Primary tabs
-
6.5 தொகுப்புரை
புலம்பெயர்வு என்பது மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும். முதன்முதலில் பல நாடுகளில் படர்ந்துகிடக்கும் யூதர்களின் வாழ்நிலைகளை ஒட்டித்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது. எனினும் இன்று அது விரிவான பொருளைப் பெற்றுள்ளது. சமூக-பண்பாட்டு வரலாற்றறிஞர்கள் பலரின் கவனத்தைப் புலம்பெயர்வு பற்றிய ஆய்வு கவர்ந்துள்ளது. பழந்தமிழகத்தில் பல வெளிநாடுகளிலிருந்து (கிரேக்கம், எபிரேயம் மற்றும் வடக்கே மகதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து) புலம்பெயர்ந்து இங்கே இனிதே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழகத்தில், தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வது போற்றப்படவில்லை. ‘பதியெழுபு அறியாப் பழங்குடி’ என்பது போற்றப்பட்டது.
தமிழர்களில் பல பகுதியினர், பிரிட்டீஷ் - குடியேற்ற ஆதிக்க அரசு, பிரெஞ்சுக் குடியேற்ற அரசு, போர்த்துகீசியக் குடியேற்ற அரசு ஆகியவற்றினால் கி.பி.18ஆம் நூற்றாண்டினிறுதியிலிருந்து, அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய பின்னணியிலிருந்த ஏழ்மை, அவர்களுடைய புகலிடங்களும் தொடர்ந்தது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னர்ப் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றவர்களின் பின்புலங்களும் நன்றாக இருந்தன; புகலிடங்களிலும் அந்த வசதிகளைப் பெற்றுள்ளார்கள். ஆயினும் இன அடையாளம் பற்றிய நெருக்கடிகள் அவர்களிடம் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
இந்தியத் தமிழகத்திலிருந்து இலங்கை மலையகங்களில் குடியேறிய மக்களிடமிருந்தும், ஈழத்திலிருந்து பேரினவாத அரசியல் தந்த நெருக்கடிகள் காரணமாக நார்வே, கனடா முதற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற தமிழர்களிடமிருந்தும் கணிசமாகப் புலம்பெயர்வு இலக்கியம் வெளிவந்தது. திறனாய்வுக்கு நல்ல தளங்களையும் புதிய பரிமாணங்களையும் இந்த இலக்கியங்கள் தருகின்றன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.தமிழில் புலம்பெயர்வு வாழ்நிலையையும் அதன் காரணமாக உள்ள பொருளாதாரச் செயற்பாடுகளையும் குறிப்பிடுகின்ற முதல் தமிழ் நூல் எது?2.‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்; கலந்து இனிது இருந்தார்கள்’ என்று சொன்ன தமிழ் நூல் எது?3.தற்காலத் தமிழ் இலக்கியவுலகில் முதன்முதலாகப் புலம்பெயர்வு பற்றிப் பாடல் எழுதிய கவிஞர் யார்? அந்தப் பாடலின் தலைப்பு என்ன?4.
இலங்கை மலையகப் பகுதியில் இந்தியத் தமிழர்கள் எதற்காக, எந்தப் பணிக்காகக் குடியேற்றப்பட்டார்கள்?
-