Primary tabs
-
1.4 பின்னை அமைப்பியல் : அறிமுகம்
அமைப்பியலின் வளர்ச்சியாக எழுந்தது - பின்னை அமைப்பியல் (post structuralism) ஆகும். வளர்ச்சி என்றால், முந்தையது போதாது என்ற நிலையில் தோன்றியதேயாகும். போதாது எனும்போது, பழையதிலிருந்து மாறுபடவும், பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது. எனவே, பின்னை அமைப்பியல் என்பது, அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்றியது என்று கூறுவதை விட, அமைப்பியலை மறுதலிப்பதாக அது எழுந்தது என்றே கொள்ள வேண்டும். இது பிரான்சில் தோன்றியது. நவீனத்துவம் என்ற போக்கு மேலோங்கியிருந்த ஒரு சூழலில், பல துறைகள் பற்றிப் பல விவாதங்கள் தோன்றின. அந்தச்சூழலில் தோன்றியதுதான் பின்னை அமைப்பியல் எனும் சிந்தனைமுறை / இலக்கியத்திறனாய்வு முறை ஆகும். இதன் எழுச்சிக்கு முக்கியமாக வித்திட்டவர் ரோலந் பார்த் (Roland Barthes) என்பவர். இதனை வழிநடத்தி முன்கொண்டு சென்றவர் டெர்ரிடா (Jacques Derrida) என்பவர் ஆவார். தொடர்ந்து, மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) எனும் சமுதாயவியல் அறிஞரும் லக்கான் (Jacques Lacan) எனும் உளவியல் பகுப்பாய்வாளரும், ஜூலியா கிறிஸ்தோவா (Julia Kristeva) எனும் பெண்ணியலாளரும் மற்றும் காயத்ரி ஸ்பைவக், பால் டிவேர் முதலியோரும் பின்னை அமைப்பியலுக்கு முக்கியமான பங்களிப்புகளையும், பரிமாணங்களையும் தந்துள்ளார்கள். இது, செல்வாக்கு மிகுந்த ஒன்று என்பது மட்டுமல்லாமல், பின்னர் வந்த கொள்கைகளில் இது பெருந்தாக்கம் ஏற்படுத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1.4.1 பின்னை அமைப்பியல் : அடிப்படைகள்
அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது.அதற்குமுன்பு, படைப்பு-படைப்பாளிக்குத் திறனாய்வில் முக்கியத்துவம் தரப்பட்டது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை நோக்கி நகர்கிறபோது, பின்னை அமைப்பியல் தோன்றுகிறது என்று போலந் பார்த் என்ற பிரபல ஃபிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார். அது போல், இலக்கியம் என்பது, வரையறைகளுக்குட்பட்ட பொருள்களைக் கொண்டது என்றும், அது தன்னுள் முடிவு பெற்ற - அதாவது, வேறு எதனையும் வேண்டிப் பெறாத - ஓர் அமைப்பு என்றும் முன்னர்க் கருதப்பட்டது. இதனைப் பின்னை அமைப்பியல் மறுக்கிறது; பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் நகர்கிறது என்று அது விளக்குகிறது.
இலக்கியம் என்பது எழுதப்பட்ட ஒரு பனுவல். அது இயங்குதல் தன்மை பெற்றது, உயிர்ப்புக் கொண்டது. அதனை ஒரு வாசகன் வாசிக்கிறான்;ஒரு பொருள் கொள்கிறான்; சில நாள் கழித்து மீண்டும் வாசிக்கிறான்; வேறொரு பொருள் விளக்கம் கொள்கிறான். அதுபோல் ஒரு வாசகன் குறிப்பிட்ட ஒரு விதத்தில் பொருள் கொள்கிறான் என்றால், இன்னொரு வாசகன், அவனுடைய பயிற்சி, புரிதல் திறன், சூழல் முதலியவற்றின் காரணமாக இன்னொரு பொருள் கொள்கிறான். இப்படியே ஒரு வாசிப்பு. மீண்டும் ஒரு வாசிப்பு. அதன் காரணமாக, அந்த வாசகன் கொள்ளும் ஒரு பனுவல்... இன்னொரு பனுவல்... என்று ஒரு பன்முகத்தன்மை (multiple reading, plural text) ஏற்படுகிறது. பின்னை அமைப்பியலின் அடிப்படையான கருத்தியல், இந்தப் பன்முக வாசிப்பு ஆகும்.