Primary tabs
-
புலம்பெயர்வு என்ற சொல், சங்க இலக்கியத்திலேயே கிடைக்கிறது. அதுபோல, புலம்பெயர்ந்த நிலைகள், நிகழ்வுகள் குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன. ‘மொழிபெயர்தேயம்’ என்ற தொடர், புலம்பெயர்வு நிலையைக் குறிப்பிடும் ஒரு தொடர். இது அகநானூறு முதலியவற்றில் பல இடங்களில் காணப்படுகிறது. மேலும் ‘வேறுபுலம்’ (புறம் 254), ‘அறியாத் தேயம்’ (அகம் 369) முதலிய சொற்களும் கிடைக்கின்றன. தமிழில், புலம்பெயர்வு வாழ்நிலையையும் அதன் காரணமாக உள்ள பொருளாதாரச் செயற்பாடுகளையும் குறிப்பிடுகிற முதல் நூல் பட்டினப்பாலை என்பதாகும். ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் செல்வமும் கொண்ட புகார் நகரத்தின் சிறப்பினை அது இப்படிச் சொல்கிறது.
தொல் கொண்டித் துவன் றிருக்கைப்
பல்லாய மோடு பதிபழகி
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.பல பொருட்கள், அவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்ற பல குழுக்கள் (ஆயங்கள்) - அவர்கள் பதி, இடம், ஊர் பழகிவிடுகிறார்கள். மொழி ஒன்றல்ல, மொழிகள் பல அங்கே பேசப்படுகின்றன. இப்படி வேற்றிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள், அந்த ஊர் மக்களோடு கலந்து, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்கள், மொழி இன வேறுபாடின்றி மகிழ்ச்சியோடிருந்தார்கள் என்ற புலம்பெயர்வு வாழ்க்கையின் சீரிய சிறந்த பண்பினை இப்படி உருத்திரங்கண்ணனார் காட்டுகிறார். இதே கருத்தினை ஏறத்தாழ இதே சொற்களில் சிலம்பும் இதே மாதிரிப் புகாரை வருணிக்கிறபோது சொல்லுகின்றது. ‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்’ - கலந்து இருந்து உறைவதாக அது கூறுகின்றது.
ஆனால், தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்களை இவ்விலக்கியங்கள் கூறுகின்றனவே தவிர, தமிழகத்து மக்கள், வேற்றுப்புலங்களுக்குப் பெயர்ந்து சென்றார்கள் என்று கூறவில்லை. ஒருவேளை இது அதிகம் இல்லாமலிருந்திருக்கலாம். மேலும் தமிழ் மக்களின் உளவியல், இருக்கிற இடத்தில் சுகமாக இருத்தல் என்பதனையே சுற்றி வந்திருக்கிறது. சிலம்பு, இதனை இரண்டு இடங்களில் புகார் பற்றிப் பேசுகிற போதும், மதுரை பற்றிப் பேசுகிற போதும் கூறுகின்றது.
பதியெழு பறியாப் பழங்குடி தழீஇய
பொதுவறு சிறப்பிற் புகார் (1 : 15-16)என்று புகார் நகர் பற்றியும், அதே பாணியில்,
பதியெழு யறியாப் பண்புமேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர் (15 : 5-6)என்று மதுரை பற்றியும் சிலம்பு வருணிக்கிறது. எனவே, வெளியிலேயிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறலாம். ஆனால், இங்கே இருந்துபோய் வேற்றுப் புலம்படர்வது கூடாது என்ற மனநிலை அன்று இருந்திருக்கிறது போலும் ! இதனைத் தொட்டுக் காட்டுவதும் இதற்குரிய வரலாற்றுப் பின்புலங்களைக் கண்டறிவதும் திறனாய்வாளனின் வேலையாகும்.
6.3.1 பாரதியும் புதுமைப்பித்தனும்
கி.பி.1777-இல் முதன்முதலாகத் தமிழர்கள் சிலரை, பிரிட்டன் குடியேற்ற அரசு ஃபிஜியத்தீவிற்கு அனுப்புகிறது. பின்னர், தொடர்ந்து பலரை அனுப்புகிறது. பெண்களும் அனுப்பப்படுகின்றனர். கரும்புத்தோட்டம் பயிரிடவேண்டும்; விளைவிக்கவேண்டும்; விளைந்த கரும்புகளை வெட்டி அனுப்ப வேண்டும். தமிழர்கள் கடினமாக உழைத்தார்கள். ஆனால் பலன்? தாய்நாட்டை மறந்து, தொடர்ந்து, உடல்நலம் இழந்து வாடிப் போனதுதான் மிச்சம். பத்திரிகையாளனாக இருந்த பாரதிக் கவிஞனுக்கு இது தெரியும். அந்தப் புலம்பெயர் வாழ்வின் அநாதரவான நிலைமைகளைக் கண்டு நெஞ்சங் கலங்குகிறார். அவருடைய “பிஜித் தீவிலே ஹிந்துஸ்திரீகள்” எனும் இசைப்பாடல்தான், இன்றைத் தமிழில் தோன்றிய முதல் புலம்பெயர்வுக் கவிதை என்று சொல்ல வேண்டும். புகலிடத்தில் அடைகிற துயரம், தாய்நாடு பற்றிய ஏக்கம், ஆதரவற்ற நிலை என்பவற்றைச் சொல்லுவதோடு அவர்களுடைய துயரத்தில் வாசகர்கள், மனத்தளவில் பங்கு பெறுகிற ஒரு நிலையையும் இக்கவிதை உருவாக்குகிறது. கரும்புத்தோட்டத்திலே. . . என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப்பாடல் :
நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுத் திறல்கெட்டுப் போயினர்.பாரதியின் இந்தக் கவிதைக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழிந்து, புதுமைப்பித்தன் துன்பக்கேணி (இது பாரதியின் கவிதைச் சொல்) என்று ஒரு நீண்ட கதை (குறுநாவல்) எழுதினார். திருநெல்வேலி புஞ்சைக் காட்டுப் பகுதியில் வறுமையின் பிடியில் இருந்த மருதி எனும் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறாள். அங்கே புகலிடத்தில் கங்காணிகளாலும் பரங்கியர்களாலும் அவர் துன்பப்படுகிறாள். தேயிலைத் தோட்டத்தில் அவளுடைய இளமை, உழைப்பு எல்லாம் வீணாகிப் போக, திரும்பத் தாயகம் வருகிறாள். இங்கும் இருக்க முடியாமல் மீண்டும் இலங்கை செல்கிறாள். புகலிடத்தில் தொடர்ந்து அவள் படும் சிரமங்களைப் புதுமைப்பித்தன் சித்திரிக்கின்றார். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் புதுமைப்பித்தனுடைய துன்பக்கேணியே முதல் கதையிலக்கியமாகும். இதன் பின்னர், இன்னுமொரு 25 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான், தமிழகத்திலிருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றவர்களைப் பற்றி அந்த மக்களாலேயே அல்லது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்களால் புலம்பெயர்வு இலக்கியம் படைக்கப்படுகிறது. அது ‘மலையக இலக்கியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.