Primary tabs
- 1.7 தொகுப்புரை
இன்றைய திறனாய்வில் ஆற்றல் வாய்ந்தவையாகவும் செல்வாக்குக் கொண்டனவாகவும் இருப்பவை, அமைப்பியலும் பின்னை அமைப்பியலும் ஆகும். நவீனத்துவம் மேலோங்கிய இடைநிலையில் இவை இரண்டும் அடுத்தடுத்துத் தோன்றின. அமைப்பியலுக்குப் பிறகு தோன்றியது பின்னை அமைப்பியல்; எனினும் அமைப்பியலின் போதாமை காரணமாக அதனை மறுதலித்துத் தோன்றியது எனவே ‘பின்னை’ என்பது ‘பிறகு’ என்ற பொருளை விட ‘மறுப்பு’ என்ற பொருளையே உட்கொண்டிருக்கிறது.
அமைப்பியல் என்பது ஒரு கலைவடிவம் அல்லது சிந்தனைவடிவத்தின் கட்டமைப்புப்பற்றிப் பேசுகிறது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அது கூறும் செய்தி-எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கிறது; வெளியே அல்ல என்று அது சொல்லுகிறது. அமைப்பியல், படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் தருகிறது. கதை, கதை சார்ந்த அல்லது ஒரு சிந்தனையின் விளக்கம் சார்ந்த வருணிப்புக்கு அமைப்பியல் உகந்த அணுகுமுறையாக உள்ளது. கதைமைத் தன்மையின் கட்டுக் கோப்பில் கதைப்பின்னலின் பண்பும் இடனும் குறித்து விளக்கமாகப் பேசும் அமைப்பியல், உயிர்ப்புடைய அமைப்பின் கட்டுமானத்தில் இருநிலை எதிர்வு என்பதன் அவசியத்தையும் அதன் செயல்பாட்டையும் விளக்குகிறது.
பின்னை அமைப்பியல், பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து, அது எவ்வாறு தனக்குள் முடியாமல், அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்றவற்றோடும் உறவு கொண்டிருக்கிறது என்பதனைப் பேசுகிறது. பனுவலின் உள்கட்டமைப்புக்கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றன என்றும் அது பேசுகிறது. அதனுடைய சிறப்பியலான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை.
தமிழில், சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம்வரை, ஆழமாக ஆராயவும் பல உண்மைகளையும் அழகுகளையும் புதியனவாக வெளிப்படுத்தவும் இவ்விரண்டு திறனாய்வுகளும் பெரிதும் உதவுகின்றன; பல ஆய்வாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
3.சொற்கள் முதலியவை தமக்குள் கொண்டிருக்கும் உறவுகள், நிரந்தரத்தன்மை கொண்டவை அல்ல: மாறாக அவற்றினிடையே ஒரு ‘மாய்ம்மைத்’ தன்மை இருக்கிறது. இப்படிச் சொன்னவர் யார்?6.திருக்குறளின் ஒரு அதிகாரத்துக்கு மணக்குடவர் “மக்கட்பேறு” என்று பெயர்வைக்கிறார்; பரிமேலழகர் அதற்கு என்ன பெயரிடுகிறார்?