Primary tabs
-
1.5 மொழியும் பனுவலும்
மொழி, அற்புதமான ஆற்றல் படைத்தது. அமைப்பியல், மொழியின் ஆற்றலை அதன் அமைப்புக்குள்ளிருந்து (மட்டும்) பார்க்கிறது. மொழிக்கூறுகள், தமக்குள் தாம் உறவுபட்டுக் கிடக்கிற முறையில் எவ்வாறு அவை பொருள் கொண்டிருக்கின்றன என்பதனை அது ஆராய்கின்றது. இதற்கும் மாறாக, மொழியின் ஆற்றலை, அதனுடைய அமைப்பிலிருந்து மீறியதாகப் பின்னை அமைப்பியல் பார்க்கிறது. மொழியின் கூறுகள் - அதாவது, சொற்கள் முதலியவை - பொருள்களோடு கொண்டிருக்கிற உறவுகளில் எப்போதும் கட்டுப்பாடும், நிரந்தரத் தன்மையும் கிடையாது. உறவுகளின் இந்த நெகிழ்வுத்தன்மை பின்னை அமைப்பியலுக்குக் களம் சமைக்கின்றது. இந்த உறவுகளிலுள்ள ‘மாய்ம்மை’யை (mystery), மொழியியல் அறிஞர் டி சாசூர் விளக்கியிருக்கின்றார். சொல்லப்படுகின்ற அல்லது எழுதப்படுகின்ற மொழிவடிவத்தின் எல்லைக்குள் மட்டுமே நின்றுகொண்டு ‘பொருளை’ இன்னது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் அவர். பொருட்குறி (signified) என்பது, தூலமாக அல்லது இறுக்கமாக இருப்பதல்ல; ஒரு குறிப்பானுக்குள் (signifier) அது சிதறிக்கிடக்கிறது, அதாவது சொல்லுக்குள்ளோ தொடருக்குள்ளோ அது சிதறிக் கிடக்கிறது. தொடர்ந்து ஒரு தொடரையோ, முழுவாக்கியத்தையோ ஒரு பனுவலையோ வாசிக்கிறபோது, சிதறிக் கிடப்பனவாகத் தோன்றிய பொருள்கள் அல்லது காட்சித் துண்டங்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தொடர்ச்சியாக ஆகின்றன. மேலும் இன்னொரு வாக்கியத்தோடு அதனைச் சேர்த்து வாசிக்கிறபோது, அந்தத் தொடர்ச்சி விசாலமாகிறது. மொழியின் இத்தகைய பண்பு, பனுவலுக்கும் அதனை வாசிக்கிற வாசகனுக்கும் விரிந்த தளங்களைத் திறந்துவைக்கிறது; வாசகனைப் பல வழிகளுக்கு அது இட்டுச் செல்கிறது.
இத்தகைய ஆற்றலினால்தான், பன்முக வாசிப்புக்களும், பன்முகமான விமரிசனங்களும் சாத்தியப்படுகின்றன. பாரதியார்க்கு எத்தனை வகையான விமரிசனங்கள்-யோசித்துப் பாருங்கள். அவர் எழுதியவை என்னவோ கொஞ்சம்தான்; ஆனால், சிலர் அவற்றை வேதாந்த தத்துவமாக உரை கூறுகின்றனர்; சிலர், சமுதாய உணர்வுடையனவாகவும் சமுதாய மாற்றத்தை முன்மொழிவனவாகவும் எடுத்துரைக்கின்றனர்; சிலர், தேசிய எழுச்சியூட்டுவனவாகப் பொருள் விளக்கம் தருகின்றனர், சிலர் அவற்றில் பிரச்சார நெடி இருக்கிறதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அவரவரின் வேறுபட்ட வாசிப்புக்களுக்கும் விமரிசனங்களுக்கும் இவ்வாறு பாரதியின் பாடல்கள் எனும் பனுவல், இடம் தருவதைத்தான் பின்னை அமைப்பியலின் சிறப்பியலான பண்பு என்கிறோம்.