தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- அடிப்படைக் கூறுகள் - 2

  • 3.4 அடிப்படைக் கூறுகள் - 2

        உலக     நடப்புகள் படைப்பாளனுக்குள் பிரதிபலித்து இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. இதனை மார்க்சியம் பிரதிபலிப்புக் கொள்கை என்கிறது. படைப்பாளன் சமூக உணர்வுள்ளவனாக உழைப்பவர் ஒடுக்கப்பட்டவர் ஏழைகள் என்ற வர்க்கத்தின் சார்பாளனாக இருந்து படைக்க வேண்டும் எனவும் மார்க்சியம் கூறுகிறது; நம்பிக்கையும் முன்மாற்றமும் தரும் தீர்வுகளையும் படைத்துக்காட்ட வேண்டுமென்று கூறுகிறது. இவையும் மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள்.

    3.4.1 பிரதிபலிப்புக் கொள்கை

        உலகத்தில் காணப்படுகிற நடைமுறை உண்மைகள், மற்றும் சமூக அமைப்பிலுள்ள வர்க்க முறைகள், வர்க்க உணர்வுகள், சமூக மாற்றங்கள் முதலியன இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன; அந்த அந்தக்காலங்கள், அவ்வக் காலங்களில் தோன்றும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன.இவ்வாறு மார்க்சியம், பிரதிபலிப்புக் கொள்கையை (Theory of Reflexion) கூறுகின்றது. ஆனால் புறவயமாகத் தோன்றுகிற     (objective) இவையெல்லாம் அப்படியப்படியே பிரதிபலிக்கின்றன     என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதிலும் மார்க்சிய அழகியல் கவனமாக இருக்கிறது. புறவய உண்மை, கலைஞனுடைய அகவய நிலையில் (subjective feelings) சென்றடைகிறது. ஆனால் அது, கலைப் பொருளில் கலை வயப்பட்டு வெளிவர வேண்டும். புறவய உண்மை, அழகியல் உண்மையாக அல்லது கலையியல் உண்மையாக (Aesthetic or Artistic Reality) வரவேண்டும்.     இதுதான் பிரதிபலிப்பினுடைய பண்பாகும். கலைஞனுடைய பயிற்சி, நோக்கம்,மற்றும் கலைப்படைப்பின் தேவை, தேசிய விடுதலை எனும் ஒரு உண்மை / புறவய உண்மை, எப்படியெல்லாம் நம் கவிஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பிரதிபலித்துள்ளது என்பதை அறியலாம். இது பாரதியிடம் இருந்ததுபோலப் பாரதிதாசனிடம் இருக்க வில்லை; நாமக்கல் கவிஞரிடமும், சுத்தானந்த பாரதியிடமும் இருந்தது போல, தேசிகவிநாயகம் பிள்ளையிடம் இருக்கவில்லை. இவர்களிடம் இருந்தது போல, புதுக்கவிதையாளர்களிடம் இருக்கவில்லை;அல்லது, வித்தியாசமாக இருந்தது. பிரதிபலிப்பினுடைய பல கோணங்கள் இவை. ஒரு பொருள் அல்லது ஒரு நடப்பு, எவ்வாறு ஒரு படைப்பாளியிடம் பிரதிபலிக்கிறது என்று அறிவதன் மூலம், அந்தப் படைப்பையும் படைப்பாளியையும் நம்மால் திறனாய முடியும்.

    3.4.2 சார்பு நிலையும் தீர்வும்

        ஒரு     எழுத்தாளனிடம்     சார்பு நிலை இருக்குமா- இருக்கவேண்டுமா- என்பது பல காலமாக இருந்து வரும் கேள்வி. சார்பு என்பது,     எழுத்தாளனுடைய பின்னணி, நோக்கம் முதலியவற்றைச் சார்ந்தது. வசதியான பின்புலங்களையுடையவன், அத்தகையவர்க்கு உதவுகிறமாதிரியாக எழுதுவான் என்பது ஒருநிலை. ஆனால் மார்க்சியம் இதனை முழுதுமாக ஒத்துக் கொள்வதில்லை. படைப்பாளியினுடைய உண்மையுணர்வும் (sincerity) படைப்பு மீதான அவனுடைய நேர்மையும்,அவனுடைய உயர் வர்க்கத்தையும் தாண்டிச் சமூக உணர்வு கொண்ட சார்பு நிலைகளைத் தரும் என்கிறார் மார்க்ஸ். பால்ஜாக் (Balzac) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பற்றி அவர் கூறினார். பால்ஜாக், பிரபுக்களைக் கொண்ட நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர். ஆனால், தன் காலத்துச் சமுதாயத்தை ஆழமாகவும் உண்மையாகவும் கண்டு அதனை நேர்மையுணர்வுடன் சித்திரிக்கிற முயற்சியின் காரணமாக, தனக்குப் பிடித்தமான பிரெஞ்சு நிலவுடைமைச் சமுதாயம், தன்னுடைய கண்ணுக்கு எதிரேயே நொறுங்கி விழுவது கண்டு அப்படியே உண்மையாக எழுதுகிறார். எனவே, உண்மைகளின்பால் தனக்குள்ள ‘உண்மை’ அல்லது நேர்மை காரணமாகத் தன்னுடைய சொந்த வர்க்க நலன்கள் மற்றும் அரசியல் பேதங்களுக்கு     எதிராகச்     செல்ல    வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிவிட்டார்.     எனவே     சார்பு என்பது, எழுத்தாளனுடைய நேர்மையையும் உண்மையின் தீவிரத்தையும் பொறுத்தது ஆகும்.

        சார்பு என்பதற்காக அந்தச் சார்பை வெளிப்படுத்த எழுத்தாளன்     பிரச்சாரம்     செய்ய வேண்டியதில்லை. கலைத்தன்மையோடு அது இயல்பாக வெளிப்பட வேண்டும் .எனவே, கதைகளில் தீர்வுகள் சொல்லுவது (நீதிக்கதைகளில் இப்படி உண்டு.) தவிர்க்கப் படவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. முடிவுகள்,     ‘தட்டிலே     வைத்துத் தரப்படுவன அல்ல.’ பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு. இது முக்கியமாக இரண்டு வகைகளில் வெளிப்படுகின்றது. முதலில் - தீர்வு, தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கதைத்தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது. அதிலிருந்து தீர்வினை, வாசகன் எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளுவான். இனி இரண்டாவது -பாத்திரங்களின் மற்றும் கதைச் சூழமைவுகளின் இயங்கு திசை வேகத்தின் காரணமாக, கதை எனும் அந்தத் தளத்தினுள் ஒரு முனைப்புப் பெற்று வெடிக்கப் பெறுவது. இத்தகைய தீர்வு, வெளிப்படையாக இருப்பது போல் தோன்றினாலும், இது பல சமயங்களில், படைப்புகளின் கலைத்தன்மையோடு நெருக்கமாக இணைந்திருக்கக் கூடியதேயாகும். இந்த இரண்டுமல்லாது, தீர்வு, வெறுமனே நீதி சொல்லுவதாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக் கூடாது என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. சமூகஉணர்வும் வேண்டும் அதேபோது கலைத்தன்மையும் வேண்டும் என்று இத் திறனாய்வு முறை வலியுறுத்துகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:50:03(இந்திய நேரம்)