தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10246-6.1 தொலைக்காட்சி

  • 6.1 தொலைக்காட்சி

    இன்று வீடுகள் தோறும் இடம்பெற்றுப் பல்வேறு பிரிவு மக்களையும் கவர்ந்து இழுக்கும் சாதனமான தொலைக்காட்சியின் வரலாற்றை முதலில் காணலாம்.

    6.1.1 இந்தியாவில் தொலைக்காட்சி

    தொலைக்காட்சி 1926ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு முதல் பி.பி.சி. நிறுவனம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. யுனெஸ்கோ உதவியால் 1959ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. விவசாய மேம்பாட்டுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் இது இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் டில்லியிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் ஒளிபரப்பு நிகழ்ந்தது. அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவாக இருந்த இது பின்னர்ப் பிரிக்கப்பட்டு 'தூர்தர்ஷன்' என்ற தனி அமைப்பாக ஆக்கப்பட்டது.

    6.1.2 தமிழகத்தில் தொலைக்காட்சி

    தமிழ்நாட்டில் சென்னையில் 1975ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 20 கிலோ மீட்டர் வரை ஒளிபரப்பு நிகழ்ந்தது. அடுத்த ஆண்டிலிருந்து 80 கிலோ மீட்டர் ஒளிபரப்பானது. 1987ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒளிபரப்பானது. 1992ஆம் ஆண்டு முதல் செயற்கைக் கோள் ஒளிபரப்புகள் தொடங்கின. அது முதல் எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்கிறது. தொடக்கத்தில் Television என்பதற்கு ‘படரேடியோ’, 'காட்சி வானொலி', ‘வானொளி’ என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது. பின்னர், தொலைபேசி என்பது போலத் ‘தொலைக்காட்சி’ என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

    6.1.3 வளர்ச்சி

    1976ஆம் ஆண்டு படத்தொகுப்பு (Editing) வசதி வந்தது. 1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக வண்ண ஒளிபரப்பு வசதி வந்தது. வெளிப்புறப் படப்பிடிப்பு வசதி வந்தது. ஒலிப்பதிவு (Dubbing) வசதி வந்தது. இந்த வசதிகளால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கல்வி வளர்ச்சிக்காகவும் விவசாய வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது. தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களும், தங்கள் தயாரிப்பை விளம்பரம் செய்ய விரும்பிய வியாபாரிகளும் இதற்குக் காரணமானவர்கள் எனலாம். பொதுவான நிகழ்ச்சிகளான நாடகங்கள் முதலானவற்றால் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை பெருகும் என்று கருதினார்கள். நாடக நிகழ்ச்சியை மக்கள் பலர் விரும்பிப் பார்ப்பதால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினார்கள்.

    6.1.4 நாடக அறிமுகம்

    மெக்ஸிகோ நாட்டில் ‘நாவெல்லா’ என்ற பெயரில் தொடர்கள் ஒளிபரப்பாயின. அதைப் பார்த்து இந்தியாவில் ‘ஹம்லோக்’, ‘புனியாத்’ முதலான இந்திமொழி நாடகத் தொடர்களை உருவாக்கி ஒளிபரப்பினார்கள். ‘ஹம்லோக்’ தொடரின் விளம்பரதாரர்களாக இருந்தவர்கள் நூடுல்ஸ் நிறுவனத்தார். இதனால் நூடுல்ஸ் விற்பனை பெருகியது. தொலைக்காட்சிப் பெட்டி விற்பனையும் பெருகியது. இந்த ஆற்றல் காரணமாகத் தொலைக்காட்சியில் நாடகங்களுக்கு மிகுதியான நேரம் ஒதுக்கப்பட்டது.

    6.1.5 மக்கள் ஊடகம்

    1977ஆம் ஆண்டில் அரசின் கட்டுப்பாடு தளர்ந்தது. தூர்தர்ஷனில் இரண்டாவது அலைவரிசைகள் தொடங்கப்பட்டன. செயற்கைக்கோள் ஒளிபரப்பு வந்த பின் முற்றிலும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்குச் சாதனமாகத் தொலைக்காட்சி ஆக்கப்பட்டுவிட்டது. இன்று அரசு சார் தொலைக்காட்சியில் மட்டுமே இலாப நோக்கு இல்லாத சமூக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஏனைய செயற்கைக்கோள் ஒளிபரப்புகளான ‘சன்’, ‘ராஜ்’, ‘விஜய்’, ‘ஜெயா’ முதலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் விளம்பர நிகழ்ச்சிகளையுமே மிகுதியாகக் கொண்டுள்ளன. மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியைக் கருதுகிறார்கள்.

    6.1.6 தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு

    தொடக்கத்தில் தூர்தர்ஷனில் மேடை நாடகங்களை அப்படியே ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பினார்கள். பின்னர், மேடை நாடகக் குழுக்களைக் கொண்டு தொலைக்காட்சி நிலைய அரங்கில் ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பினார்கள். பெரும்பாலும் அவை அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேர நாடகங்களாக இருந்தன. இந்தியிலிருந்த நாடகத் தொடர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டன. செயற்கைக்கோள் தொலைக்காட்சியினர் பல தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பினர். இந்த முறை தூர்தர்ஷனிலும் பின்பற்றப்பட்டது.

    6.1.7 நிலைபெறுதல்

    தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் உருவானார்கள். அவர்களில் பலர் திரைத்துறையையும் நாடகத் துறையையும் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் மேடை நாடகத் தன்மையைப் பெற்றிருந்த தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படத் தன்மையைப் பெற்றன. மேடை நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடைப்பட்ட ஒரு வடிவமாகத் தொலைக்காட்சி நாடகம் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:06:50(இந்திய நேரம்)