Primary tabs
-
1.6 கட்டவிழ்ப்பு.
இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு புதிய கோணத்தை / பரிமாணத்தைக் குறிப்பது கட்டவிழ்ப்பு (Deconstruction) ஆகும். உண்மைகளின், அல்லது உண்மை போன்ற தோற்றங்களின் வெவ்வேறு கோணங்களை இது வெளிக்கொணர்கிறது. அமைப்பு என்பது இறுக்கமானது அல்ல; அமைப்பு எனும் சட்டத்திற்குள் மட்டுமே அதன் பொருள் அமைந்திருக்கவில்லை. ஒரு பனுவலின் விளக்கம், அமைப்பு என்பதற்குள் முடிந்துவிடுவதில்லை. மையத்திற்கு வெளியே, அதனோடு புறநிலையில் இருப்பவை, அந்தப் பனுவலின் நேர்முகப் பொருளோடு (உள்ளடக்கத்தோடு) ஒப்புநோக்கப்படுகின்ன; வேறுபடுத்தப்படுகின்றன. பழைய கட்டுமானம் தளர்கிறது. இவ்வாறு பின்னை அமைப்பியல் கூறுகிறது. பனுவலாக அமைகின்ற ‘கட்டு’ அவிழ, புதிய விளக்கங்கள், அதன்வழியாக உருவாகின்றன. இதனையே கட்டவிழ்ப்பு என்கிறோம். டெர்ரிடா என்ற அறிஞரின் முக்கியமான பங்களிப்பு இது. பனுவல்களின், தருக்கவியல் சார்ந்த அமைப்பு முறை தளர்கிறது என்பதைக் கட்டவிழ்ப்பு எனும் அணுகுமுறை காட்டுகிறது.
காட்டாகப், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக்கொள்வோம். இந்திய தேசிய உணர்வை எழுப்பும் நோக்கில் அமைந்த இந்தக் குறுங்காவியம், பெண்ணின் பெருமை பேசுவது; பெண்ணை வீரமுடையவளாகக் காட்டுவது. ஆனால், துச்சாதனன், பாஞ்சாலியைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்லுகின்ற போது, மக்கள் அந்தச் செய்கையை எதிர்த்துநிற்காமல் பொருமிக் கொண்டு, ஆனால், செயலற்று இருந்தார்கள் என்பதைக் கோபத்தோடு கூற நினைக்கிறார், பாரதி. அந்த மக்கள், ‘நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்” என்று கூறுவார், அத்தோடு நிற்காமல் அந்தப் புலம்பலைப் ‘பெட்டைப் புலம்பல்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, பெண்ணின் புலம்பல் என்கிறார். அப்படியானால்- பெண்ணின் புலம்பல் என்பது செயல்இழந்ததா? ஆண், செயல்கள்புரிபவன்; பெண், செயலற்றவளா? - என்ற கேள்விகளை எழுப்பிப் பாரதியின் உள்ளத்தில் ‘ஆணாதிக்க மனப்பான்மை’ இருக்கிறது என்று வாதிடுவார்கள். இது கட்டவிழ்ப்புத் திறனாய்வு ஆகும். ஒரு சொல்லாயினும், அதன் குறிதிறன்/ஆற்றல் புறக்கணிக்கத் தகுந்ததல்ல என்பது அவர்கள் வாதம். இதுபோல், மக்கட் செல்வத்தைப் போற்றும் திருக்குறளின் ஓர் அதிகாரத்திற்கு மணக்குடவர் எனும் உரையாசிரியர் ‘மக்கட் பேறு’ என்று பெயரிட, அதே அதிகாரத்திற்குப் பரிமேலழகர் எனும் இன்னொரு உரையாசிரியர், ‘புதல்வரைப் பெறுதல்’ என்று பெயரிடுவார். இதுவும் ஆண் ஆதிக்க சமூகத்தின் குரலே என்று கட்டவிழ்ப்பு முறையில் பெண்ணியலாளர்கள் விளக்குவார்கள்.
பொருள் விளக்கம் தருவதில், அலுத்துப் போகும் வாய்பாடாக (formula) வல்லார் வகுத்த ஒரே பாதையிலேயே செல்லாமல், மறைந்தும், பிறரால் மறைக்கப்பட்டும் கிடப்பவற்றைக் கிண்டியெடுத்துப் புதிய செய்திகளை இந்தத் திறனாய்வு தருகின்றது.