தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 1.0 முன்னுரை    

        இலக்கியத் திறனாய்வின் முக்கியமான செயல்நிலைப் பண்புகளில் ஒன்று - அது இலக்கியத்துக்குள்ளிருந்து மட்டும் முகிழ்ப்பதல்ல; தத்துவம், சமுதாயவியல் முதலியவற்றிலுள்ள கருத்தியல்/கொள்கைத் தளங்களிலிருந்தும் அது முகிழ்க்கின்றது என்பதாகும். காட்டாக, சார்பியல், (Relativity) மற்றும் பரிணாமவியல் (theory of evolution) ஆகியவை அறிவியல் கொள்கைகளை. வழிமுறையாக்கிக் கொண்டும் திறனாய்வு முகிழ்க்கின்றது.    மொழியியல் என்பது, அடிப்படையில் மொழிசார்ந்த ஒரு கொள்கை; ஆனால் இலக்கியத் திறனாய்வுக்கும் அது ஓர் அடிப்படையாக அமைகின்றது. அதுபோலவே அமைப்பியல் என்பது, நாட்டுப்புறவியல், மொழியியல், சமுதாயவியல் முதலிய தளங்களை மையமாகக் கொண்டது; ஆனால் அதேபோது இலக்கியத் திறனாய்வுக்கு அது மிக முக்கியமான முறையியலைத் (methodology) தந்திருக்கிறது.

        இலக்கியத்திறனாய்வுத்     துறையில்,    அமைப்பியல் (structuralism), செல்வாக்கு வாய்ந்த ஒரு திறனாய்வு அணுகுமுறையாக விளங்குகிறது. பல திறனாய்வாளர்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர். முக்கியமாக, கதை, கதை தழுவிய பாடல், காப்பியம், நாவல் முதலியவற்றிற்கு அமைப்பியல் சிறந்த ஒளிகாட்டுகின்றது. ஆனாலும் சிந்தனை உலகில், ஒன்று மட்டுமே நின்று கோலோச்சுவதில்லை. காலங்கள் மாறுகிறபோது சிந்தனை முறையும் மாறுகிறது.அதுபோல், திறனாய்வு முறைகளும் மாறுகின்றன.அமைப்பியல் செல்வாக்குடன் திகழ்ந்தாலும், அதுவும் பழையதாகிவிட, இதன்     வளர்ச்சியாகவும்,     அதிலிருந்து மாறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும் வேறு பல முறையியல்கள் தோன்றிவிடுகின்றன.      பின்னை அமைப்பியல் (post- structuralism) என்பது, இவ்வாறு அமைப்பியலின் அடுத்த கட்டமாக, அமைப்பியல் போதாது என்ற நிலையில், அதனை மறுத்து எழுகின்றது. இரண்டையும் அறிந்து கொள்ளுவதன் மூலமாக, இலக்கியத் திறனாய்வின் சிறப்பான இரண்டு அணுகுமுறைகளை நாம் அறிந்து கொள்கிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:46:42(இந்திய நேரம்)