Primary tabs
-
ஒரே இடத்தில் தொடர்ந்து வாழாமல், இடம்விட்டு இடம் நகர்தல், ஊர் விட்டு வேற்றூர் வாழ்தல் என்ற பொதுவான பொருளை இது குறிக்கிறது என்றாலும், இன்று ஒரு கலைச்சொல்லாக (technical term) வழங்குகிறது. சமூக நகர்வுகள் (Social mobility) குடியேற்றங்கள், இருவகைப்பட்ட பண்பாடுகளின் உறவுகள், மொழி உறவுகள் என்ற பொருள்நிலை, புலம்பெயர்வு என்ற சொல்லுக்கு உண்டு. பிழைப்பும் பாதுகாப்பும் நாடிச் செல்லுகின்ற சாதாரணச் குடிமக்களிலிருந்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள், கணினிப் பொறியாளர்கள், பணம் குவிக்கும் கனவுகளோடு வணிகர்கள், தஞ்சம் அடையும் அரசியல் போராளிகள் என்று இவர்கள் வரை புலம்பெயர்வோர் பல திறத்தினர்; பல தரப்பினர். புலம்பெயர்வுக்குக் காரணங்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம்.
(1) இயற்கையின் சீற்றம், வறுமை முதலியன. (2) யுத்தங்கள் (3) வேற்றுநாட்டு ஆதிக்கங்கள் (4) இனக்கலவரங்கள், பெருந்தேசியவாத அரசியல் தரும் நெருக்கடிகள், சமய வழக்கு (5) புதிதாய் வசதிகளும் வாய்ப்புகளும் பற்றிய தேட்டங்கள் / விருப்பங்கள்.
இவை பொதுவான காரணங்கள். வெவ்வேறு சூழல்களின் பின்னணியில் நடைபெறும் வெவ்வேறு வகையான புலம்பெயர்வுகளாலும் புலம் அமர்வுகளாலும், வாழ்நிலை, சூழ்நிலை வேறுபாடுகளும் பொருளாதார - பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களைப் புலம்பெயர்வு இலக்கியம் (Emigrant Literature) என்று அழைப்பர்.
பிறந்து வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியிலிருந்து அல்லது தேசத்திலிருந்து, அகன்று/ பெயர்ந்து, வேறுநாடு சென்று, நீண்ட காலமாகவோ, நிரந்தரமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைப்புண்டு திரிதலைப் புலம்பெயர்வு என்பது குறிக்கின்றது. இரண்டு வேறு நாடுகள், இரண்டு வேறு மொழிகள், இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒருநிலை, இந்தப் புலம்பெயர்வில் காணப்படும் நிலையாகும். இதனுடைய ஆங்கிலச்சொல் Diaspora என்பதாகும். இது disappearing என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. மொழி, பண்பாடு முதலானவற்றில் பொது அடையாளங் கொண்ட குழுவினர், தம்முடைய பாரம்பரியமான நிலங்களை அல்லது தேசங்களை விட்டு அகன்று, வேற்றுப்புலம் அல்லது வேற்றுநாடுகளில் சிதறிப் போதல் (scattering of persons or groups) என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பகுதிகளில் - உதாரணமாக, இந்தியாவிற்குள், தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்திற்கோ, மேற்குவங்க மாநிலத்திற்கோ சென்று வசிப்பதை, அதுவும் ஒரு வகையில் இடம்விட்டு இடம் நகர்தலாக இருந்தாலும் புலம்பெயர்வு என்று அழைப்பதில்லை. புலம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியம் இருவேறு நாடுகள் சார்ந்த புலம்பெயர்வாக இருக்க வேண்டும். இருவேறு பண்பாட்டுச் சூழமைவுகளும் இருவேறு மொழிநிலைகளும் அடுத்த நிலையில் தளங்களாக அமைகின்றன. புலம்பெயர்வு என்ற கருத்தமைவில் அடிப்படையாக உள்ள உணர்வுநிலை தம்முடைய நாடு, மொழி, பண்பாடு முதலியற்றை ஒட்டியமைகிற இன அடையாளம் பற்றிய தேடலே ஆகும். புலம்பெயர்வு இலக்கியங்களில் இந்த உணர்வுநிலை பல வடிவங்களில் வெளிப்படக்கூடும். திறனாய்வாளன் இவற்றை உற்றறிந்து புலப்படுத்த வேண்டும். உதாரணமாக தம் தாயகமாகிய ஈழத்தைவிட்டுப் பிரிந்து கனடாவில் வாழும் சேரன் முதலிய கவிஞர்களின் கவி வரிகளில் இந்த மனநிலையைப் பார்க்கமுடிகிறது.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி. உலகத்தில் பல இனங்கள், பல்வேறு காலங்களில் தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர். மிக நீண்டகாலமாக இது நடந்து வருகிற ஒன்றுதான். புலம்பெயர்வு (Diaspora) பற்றிய கருத்துநிலை முதலில், பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்கும் அலைகின்ற/அலைந்து திரிந்த யூதர்களின் (Jews) வாழ்நிலைகளைக் குறிப்பதாகவே எழுந்தது. ஜெரூசேலம் (Jerusalem) நகரைச் சேர்ந்த ஆப்ரஹாம் உள்ளிட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர் சபித்தாராம்; ‘நீங்கள் பிறந்த, உங்கள் தந்தையர் நாட்டைவிட்டு உடனே வெளியேறக் கடவீர்கள் ! வேற்று தேசங்களில் அலைந்து திரியக் கடவீர்கள் !” - இந்தச் சாபத்திற்கு விமோசனம் இல்லை. எனவே யூதர்கள் பல்வேறு நாடுகளிலும் அலைகிறார்கள்; குடியேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவே Diaspora என்ற கருத்துநிலைக்கு மூலமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இசுரேயில் (Isreal) என்று இவர்களுக்கென ஒரு நாடு பிறந்திருக்கிறது; இருப்பினும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மிகப் பல நாடுகளில் (இந்தியாவிலும் தான்; கேரளாவில்) இவர்கள் குடியமர்ந்திருக்கிறார்கள்.
புலம்பெயர்வு அதிகம் நடந்த இடம் என்று பார்த்தால் மத்திய ஆசியா - மெசபடோமியா, ஐரோப்பா முதலியன உள்ளிட்ட பகுதிதான். தொடக்கத்தில் அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆரியர்கள். அதன்பின் தொடர்ந்து, அதே இனத்தோடு உறவுடைய ஐரோப்பியர்கள். உலகத்தின் பல நாடுகள், ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளாக ஆகியிருக்கின்றன. இருப்பினும் தொழிற்புரட்சி மற்றும் இரண்டு உலகப் போர்கள் ஆகியவற்றுக்குப்பின், பல தேசிய இனங்களின் புலம்பெயர்வுகள் கணிசமாகவே காணப்படுகின்றன. 2005 ‘சர்வதேச ஒருங்கிணைவு மற்றும் அகதிகள் சங்கம்’ (I.I.R.N) என்ற அமைப்பின் கணக்குப்படி, தம் நாடுகளையும் உறவுகளையும் விட்டுப் புலம்பெயர்ந்து சென்றோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ இருநூறு மில்லியனையும் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.