இசைக் கலைஞர் ஓர் இசுலாமியர். கழுகுமலை முருகன் மீது அதிக ஈடுபாடு உடையவர். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து காதர்பாட்சாவைக் காவடிச்சிந்து பாடும் பாட்சாவாக மாற்றியது. முருகனைப் பற்றிப் பல பாடல்கள் பாடும் முருக பக்தராக்கியது. ஒரு வழக்கில் காதர்பாட்சா அகப்பட்டுக் கொண்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றும் காலமும் வந்தது. உனது கடைசி விருப்பம் என்ன? என்று சிறையதிகாரி கேட்டார். நான் ஒரு முருகபக்தன். எனது ஆர்மோனியத்தில் சிறிது நேரம் பாட வேண்டும் என்றார். கடைசி விருப்பம் நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டார். ஆர்மோனியத்துடன்

    சுருளிமலை மீதில்மேவும் சீலா - உனைத்
    தேடித்திரிந்தேன் சுப்ரமணிய வலோ - பசுந்
        தோகைமயில் மீதிலேறி
        வாருடனே காத்தருளும் துய்யா - முரு கையா

    என்று தொடங்கும் பாடலைப்பாட ஆரம்பித்தார். இவரது காவடிச்சிந்து இசையில் சிறை அதிகாரிகள் தம்மை மறந்தனர். நெடுநேரம் பாடினார். தூக்கிலிடும் நேரம் தாண்டிவிட்டது. உடனிருந்த வழக்கறிஞர் இவரைத் தூக்கிடும் நேரம் முடிந்துவிட்டது. சட்டப்படி இனி இவரைத் தூக்கிலிட முடியாது என்றனர். காதர்பாட்சா விடுதலையானார். காதர் பாட்சாவை விடுதலையாக்கிய மெட்டு அண்ணாமலை ரெட்டியார் பாடிய

    தெள்ளுதமி ழுக்குதவு சீலன் - துதி
    செப்பும் அண்ணா மலைக்கனு கூலன் - வளர்
        செழியர் புகழ்விளைத்த
        கழுகுமலை வளத்தைத் தேனே சொல்லுவேனே -
                    என்பதாம்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:10:10(இந்திய நேரம்)