தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- புலம்பெயர்வு சில விவரங்கள்

    • நவீன காலத்தில் (Modern period) தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியை இரண்டு வகையாகப் பகுக்கலாம். ஒன்று - இந்திய சுதந்திரத்திற்கு முன்னர். இரண்டு - இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு. சுதந்திரத்திற்கு முன்னர்ச் சென்றவர்கள் இந்தியாவை அன்று ஆண்ட ஆங்கிலப் பேரரசு, பிரெஞ்சுப் பேரரசு, போர்த்துகீசிய அரசு ஆகியவற்றினால் அவர்களுடைய ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஃபிஜி, பர்மா முதலிய பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் அங்கே துயரம் மிகுந்த அநாதரவான வாழ்க்கையை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர், முதலில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப்     பணிக்காகப் போனவர்கள், முதல் அலை; எழுபதுகளுக்குப் பிறகு போனவர்களில் பெரும்பான்மையோர் கணினிப் பொறியாளர்கள், இரண்டாவது அலை.

      தமிழர்களில் துயரமான சூழ்நிலைகளுக்கு இடையே தாயகம் விட்டு வெளியேறியவர்கள், ஈழத்துத் தமிழர்களே. இலங்கையின் பெருந்தேசிய இனவாத அரசியலே இதற்குக் காரணம். 1956-இல் இலங்கை அரசினால் புகுத்தப்பட்ட ‘சிங்களவர்கள் மட்டுமே’ என்ற நடவடிக்கைகள் முதற்கொண்டு, பின்னர் 1972 அதன் பின்னர் 1983இல் நடந்த பெருங்கலவரத்தையொட்டிக் கணக்கற்ற தமிழர்கள் அடைந்த பெருந்துயரம், நிராதரவான நிலை என்ற இந்தச் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடா, ஜெர்மனி, நார்வே, பிரிட்டன் முதலிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள்.

      தமிழ் இனத்தவர்கள், ஏறத்தாழ எழுபது மில்லியன்பேர் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். ஏற்கெனவே கூறியது போல, பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்ற ஆதிக்க அரசுகளால்     18-ஆம்     நூற்றாண்டிலிருந்து     தொடங்கி ஆயிரக்கணக்கான பேர் மொரீஷியஸ், ஃபிஜி, ரியூனியன், தென்னாப்பிரிக்கா, இலங்கை (மலையகம்), மலேசியா, பர்மா முதலிய நாடுகளுக்குக் கரும்புத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள்,     இரப்பர்த் தோட்டங்கள் முதலியவற்றை உருவாக்கவும், தொடர்ந்து அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அனுப்பப்பட்டார்கள். அண்மைக் காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு முதலிய செல்வந்தர் நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்களிடையே பல தரங்களும் பல நோக்கங்களும் உண்டு. தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இவர்கள் தங்களிடையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பது, புலம்பெயர்வு ஆய்வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்.

      6.2.1 புலம்பெயர்வுப் பிரச்சினைகள்

      ஏற்கெனவே தாயகத்தில் ஓரளவு வசதிகள் உடையவர்கள், மேலும் கூடுதல் வசதிகளும் உயர்நிலைகளும் வேண்டி, வெளிநாடுகளில் குடிபெயர்வது என்பது வேறு; பிரச்சினைகள் இருப்பினும் அவை குறைவே. ஆனால், நெஞ்சத்தில் அழுந்தும் சுமைகளோடும், வேறு வழியில்லை என்ற நிலைகளோடும் புலம்பெயர்ந்தோர் படுகிற சிரமங்களும் கசப்பான அனுபவங்களும் அதிகமாகும். முக்கியமாக இத்தகைய நிலைகளில் ஏற்படுகிற பிரச்சினைகள் பொதுவாக நான்கு. அவை :

      (1) வேற்று நாடுகளில் குடியமர்ந்த பின்னும், தங்களுடைய      தாயகம், தங்களுடைய பாரம்பரியம், சொந்தபந்தம்      முதலியவை பற்றிய உணர்வுகள், பிரிவுகளின் எதிரொலிகள்      முக்கியமான பிரச்சினையாகும்.

      (2) வேற்றுநாட்டில், வேற்றுச்சூழலில் வேர்விடுகின்ற முயற்சியும்      அதன் விளைவுகளும் தருகிற பிரச்சனை.

      (3) தாயகத்துச்     சூழல்கள்,     வாழ்ந்த     வாழ்க்கைகள்      ஆகியவற்றுக்கும் இப்போது குடியேறிய நாடுகளில்      ஒன்றாவதற்கு முயலும் முயற்சிகளுக்கும் இடையே      தம்முடைய சுய அடையாளம் பற்றிய நெருக்கடிகள்.

      (4) சில காலங்களுக்குப் பிறகு, மீண்டும் தம் தாயகம்      திரும்பவேண்டும் என்ற சூழ்நிலைகள் ஏற்படலாம்;      மனநிலைகள் உருவாகலாம்; வருவதற்குரிய முயற்சிகள்      நடைபெறலாம் வந்து மீண்டும் அமரலாம்; அவ்வாறு      அமரும்போது, முன்னால் இருந்த வாழ்வு, உறவு      முதலியவை பலவித உணர்வுகளை ஏற்படுத்தலாம்.      இவையும் முக்கியமான பிரச்சினைகளாகும்.

      புலம்பெயர்வு வாழ்க்கையில் இத்தகைய பிரச்சினைகளும் இவற்றைச் சார்ந்தனவும் பலவாக ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களில் இத்தகைய உணர்வுநிலைகளைக் கண்டறிந்து விளக்குதல் வேண்டும். நாம், கடைசியாகச் சொன்ன ‘மீண்டும் தாயகம் திரும்புதல் - அதிலே சந்திக்கின்ற பிரச்சனைகள்’ என்பதனை ஹெப்சியா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்னும் நாவல் மிக அழகாகச் சித்திரிக்கின்றது. பர்மாவுக்குச் சென்ற தமிழ்க் குடும்பம், அங்கு ஏற்பட்ட போர் முதலிய சூழல்கள் காரணமாக மீண்டும் தாயகம் வருகிறது. ஆனால், அதனால் படுகின்ற சிரமங்கள் பல. இதனைப் புத்தம் வீடு ஒரு எதார்த்தமான படப்பிடிப்பாக்கிக் காட்டுகிறது.

      தன் மதிப்பீடு : வினாக்கள் - I
      1.
      புலம்பெயர்வு என்ற கருத்தமைவுக்கு அடிப்படையாக உள்ள உணர்வுநிலை யாது?
      2.
      Diaspora என்ற கருத்துநிலைக்கு மூலாதாரமாக இருக்கும் ‘வேற்று தேசங்களில் அலைந்து திரியும்’ இனம் எது?
      3.
      உலக அளவில் புலம்பெயர்ந்து வேறுவேறு நாடுகளில்     வாழுகின்றவர்களுடைய     மொத்த எண்ணிக்கை என்ன?
      4.
      இந்த நவீன காலத்தில் தமிழகத்திலிருந்து வேறுநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற இரண்டு காலப்பகுதிகள் யாவை?
      5.
      புலம்பெயர்ந்தோர் மீண்டும் தாயகம் திரும்புதலையும் அதிலே     சந்திக்கின்ற     பிரச்சினைகளையும் சித்திரிக்கின்ற தமிழ் நாவல் எது?

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:01:29(இந்திய நேரம்)