தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- மார்க்சிய அணுகுமுறை

  • 3.1 மார்க்சிய அணுகுமுறை

        மார்க்சிய அணுகுமுறைக்கு, மார்க்சிய சித்தாந்தமே அடிப்படை.மார்க்சியம், ஓர் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக விளங்கினாலும்,அது சமூகவியல் அடிப்படைகளை விளக்குகிற ஒரு சித்தாந்தமாகலின், அழகியல், கலை, இலக்கியம், ஆகியவற்றையும் அது விளக்குகிறது; ஏனெனில், இவை சமூகத்தின் பண்புகளாகவும் பகுதிகளாகவும் இருப்பவை.

    3.1.1 வரையறையும் விளக்கமும்

        மார்க்சியத் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வோடும் வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது. அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது. அதுபோல, சமூகம் என்பது காலம், இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது; எனவே வரலாற்றியல் தளத்தில்     இயங்குவது. இலக்கியம்     இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி, அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின், இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக - வரலாற்றுப் பின்புலங்களும்     அவற்றின்     செய்திகளும்     மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன . மார்க்சியத் திறனாய்வு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும். அதாவது, சமூக வரலாற்றுத் தளத்திலிருந்துதான் மார்க்சியத் திறனாய்வு தொடங்குகிறது.

        சமூகம் மாறக்கூடியது; வளர்ச்சி பெறக்கூடியது. அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது. அத்தகைய     பண்புகளைத்     தற்சார்பு இல்லாத முறையில், காரணகாரியத்     தொடர்புகளுடன் மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது.     இலக்கியம்,     மக்களுடைய     வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு. அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது. மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம், மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது. மார்க்சியத் திறனாய்வு, இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது. மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்     இலக்கியம்     உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது. மார்க்சியத் திறனாய்வின் நோக்கம், இலக்கியத்தை மனிதனோடு நெருங்கியிருக்கச் செய்வதும், மனிதனை இலக்கியத்தோடு நெருங்கியிருக்கச் செய்வதும் ஆகும்.

    3.1.2 மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகள்     

        மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வுநூல்கள் எழுதியவர்கள் அல்லர்; அதுபோல், இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், தம்முடைய அரசியல்- பொருளாதார     நூல்களிடையே இலக்கியங்கள் பற்றியும் பேசுகின்றனர். இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர்கதே (Goethe) என்பவர் பற்றிப் பேசுகின்றனர். அதுபோல் மின்னா கவுட்ஸ்கி, மார்கரெட் ஹார்கன்ஸ், லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பேசுகின்றனர். ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர். லியோ டால்ஸ்டாயின் நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார். இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைகள் கண்டவிடத்தும் கூட, அவற்றைப் பெரிதுபடுத்தாமல், குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை, மார்க்சிடமும் ஏங்கல்சிடமும் காணப்படுகிறது. அதுபோல், லெனினும்.     லியோ     டால்ஸ்டாய்,     மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும், அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும், அதன்     மாற்றங்களும்     பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று     சொல்லிப் பாராட்டுகின்றார். மார்க்சியத் திறனாய்வின் நசம் கொண்ட வழிகாட்டுதலை இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன.

        மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை, மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. அரசியல்-பொருளாதாரக் கோட்பாடுகளன்றியும் இந்த மார்க்சியத்திற்கு அடிப்படையாகி இருப்பவை, இயங்கியல் வாதம் (Dialectical Materialism) மற்றும்     பொருள்முதல் வாதம் (Historical Materialism) ஆகியவை. வரலாற்றியல் வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாதம் (Historical Materialism and Dialectical Materialism) இவற்றிற்குட்பட்டவையாகும். மேலும், எதார்த்தம், உருவம் உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை, எதிரொலிப்பு, தீர்வு முதலியவை பற்றிய கருத்து நிலைகள் மார்க்சிய அழகியலுக்கு அடிப்படை நெறிமுறைகளாக உள்ளன.

    3.1.3 இலக்கியம் பற்றிய கருதுகோள்

        ஒவ்வொரு திறனாய்வு முறைக்கும், இலக்கியம் பற்றிய கருதுகோள் என்பது மிகவும் அவசியம். ஆயின் இது, அவ்வத் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்றோக இருக்கக் கூடும். மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை; இலக்கியம் என்பது ஒரு கலைவடிம்; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் (Super-Structure) உள்ள ஓர் உணர்வு நிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய (Basic Structure) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது, அது. இதுவே, இலக்கியத்தைப் பற்றிய அடிப்படைன வரையறை என மார்க்சியம் கருதுகிறது. மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை, இலக்கியம், அரசியல் தத்துவம், சாதி, சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை. அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால்- இலக்கியம், மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களை நோக்கியே செல்கிறது; மக்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது; வளர்க்கிறது. இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும்.

        இலக்கியம் சுயம்புவானது அல்ல; சுயாதிக்கம் உடையது அல்ல; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல. சமுதாய அடிக் கட்டுமானத்தோடும், ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல், தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது. எனவே திறனாய்வு, இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. எனவே, கலை, கலைக்காகவே என்பதையும், கலை, தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும், ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும் மட்டுமே     உரியது என்பதையும் மறுத்து,     கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது. எனவே     மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும், பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:49:52(இந்திய நேரம்)