தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diploma Course - D06146- இலங்கை மலையகம் எனும் புகலிடம்

  • 6.4 இலங்கை மலையகம் எனும் புகலிடம்

    இலங்கை மலையகங்களில் வெள்ளைக்கார முதலாளிகளுக்குத் தேயிலைத் தோட்டங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அனுபவப்பட்ட கூலிகள் கிடைத்தார்கள். முதன்முதலாக 1824-இல் தமிழகத்திலிருந்து 16 குடும்பங்கள ் கப்பலேற்றி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். 1920வரை இது தொடர்ந்தது. அங்கே, ரத்தம் உறிஞ்சும் அட்டைக் கடிகளிடையேயும், உழைப்பையும் இளமையையும் உறிஞ்சும் கங்காணிகள், பறங்கி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார்களிடையேயும் தமிழர்கள், தமிழ்ப் பெண்கள் பெரும் துன்பங்களுக்குள்ளானார்கள். இலங்கை சுதந்திர நாடாக ஆன பிறகும் கொடூரம் தொடர்ந்தது. இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமையோ வாழ்வுரிமையோ அளிக்கப்படவில்லை. ஒப்பந்தங்கள் பல; ஆனால், எல்லாம் வெற்றுத்தாள்களாகிவிட்டன.     இத்தகைய     குமுறல்களின் வெளிப்பாடுதான், இலங்கை மலையகப் பகுதிகளிலிருந்து வந்த புலம்பெயர்வு இலக்கியங்கள்.

    கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய மூன்று வகைகளிலுமே குறிப்பிடத்தக்க எழுத்துகள் இங்கிருந்து வந்தன. குறிஞ்சித் தென்னவன், சுபேயர் (Zubair) சாரண கையூம், புஸ்ஸெல்லா இஸ்மலிகா, மலைத்தம்பி முதலிய கவிஞர்களும், என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், மாத்தளை சோமு முதலிய சிறுகதை எழுத்தாளர்களும், ராஜு , கே.ஆர்.டேவிட், தி.ஞானசேகரன், தெளிவத்தை ஜோசப், சி.வி.வேலுப்பிள்ளை முதலிய நாவலாசிரியர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

    புலம்பெயர்ந்துபோய்ப் புகலிடத்தில் பொல்லாத் துயரங்களை நாடோறும் அனுபவிக்கும் அவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லுவதில் இந்தப் புனைகதையிலக்கியங்கள் சாதனைகள் செய்துள்ளன என்று சொல்லவேண்டும் . கங்காணிகள் தருகிற துன்பங்கள், காடையர் எனும் சிங்களவர் தருகிற தொல்லைகள், இலங்கை அரசு செய்கிற உதாசீனங்கள், இவற்றோடு தாயகமாம் தமிழகத்தில் அரசாங்கமும் அதிகாரவர்க்கமும், மக்களும் படுத்துகிறபாடுகள் இவற்றிற்கிடையே படும் சொல்லொணாத் துயரங்கள் தாம் மலையக எழுத்துகளின் மையங்கள். இந்தியர் தமிழகம், தம்மைச் சேர்ந்த இலங்கை மலையகத்துத் தமிழர்களை எவ்வளவு அலட்சியமும் கொடுமையும் படுத்துகிறது     என்பதனை     சி.வி.வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் என்ற நாவல் அழகாகச் சித்திரிக்கின்றது. இலங்கை     மலையகத்துத் தமிழ் இலக்கியம், தமிழகத் திறனாய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளதெனினும் மேலும் விரிவாக ஆராய்வதற்கு இதிலே நிறைய இடம் உண்டு.

    6.4.1 ஈழத்தமிழர் புலம்பெயர்வு

    உலகிலுள்ள மக்கள் இனங்கள் பல, புதிய புகலிடம் தேடிப் புலம்பெயந்துள்ளன என்றாலும், அவர்களுள் ஈழத் தமிழர்களின் நிலையே மிகவும் கொடூரமானதாக உள்ளது என்பது ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். குறிப்பாக 1983-க்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், இலங்கையின் பேரினவாத அரசியல் காரணமாக அங்கே வாழமுடியாத நிலையில், பல நாடுகளுக்கு குறிப்பாகக், கனடா முதலிய நாடுகளுக்குப் பெயர்ந்து சென்றார்கள். அந்நாடுகளில் இவ்வாறு குடியேறுவதற்குச் சட்டப்பூர்வமான அனுமதிகள் உண்டு. அந்நாடுகளில் வசதியான சூழலில் இவர்கள் வாழவில்லை. இருப்பினும் புகலிடங்களில், குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவராக வாழ்கின்றனர்.

    புலம்பெயர்ந்த பல்வேறு இனத்தவருள், ஈழத்தமிழ் மக்களே, அதிகமாக இணையத்தளங்களை (Web-sites) பயன்படுத்துவோர் ஆவர். என்ன என்ன வகைகளில் இவை பயன்படுகின்றன?

    (1) பல்வேறு நாடுகளிலேயுள்ள தமிழர்களிடையே கருத்துப்      பரிமாற்றங்கள் முக்கியமான பயன்பாடாகும்.

    (2) மேலும், தாய்நாட்டுத் தமிழர்களுக்குச் செய்திகள் சொல்லுதல்,      அவர்களிடமிருந்து தம் நாட்டின் நிலவரங்களையறிதல்.

    (3) இலங்கையிலே நடக்கும் பலவிதமான எழுச்சிகளுக்கு      ஆதரவாக உலகத் தமிழர்களின் ஆதரவைத் திரட்டுதல்.      இத்தகைய பயன்பாடுகளை நோக்கமாகக் கொண்ட இலக்கிய      இதழ்கள், புத்தகங்கள் முதலியவற்றை வெளியிடுகிற      முயற்சிகளும் நடைபெறுகின்றன.

    புலம்பெயர்ந்து சென்ற தமிழ் இனத்தவருள், புகலிடங்களிலிருந்து தம்முடைய மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஈழத்தமிழர்களே யாவர். எனவே இவர்களிடமிருந்து இலக்கிய ஆக்கம் தொடர்ந்தும் பலவாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை, தமிழகம் ஈழம் உள்ளிட்ட தாயகப் பகுதிகளிலிருந்து வருகிற எழுத்துகளுக்குச் சளைப்பில்லை என்று சொல்லுகிற அளவிற்குப் பல தளங்களையும், பல தரங்களையும் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றன. ஈழத்தமிழர் புலம்பெயர்வு இலக்கியங்களிலே காணப்படுகின்ற முக்கியச் செல்நெறிகளும் பண்புகளும் கவனிக்கத்தக்கன. அவை:

    (1) தம் தாயகம் பற்றியும், தம்முடைய மரபு, பண்பாடு, மொழி      பற்றியும் திரும்ப நினைத்தல் ; நினைவூட்டிக் கொள்ளுதல்.

    (2) தாயகத்திலுள்ள அரசியல் நிகழ்வுகளையும் நிலைகளையும்      விமரிசனம் செய்தல்.

    (3) புகலிடங்களில் படுகிற துயரங்கள், புகலிடங்களில் இணைந்து      ஒன்றி விடுவதற்கான முயற்சிகள், பண்பாட்டுக் கலப்புகள்      முதலியவற்றை வெளிப்படுத்துதல்.

    (4) தம் இனத்தவரிடையேயுள்ள சாதியம், பெண்ணடிமைத்தனம்      முதலிய முரண்பாடுகளைச் சுயவிமரிசனம் செய்தல்.

    (5) மேலைநாட்டுச் சிந்தனை முறைகளின் தாக்கத்தினால்      பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக்      காலனித்துவம், நவீன - பெண்ணியம் முதலிய      கருத்துநிலைகளுக்குட்பட்டுப் புதிய எழுத்துமுறையை      உருவாக்குதல்.

    இவை ஈழத்துத் - தமிழ்ப் புலம்பெயர்வு இலக்கியத்தில் வெளிப்பட்டு நிற்கும் பண்புகள். ஆனால், இவை யெல்லாவற்றிற்கும் செயல்கள், சிந்தனைகள், எழுத்துகள் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் உணர்வு, அடையாளம் தேடுதல் (Ethnic Identity) என்பதேயாகும்.

    6.4.2 பிற முயற்சிகள்

    தமிழர்களின் புலம்பெயர்வு, விசாலமான தளங்களைக் கொண்டது; பல தரப்பட்ட சூழல்களைக் கொண்டது. ஆயின், இதனை ஒப்புநோக்க இலக்கியங்கள், இதுகாறும் கூறியன தவிரவும் ஒருவகையில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பர்மாவில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் குடியிருந்து அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிப்புச் செய்தார்கள். இனக்கலவரம், உலகப் போர் காரணமாகத் தமிழர்கள் பெரும்பகுதியினர் திருப்பியனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் பற்றிய இலக்கியங்கள் மிகக் குறைவேயாகும். ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றம் கலைஞர் மு.கருணாநிதியின் பராசக்தி (நாடகமாக எழுதப்பட்டு பிரசித்தமான திரைப்படமாக வந்தது) முதலியவை குறிப்பிடத்தக்கன. இவற்றில் பர்மா போய் இருந்து பின்னர் திரும்பி வந்தோரின் துயரங்கள் நன்கு சொல்லப்பட்டிருக்கின்றன.

    மலேசியத் தமிழர்கள் தமிழ் உணர்வும் பண்பாட்டுணர்வும் அதிகம் உடையவர்கள். 1910-20 என்ற காலப் பகுதியில் இங்கிருந்து நாவல்கள் தோன்றத் தொடங்குகின்றன. 1950-60 காலப்பகுதியில் ம.இராமையாவும் மா.செ.மாயத்தேவனும் சேர்ந்து எழுதிய நீர்ச்சுழல் என்ற நாவலும், அறிவானந்தம் எழுதிய மல்லிகா என்ற நாவலும், முழுக்க மலேசியப் பின்னணியைக் கொண்டு எழுந்தவையாகும். தொடர்ந்து மலேசியாவிலிருந்து பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. மலேயாவில் உள்ள ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்கள் படுகிற துயரங்களை பால்மரக் காட்டிலே என்னும் நாவலாக எழுதியவர் தமிழகத்து அகிலன் ஆவார். சிங்கப்பூர்த் தமிழர்களிடமிருந்தும் பல கவிதைகளும் புனைகதைகளும் வெளிவந்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:54:57(இந்திய நேரம்)