தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10241-5.1 வானொலி நாடகம்

  • 5.1 வானொலி நாடகம்

    வானொலி நாடகம் என்பது ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கலை எனலாம். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் வீட்டினுள் அடைந்து கிடந்த பொதுமக்களுக்காக பி.பி.சி நிறுவனம் நாடகங்களை ஒலிபரப்பத் தொடங்கியது. இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. நாடக ஒலிபரப்பில் சென்னை வானொலி நிலையம் முன்னோடியாக இருந்தது.

    வானொலியில் முதலில் சிறுகதைகளை நாடகமாக்கி நடிகர்களைக் கொண்டு பேசச் செய்து ஒலிபரப்பினார்கள். பின் நாவல்களை நாடகமாக்கினார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டு புதிய நாடகங்களை எழுதச் செய்து ஒலிபரப்பினார்கள். இவ்வாறு வானொலியில் படிப்படியாக நாடகம் வளர்க்கப்பட்டது. நாடகப் போட்டிகளும், நாடக விழாக்களும் நடத்தப்படுகின்றன. இதனால் வானொலி நாடகம் மேலும் வளர்ச்சி பெறுகிறது.

    5.1.1 நாடகத்தின் தன்மை

    நாடகத் தயாரிப்பாளர், நடிகர், ஒலிப்பதிவாளர் முதலானவர்களின் ஒத்துழைப்பால் வானொலி நாடகம் உருவாக்கப்படுகிறது. வானொலி, தனது நாடக நிகழ்ச்சிகளுக்குக் குரலையே பெரிதும் நம்பியிருக்கிறது. அவ்வகையில் இது ஒரு கேள்விப் புலன் சாதனமாக இருக்கிறது.

    குரலின் ஆற்றல்

    வானொலி நாடகம், கேட்கும் ஒவ்வொருவரிடமும் தனித்த உணர்வுகளையும், கற்பனைகளையும் தூண்டுகிறது எனலாம். குரல் மூலமும், உச்சரிப்பின் மூலமும், பேசப்படும் செய்திகளின் மூலமும் கற்பனைக் காட்சி உருவாக்கப்படுகின்றது. நாடகம் கேட்பவர் நிகழ்ச்சிகளை மனக் கண்ணில் கண்டு அனுபவிக்கிறார்; பாத்திரங்களின் முகபாவ மாற்றங்கள், அங்க அசைவுகள், செயல்கள் முதலான எல்லாவற்றையுமே ஒலியின் மூலம்தான் உணர்கிறார்.

    உணர்த்தும் ஆற்றல்

    அளவு, இடம், நேரம், வேகம், பண்பு போன்றவற்றை மேடை நாடகத்திலோ, தொலைக்காட்சியிலோ முழுஅளவில் உண்மைத் தன்மையுடன் படைத்துக் காட்ட முடியாது. பறக்கும் விமானத்திற்குள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளை மேடையில் காட்டுவது கடினம். ஆனால் வானொலியில் இதை எளிதாகச் செய்துவிடலாம். விமான ஒலியைப் பின்னணியில் ஒலிபரப்பினால் போதும்.

    கட்டமைப்பு

    எல்லா நாடக வகைகளுக்கும் இருப்பது போல வானொலி நாடகத்திலும் சிக்கல் (crisis), போராட்டம் (conflict), உச்சக் கட்டம் (climax), முடிவு (conclusion) ஆகியன இருக்க வேண்டும். காட்சியின் துணையின்றி ஒலியின் துணையால் மட்டும் வானொலி நாடகம் அமைவதால் அதில் உணர்ச்சிச் சுவை மிக்க பகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

    படைப்பாளர் தெளிவு

    நாடகப் படைப்பாளர், எழுதத் தொடங்கும் முன் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடகம் யாருக்காக எழுதப்படுகிறது? நாடகத்தில் சொல்லப் போகும் கருத்து என்ன? நாடகத்தின் கால அளவு என்ன? என்பன பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும்.

    படைப்பின் தெளிவு

    நல்ல கட்டமைப்பு உடையதாகப் படைப்பு திகழ வேண்டுமானால் கீழ்க்காணும் நெறிகளில் அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    (1) நாடகம், எப்படி வளரப் போகிறது என்று நேயரை எதிர்பார்க்க வைப்பதாக இருக்க வேண்டும்.

    (2) நாடகக் கதையின் உச்சக் கட்டத்தை நோக்கி ஒவ்வொரு காட்சியும் வளர     வேண்டும்.

    (3) நாடகத்தின் மையச் சிக்கல் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

    (4) ஒவ்வொரு பாத்திரமும் பேசுகிற வசனம் தெளிவாக இருக்க வேண்டும்.

    (5) நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் யார் யார் பேசுகிறார்கள் என்பது         தெளிவாக உணர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

    (6) ஏதாவது ஒரு காட்சியில் நிறையப் பாத்திரங்கள் இடம்பெற்றால் குரலால் அடையாளம் காணும் வகையில் தெளிவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    (7) எந்த இடத்தில் ஒரு காட்சியின் கதை நிகழ்கிறது என்பது தெளிவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

    (8) நாடகத்தில் வருணனைகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும்.

    (9) சிக்கலுக்குத் தீர்வு சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

    (10) காட்சிகள் விறுவிறுப்புடன் செல்ல வேண்டும்.

    (11) காட்சியின் சூழ்நிலை உணர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

    (12) நாடகத்தின் வேகம் ஒரே சீராகச் செல்வதாக இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:05:28(இந்திய நேரம்)