Primary tabs
-
3.2 மார்க்சியக் கொள்கையும் இலக்கியமும்
இலக்கியத்தைச் சமூகத்தின் வரலாறாகப் பார்க்கிறது மார்க்க்சியத்திறனாய்வு. இதன்வழிச் சமூக அமைப்பின் வளர்நிலைகளைக் கணிக்கிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற கோட்பாட்டை அது முன்வைக்கிறது. இலக்கியத்தை வர்க்கங்களின் மோதல் அடிப்படையில் மார்க்சியத்திறனாய்வு மதிப்பிடுகிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் மார்க்க்சியத்திறனாய்வு இலக்கியத்தில் காண்கிறது.
3.2.1 வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
கருத்து (idea) அல்லது சிந்தனையே முதன்மையானது எனக்கூறி, உலகத்தை அதன்வழியாகக் காண்பது கருத்து முதல்வாதம் (Idealism), அவ்வாறன்றிப் பொருளே (matter) முதன்மையானது எனக் கொண்டு, உலகை அதன்வழிப் பார்ப்பதும் விளக்குவதும் பொருள் முதல்வாதம் (materialism) ஆகும். வரலாற்றியல் பொருள்வாதம் என்பது, பொருளின் இயங்குநிலை எவ்வாறு மனிதகுல வரலாற்றை விளக்குவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று கூறுகிறது. மனித சமுதாயத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகவும், தேக்க நிலை கொண்டதாகவும் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதனை எப்போதும் தன்னுள்ளே இயங்குகின்ற ஆற்றலுடையதாகவும் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டதாகவும் பார்க்கவேண்டும் என்று வரலாற்றியல் பொருள்வாதம் வலியுறுத்துகிறது.
சமூகவியலுக்கு இதனுடைய முக்கியமான பங்களிப்பு, சமுதாய வரலாற்றை, சமுதாய - பொருளாதார வடிவாக்கங்களின் (socio- economic formations) படிநிலை வளர்ச்சிகளாக விளக்கியிருப்பது ஆகும். அந்த வடிவாக்கங்கள்:
- புராதன கூட்டுக்குழு அமைப்பு (Primitive Communism)
- அடிமையுடைமை (Slave owning)
- நிலவுடைமை (Feudalism)
- முதலாளித்துவம் (Capitalism)
- பொதுவுடைமை (Communism)
பொதுவுடைமை வளர்ச்சிபெறுவதற்கு முன்னால் அதன் முன்னோடியாக இருப்பது சமதர்மம் அல்லது சோஷலிசம் ஆகும். அதுபோல், முதலாளித்துவம் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும், குழும முதலாளித்துவம் (Corporate capitalism), பன்னாட்டு முதலாளித்துவம் (Multi national capitalism), ஏகபோக முதலாளித்துவம் (Monopoly capitalism) என்று பல நிலைகள் அதிலே உண்டு. இத்தகைய சமூக அமைப்புக்களுக்கு ஏற்ப, அவ்வக் காலத்திய சமூகவுணர்வு நிலைகளும், அழகியல், அரசியல், கலை இலக்கியம் முதலியனவும் இருக்கும் என்று மார்க்சியம் கூறுகிறது. தமிழில், சங்க இலக்கியம் முதல் தொடர்ந்து வரும் இலக்கியங்களில், மேற்கூறிய சமூக அமைப்புக்களும் அவை சார்ந்த உணர்வு நிலைகளும் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உண்டு.
மார்க்சியம், சமூகத்தை வர்க்க சமுதாயமாகக் காணுகிறது. வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் ஒருபகுதியாக அமைந்துள்ள வர்க்கக் கண்ணோட்டம் இலக்கியத்தின் செய்நெறிகளையும் இலக்கியம் கூறும் செய்திகளையும் கண்டறிய உதவுகிறது. வர்க்கம் (class) என்பது என்ன? சமுதாயத்தின் வளங்களையும் நலன்களையும், பெறுவதிலும், பங்கிடுவதிலும், துய்ப்பதிலும் உள்ள பிரிவினையைக் குறிப்பது இது. பொருளாலே உற்பத்தியுறவுகளின் அடிப்படையில் பிறரோடு வேறுபட்டும், தமக்குள் பொதுத்தன்மை பெற்றும் இருக்கிற மக்கள் பிரிவினைகளே வர்க்கங்கள் ஆகும். ஏழை - பணக்காரன் என்ற பிரிவினை அல்ல, இது. உற்பத்திகளையும் உற்பத்திசாதனங்களையும் உடைமையாகக் கொண்ட முதலாளி - அதிலே உழைக்கிற, உழைப்பைக் கூலியாகப் பெறுகிற தொழிலாளி என்ற பிரிவினையே, இது. உற்பத்தியில் முழுதுமாகத் தன் உழைப்பை நல்கிடும் தொழிலாளி, அதன் பலனையும் நலனையும் பெறமுடியாத நிலையில், முதலாளியோடு முரண்படுகிறான்; குழுவாக இணைகிறான், மோதல் நடைபெறுகிறது. இதனை வர்க்கப் போராட்டம் என்கிறோம். சமூகத்தில் நடைபெறும் இத்தகைய நிலைகளை இலக்கியத்தில் காணமுடியும். உதாரணமாக, ரகுநாதனின் ‘பஞ்சும்பசியும்’ என்ற நாவலில் இதனைக் காணலாம். விக்கிரமசிங்கபுரம் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளிகள், தங்களுடைய வேலை உத்திரவாதம், கூலி நிர்ணயம் முதலியவற்றுக்காக, ஒன்றிணைந்து, ஊர்வலம், வேலை நிறுத்தம் முதலிய வழிமுறைகள் கொண்டு முதலாளியோடு போராடுகிறார்கள். இவ்வாறு சித்திரிக்கும் இந்த நாவல், தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெற்று இணைந்து நிற்பதைக் காட்டுகிறது. ராஜம்கிருஷ்ணனின் ‘கரிப்புமணிகள்’, ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’ ஆகிய நாவல்களில் தூத்துக்குடி வட்டார உப்பளங்களில் உழைக்கும் உப்பளத் தொழிலாளிகள் தங்களுடைய முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி பெற்று நிற்பது இடம் பெறுகிறது. ‘நாங்கள் சேற்றில் கால்வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது, - என்பது போன்ற புதுக்கவிதைகளிலும் இத்தகைய குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I