Primary tabs
-
1.2 இருநிலை எதிர்வு
ஒரு கதை அல்லது நிகழ்ச்சிவருணனையில் (narrative) நிகழ்வுகள், நீள்வரிசை முறையில் அமைந்திருக்கின்றன என்று அமைப்பியலுக்கு முன்னரக் கருதப்பட்டு வந்தது. நிகழ்வுகள் அல்லது செய்திகளின் பண்பு, இதன் மூலமாகப் புறக்கணிக்கப்படுகின்றது: வரிசை முறை மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் அமைப்பியலை விளக்கும் லெவ் ஸ்ட்ரோஸ், நிகழ்வுகளின் பண்புகளை எடுத்துக்கொண்டு, அந்தப் பண்புகள் காரணமாகவே, அந்த அமைப்புக் கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்குகிறார். படம், பாடம்; படம், பழம்; பழம், பணம் - இப்படி இணைகளை எடுத்துக்கொள்வோம். இவை வேறு வேறு பொருளை உணர்த்துவன. இந்த வேறுபாடுகள் எதனால் வெளிப்படுகின்றன? படம் - பாடம்- இரண்டுக்கும் இடையில் உள்ளது - ‘ப’ என்பது குறில், ‘பா’ என்பது நெடில். என்ற வேறுபாடு. குறில்/ நெடில் என்ற இத்தகைய சிறிய வேறுபாட்டினால் பொருளே வேறுபடுகிறது. இரு சொற்கள் முரண்பட்டு எதிர் எதிராக வழங்குகின்றன. இதனையே அவர் இருநிலை எதிர்வு (binary opposition) என்கிறார். தொல் மானிடவியல் அடிப்படையில் பண்பு x பண்பாடு (nature x culture) என்ற ஒரு இருநிலை எதிர்வை அவர் விளக்குகிறார். பண்பு என்பது இயற்கையானது; ஏற்கெனவே இருப்பது. பண்பாடு என்பது ஆக்கிக் கொள்வது; பண்படுத்தப்படுவது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை யென்றாலும் முரண்பட்டவை. இதனை, பதனப்படாதது x பதனப்பட்டது- (raw x cooked) என்ற எதிர்வாகக் கொள்ளலாம். இத்தகைய பண்பு, அமைப்பு முழுக்க விரவிக்கிடப்பதாகவும், அதன் இயக்கம் இத்தகைய ஆற்றலினால் அமைந்துள்ளது என்றும் அமைப்பியல் காட்டுகிறது. நல்லவன் x கெட்டவன்; வலியவன் x மெலியன்; ஆண் x பெண்; கதாநாயகன் x வில்லன் என்று இந்தப்பண்புகளின் நீட்சியைக் கூறிச்செல்லலாம். கதை கூறும் உத்தியில் இந்தப் பண்புகளை அறிந்துகொள்ளவேண்டும்